jefferywinneke 19/08/2016

மணப்பாறையில் பேருந்துக்கு காத்திருந்தபோது மர்ம நபர்கள் வேனில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். அவர் கடத்தப்பட்டாரா? என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பண்ணப்பட்டி ஊராட்சி, கீழஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாயியான இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகள் ஜமுனா திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில்

படித்து வருகிறார். அவர் தினசரி பக்கத்து ஊரான காவல்காரன்பட்டிக்கு சென்று, அங்கிருந்து கல்லூரிப் பேருந்தில் சென்றுவந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல் வியாழக்கிழமை காலை தனது தம்பி மணிகண்டனுடன் இருசக்கர வாகனத்தில் காவல்காரன்பட்டி பேருந்து நிலையத்துக்கு சென்றார்.  மணிகண்டன் வீடு திரும்பிய நிலையில் கல்லூரி பேருந்திற்கு காத்திருந்தார் ஜமுனா. அப்போது, அங்கு ஆம்னிவேனில் வந்த மூன்று பேர் ஜமுனாவை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனராம்.

இதுகுறித்து புத்தாநத்தம் காவல் நிலையத்தில் பெருமாள் புகார் அளித்தார். அதன்பேரில், மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் கீதா, காவல் ஆய்வாளர் பழனிமுத்து ஆகியோர் தலைமையிலான போலீஸார், ஜமுனாவை தேடி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக ஜமுனா கடத்தப்பட்டாரா அல்லது சிவக்குமார் என்பவர் பெண் கேட்டு வந்தபோது, அவருக்கு பெண் தர மறுத்ததால் ஆத்திரத்தில் அவர் கடத்தி சென்றாரா, காதல் பிரச்னை ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*