புதுக்கோட்டை அருகே அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு

புதுக்கோட்டை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கி வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

அரசு பஸ்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று புறப்பட்டு திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை காரைக்குடி ஸ்ரீராம்நகரை சேர்ந்த டிரைவர் பாண்டிக்குமார் (வயது 50) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக காரைக்குடி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் இருந்தார். நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் அரசு பஸ் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு திருச்சியை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

டிரைவர் மீது

இந்த நிலையில் அரசு பஸ் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தபோது புதுக்கோட்டை மருதுபாண்டி நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஞானசேகரன் (25) அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றார். அப்போது அரசு பஸ் டிரைவர் மோட்டார் சைக்கிளில் சென்ற ஞானசேகரனை அனைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகரன் பஸ்சை முந்தி சென்று இது குறித்து டிரைவர் பாண்டிக்குமாரிடம் கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து டிரைவர் பஸ்சை எடுத்து கொண்டு திருச்சி நோக்கி புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த ஞானசேகரன் புதுக்கோட்டை அருகே உள்ள தாவூத்மில் பகுதியில் வைத்து கல்லால் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தார்.

வாலிபர் தற்கொலை முயற்சி

இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி இது குறித்து ஞானசேகரனிடம் கேட்டு உள்ளார். அப்போது ஞானசேகரன் தான் வைத்திருந்த கல்லால் பாண்டிக்குமாரை தாக்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஞானசேகரனை மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து ஞானசேகரன் அங்கே கிடந்த பாட்டலை உடைத்து கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து காயமடைந்த பாண்டிக்குமார் மற்றும் ஞானசேகரனை அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் ஞானசேகரன் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து பஸ் டிரைவர் பாண்டிக்குமார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *