jefferywinneke 19/08/2016

திருச்சி விமான நிலையத்தில், மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ 986 கிராம் தங்க நகைகளும், சிங்கப்பூர் கொண்டு செல்ல முயன்ற 16.28 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளும் ரூபாய் நோட்டுகளும் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

மலேசியாவிலிருந்து சென்னை வழியாக திருச்சி வந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வியாழக்கிழமை அதிகாலை 2.20 மணிக்கு திருச்சி வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு (டிஆர்ஐ) அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் முகாமிட்டிருந்தனர்.

விமான பயணிகளிடம் அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சிவகங்கையைச் சேர்ந்த பக்ருதீன் மற்றும் ஒரு பெண் ஆகியோர் உள்ளிட்ட 7 பேர் மொத்தம் 3 கிலோ 986 கிராம் தங்க நகைகள் மற்றும் கட்டிகளை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 1.25 கோடியாகும். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரூ. 16.28 லட்சம் கரன்சிகள்: அதே விமானத்தில் திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்ல முயன்ற சென்னை ஆலந்தூர் மாதவபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஷே. பீர்முகமது, மற்றும் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தைச் சேர்ந்த வ. அப்பாஸ் ஆகியோரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், அவர்கள் 12.22 லட்சம் ரியால் மற்றும் 4.6 லட்சம் அமெரிக்கன் டாலர் என மொத்தம் 16.28 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்களை (கரன்சி) கடத்தவிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*