johnhatton61986 04/08/2016

கந்தர்வகோட்டை அருகே நிலத்தகராறில் தந்தை–மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலத்தகராறு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கோவிலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜானகி ராமன் (வயது 47). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பவருக்கும், கடந்த சில வருடங்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் நிலத்தகராறு சம்பந்தமாக ஜானகிராமனுக்கும், ராஜேந்திரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அவரது மகன் பிரவின்குமார் (23) ஆகியோர் சேர்ந்து, ஜானகிராமனை தலையில் அரிவாளால் வெட்டினர். மேலும் இதனை தடுக்க வந்த ஜானகிராமனின் மகன் ராஜராஜன் (18) என்பவருக்கும் தலை மற்றும் கை பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தனர். இதைக்கண்ட ராஜேந்திரன், அவரது மகன் பிரவின்குமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் ஜானகிராமன், ராஜராஜன் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில், கந்தர்வகோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து தந்தை–மகனை அரிவாளால் வெட்டிய ராஜேந்திரன், பிரவின்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் தந்தை–மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் கந்தர்வகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*