1 லட்சத்து 06 ஆயிரத்து 145 கோடி கிரானைட் முறைகேட்டில் கொள்ளை -அதிர வைக்கும் சகாயம் அறிக்கை

FB_IMG_1448306159689 கிரானைட் முறைகேட்டில் 1,06,145 கோடி கொள்ளை  அதிர வைக்கும் சகாயம் அறிக்கை சென்னைகோர்ட்டில் தாக்கல் சிபிஐ விசாரணை, தனி நீதிமன்றத்துக்கு பரிந்துரை

 

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேட்டில் ரூ.1.06,145 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், சிபிஐ விசாரணைக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.

 

சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஏராளமான கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகளிலும் கிரானைட் கற்களை சட்டவிரோதமாக பலர் வெட்டி எடுத்துள்ளனர்.

 

இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து சகாயம் ஐஏஎஸ் தலைமையில் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர், மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி உத்தவிட்டனர். இதையடுத்து, சகாயம் தலைமையிலான கமிட்டி, மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தது.

 

இந்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய பலமுறை சகாயம் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு ஐகோர்ட்டும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தன்னுடைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட்டில் நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது, சகாயம் தரப்பு வக்கீல் சுரேஷ் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

 

அந்த அறிக்கை 600 பக்கங்கள் கொண்டது. விசாரணை தொடர்பான 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களும், அதற்கான சிடி ஆதாரங்களும் அறிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வக்கீல் சுரேஷ் மனு ஒன்றை தாக்கல் செய்து வாதிட்டார்.

 

அப்போது அவர், ‘கிரானைட் முறைகேட்டை வெளிக்கொண்டு வந்த முன்னாள் மற்றும் தற்போதைய அரசு அதிகாரிகள், சாட்சியம் அளித்த பொதுமக்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

 

இந்தக் குழு, தனது பணியை முழுமையாக முடிக்க நான்கு வாரம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். விசாரணை குழுவுக்கு செலவான தொகை ரூ.5 லட்சத்தை கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

உடனே, அட்வகேட் ஜெனரல் ஏ.எல். சோமையாஜி குறுக்கிட்டு, பொதுவாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினால் எப்படி பாதுகாப்பு கொடுப்பது என்று ஆட்சேபனை தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து, வக்கீல் சுரேஷ் வாதாடுகையில், ”இந்த முறைகேடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. இதில் அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலரின் பங்கு உள்ளது. பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த புலன் விசாரணையை மேற்கொள்ள நேர்மையான உயர் போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்க வேண்டும். இதில் அனைத்துத் துறை சார்ந்த நிபுணர்கள் இடம்பெற வேண்டும்.

 

இந்த விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும். கனிமவள முறைகேடுகள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட் ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சகாயம் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அரசு அதிகாரிகள், பொது நல ஆர்வலர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

 

ஐகோர்ட் நியமித்த சட்ட ஆணையாளர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை தமிழக அரசின் தலைமை வக்கீல் வசம் ஒப்படைக்க வேண்டும். அறிக்கையை ஆய்வு செய்ய அட்வகேட் ஜெனரல் கால அவகாசம் கேட்டார். அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. விசாரணை குழுவை கலைப்பதற்கு நான்கு வாரம் கால அவகாசம் கேட்கப்பட்டது. அது ஏற்கப்படுகிறது. சகாயம் கேட்ட ரூ.5 லட்சத்தை தமிழக அரசு ஒரு வாரத்தில் கொடுக்க வேண்டும். சிறப்பு அதிகாரி சகாயத்துக்கு உதவிய அரசு அதிகாரிகள், வாக்கு மூலம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதிகாரிகள், ஊழலை அம்பலப்படுத்தியவர்கள், பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது. அதுபற்றி சிறப்பு அதிகாரி பாதுகாப்பு கேட்டால், அரசு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அரசுத் துறையிடம் இருந்து விசாரணைக்கு பெறப்பட்ட ஆவணங்கள் மேல் நடவடிக்கைக்கு தேவையில்லை என்றால், அதை அந்தந்த துறைகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். மற்ற ஆவணங்களை ஐகோர்ட் பதிவுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த ஆவணங்களை யார் வசம் ஒப்படைப்பது என்பதை பிறகு முடிவு செய்து கொள்ளலாம். மேலும், இந்த ஆவணங்களில் ஆய்வு செய்ய தேவை என்று அரசு விரும்பினால், அதை கோர்ட் பதிவாளரிடம் கேட்டு பெறலாம். இந்த விசாரணையை திறம்பட செய்து முடித்த சட்ட ஆணையாளர் சகாயத்துக்கு கோர்ட் பாராட்டு தெரிவிக்கிறது. இந்த உத்தரவின் நகலை மத்திய அமலாக்கத் துறை இயக்குனருக்கு, தமிழக அரசின் கனிமவளத் துறைச் செயலாளர் கொடுக்க வேண்டும். வழக்கு விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

 

இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த வழக்கு பற்றி வழக்கறிஞர்கள்,

 

‘சகாயம் அறிக்கை அரசுக்கு தரப்பட்டது. அதில் கிரானைட் குவாரி முறைகேடு குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கிரானைட் குவாரி முறைகேட்டினால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 145 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது’ என்றார்.

 

சகாயத்தின் வக்கீல் சுரேஷ்,

‘முறைகேடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்துள்ளது. இந்த முறைகேட்டில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே உரிய பாதுகாப்பு கேட்டுள்ளோம். இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். இதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதன்மூலம் தான் உண்மையான நபர்கள் தண்டிக்கப்படுவார்கள். மொத்தம் 22 பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

 

அறிக்கை தாக்கல் செய்ய  சகாயம் நீதிமன்றத்தில் ஆஜரானதால் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *