angusam 12/11/2015

p06d‘பேய் பஸ்ஸுல ஏறி சுடுகாட்டுக்குப் போனதாம்! கேள்விப்பட்டியா?’ – நாமக்கல் மாவட்டத்தில் எந்த பஸ்ஸில் ஏறினாலும் இதுதான் பேச்சு!

‘‘கடந்த வாரம் காட்டுப்புத்தூரில் இருந்து 4 ஆண்களோடு V3 பஸ் வந்தது. ஓலப்பாளையம் பிரிவு ரோட்டில் சும்மா தகதகன்னு வெள்ளை நிற சீலையுடன் தலை நிறைய மல்லிகைப் பூவுடன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பஸ்ஸில் ஏறியிருக்கிறார். பஸ்ஸில் இருந்த 4 பேரையும் பார்த்து அவர், கலகலன்னு சிரித்திருக்கிறார். எல்லாரும் ஜொள்ளுவிட்டபடி அந்தப் பெண்ணையே பார்த்திருக்காங்க. கண்டக்டர், அந்தப் பெண்ணை டிக்கெட் எடுக்கச் சொல்லி​யிருக்கிறார். ‘எனக்கே டிக்கெட்டா…’ என்ற இழுவையோடு கண்டக்டர் கன்னத்தில் முத்தம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் அந்தப்  பெண். அவ்வளவுதான்…

கண்டக்டர் பேய் அறைந்தமாதிரி ஆகிவிட்டார். அடுத்த 5 நிமிடத்தில் திருமணிமுத்தாறு சுடுகாடு வந்ததும், ‘டிரைவர் மாமா, என் இடம் வந்திருச்சு! நிறுத்துங்க… நிறுத்துங்க…’ என அந்தப் பெண் சொல்ல, ஸ்டாப் இல்லாததால் டிரைவர் நிறுத்தவில்லை. ஆனால், பஸ் தானாகவே அந்த இடத்தில் நின்றுவிட்டது. பின்னர் டிரைவரைப் பார்த்து, ‘டிரைவர் மாமா… போயிட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டு மாயமாக மறைந்துவிட்டார் அந்தப் பெண். அப்புறம்தான் தெரிந்தது அது பேய்னு. பஸ்ஸுக்கு சூடம் காட்டிய பிறகுதான் பஸ் ஸ்டார்ட் ஆனது. இதனால் ஊரே நடுங்கிட்டு இருக்கு. பகலில்கூட இந்த ரோட்டில் நடக்க பயப்படுறாங்க’’ என்கிறார் சிவலிங்கம். அவர் ஓலப்பாளையம் சுடுகாட்டுக்கு பக்கத்தில் குடியிருப்பவர்!

இதுபற்றி பிச்சையம்மாள், ‘‘எங்க சுற்று வட்டாரத்துல 30 வயசுல எந்தப் பிள்ளையும் சாகவில்லை. எந்த ஊரு பேய், எதுக்காக எங்க சுடுகாட்டுல வந்து இறங்கியதுன்னு தெரியவில்லை. ஊரே குழம்பிப் போய் கிடக்கிறோம். வேப்பிலை இல்லாமல் யாரும் வெளியே வருவதில்லை. இந்த ரோட்டுல போற பஸ், வேன், டூவீலரில்கூட வேப்பிலை கட்டிட்டுதான் போறாங்க. இருந்தாலும் V3 பஸ்ல ஏறுவதற்கே பயமா இருக்கு. போயிட்டு வர்றேன்னு பேய் சொல்லிருக்கு. மீண்டும் என்னைக்கு இந்த பஸ்ல ஏறுதுன்னு  தெரியலை’’ என்றார் பயந்தபடியே.

சம்பவத்தன்று பணியில் இருந்த டிரைவர் மாணிக்கம், ‘‘நீங்கள் கேள்விப்பட்டது எல்லாமே உண்மைதான். அதை ஏன் இப்ப கேட்டு கிளறுறீங்க? நாங்க நல்லா இருக்கிறது பிடிக்கலையா? இப்பதான் 3 லட்சம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்திருக்கிறோம். கொடுத்த பணத்துக்கு வட்டிகூட கட்ட முடியல. பஸ்ல பேய் ஏறிய விஷயம் எப்படியோ எங்க உயர் அதிகாரிகள் காதுக்குப் போயிடுச்சு. எங்களைக் கூப்பிட்டு ‘4 மாசம் சஸ்பென்ட் பண்ணிடுவோம்’னு திட்டினாங்க. நாங்க மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துட்டு வந்திருக்கிறோம்’’ என்றார் விரக்தியோடு.

திராவிடர் கழக நாமக்கல் நகர தலைவர் பெரியசாமி, ‘‘அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் பேய், பிசாசு, சாமி இருப்பதாக இன்னும் நம்பிக்கொண்டிருப்பது முட்டாள்தனமானது. காட்டுப்புத்தூரில் இருந்து ஓலப்பாளையம், நன்செய் இடையார் வழியாக வேலூருக்கு 5, 6 பேருந்துகள்தான் செல்கின்றன. அதிலும் பேய் ஏறியதாக சொல்லப்படும் V3 பஸ்தான் அந்தக் கிராமங்கள் வழியாக செல்லும் கடைசி பஸ். இரவு 10.15 மணிக்குச் செல்வதால் அதில் 3 அல்லது 4 பேர்தான் பயணிப்பார்கள். கலெக்‌ஷன் இல்லை என்பதால், அந்த பஸ்ஸை நிறுத்திவிடலாம் என்று போக்குவரத்துத் துறையே கிளப்பிவிட்ட புரளிதான் இது என்று நான் கேள்விப்பட்டேன். இதேபோன்று 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் தலையில்லாத ஒருவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போனதாகப் பரப்பிவிட்டார்கள். அடுத்த வாரத்தில் ஓலப்பாளையம் பகுதிகளில் மூடநம்பிக்கைக்கு எதிராக ஒரு விழிப்பு உணர்வு கூட்டம் நடத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். மூடநம்பிக்கைகளை பரப்புபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்றார்.

அரசுப் போக்குவரத்துக் கழக நாமக்கல் கிளை மேலாளர் ராஜா, ‘‘இது முழுக்க முழுக்க புரளி. சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநரிடம் நாங்கள் முழுமையாக விசாரணை நடத்திவிட்டோம். இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி. இந்தக் காலத்தில் பேய் இருப்பதாகச் சொல்வது எல்லாம் பொய். மற்றபடி இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம்’’ என்றார் உறுதியுடன்.

நன்றி – விகடன்

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*