அரூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்

அரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி காண்டிராக்டர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

காண்டிராக்டர் சாவு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பழையபேட்டையை சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் சிவா (வயது27). காண்டிராக்டர். இவருடைய நண்பர் கோபி (25). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக தீர்த்தமலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வேன் ஒன்று எதிரே வந்து கொண்டு இருந்தது. கீழானூர் அருகே உள்ள வாலெடுப்பு என்ற இடத்தில் வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிவா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

அவருடைய நண்பர் கோபி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் அரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கோபியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து விபத்தில் இறந்த சிவாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *