5ஏரிகள் உடைக்கப்பட்டதால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு- ஹெலிகாப்டர், படகுகள் முலமாக மீட்பு பணிகள் தீவிரம்.

மீட்புமழைநீர் சூழ்ந்துள்ளதால் தாம்பரம் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் பட்டு வருகின்றனர். கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், கோவிலம் பாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், கேம்ப்ரோடு, சேலையூர், சிட்லபாக்கம், கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம், பல்லாவரம், பெரும்புதூர் போன்ற பகுதிகள் மழை நீரில் மிதக்கின்றன.

சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் மற்றும் பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 91 ஏரிகளும் நிரம்பிவிட்டன. கிழக்கு தாம்பரம் ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, மேற்கு தாம்பரம் மண்ணிவாக்கம் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, பல்லாவரம் ஏரி, திருநீர்மலை வீரராகவன் ஏரி ஆகியவை உடைக்கப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தாம்பரம், பெருங்களத்தூர், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. கிஷ்கிந்தா சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை படகுகள், ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

கிழக்கு தாம்பரம் சேலையூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி வருவதால், வேளச்சேரி நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடுகிறது. இதனால் சேலையூர், ஆதிநகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாராயணபுரம், வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் சாலைகளில் கார் மூழ்கும் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. பஸ்கள் மட்டும் மெதுவாக செல்கின்றன. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்படும் பஸ்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கார்கள், பைக்குகளில் செல்பவர்களால் வேளச்சேரியை தாண்டிச் செல்ல முடியவில்லை. வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். மழைநீர் அதிகம் தேங்கியுள்ளதால் வேளச்சேரி-தாம்பரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம் சானடோரியம் அரசு நெஞ்சகநோய் மருத்துவமனை மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவின்படி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தாம்பரம் கிருஷ்ணாநகர், முடிச்சூர் பகுதிகளில் 2 ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிரி ழந்தவர்கள் யார் என்பது பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.