angusam 22/08/2016

தெலங்கானா மாநிலம், ஹைராபாத்தில் வசிக்கும் பி.வி.சிந்துவின் குடும்பம்இயற்கையாகவே விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டது.

சப் ஜூனியர், ஜூனியர் பிரிவுகளில் அசத்திக் கொண்டிருந்த சிந்து ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் யூத் கேம்ஸ், தெற்காசிய போட்டிகள், ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸ் என பங்கேற்ற அனைத்து தொடரிலும் ஏதாவது ஒரு பதக்கம் தட்டினார். இதையெல்லாம் விட, உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இருமுறை வெண்கலம் வென்றதும், யார் அந்த சிந்து என உலகம் உற்று நோக்கியது.

’டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’ என்று சொல்வார்களே சிந்துவும் அப்படித்தான். பயிற்சியாளர் சொல்வதை அப்படியே கேட்கும் வீராங்கனை. அமைதியாக இருந்தவரை, ‘களத்தில் நீ அப்பட்டமாக உணர்வுகளை வெளிப்படுத்தாதவரை ராக்கெட்டை கையில் தொடக் கூடாது’ என ஆக்ரோஷமாக மாற்றியவர் பயிற்சியாளர் கோபிசந்த். இதற்காக யாருமற்ற களத்தில் தன்னந்தனியாக அழுத சிந்து, இன்று நம்மை சிரிக்க வைத்திருக்கிறார். தேங்க்ஸ் டூ கோபிசந்த். p.v-sindhu

கோபிசந்த் பாசறையில் பாடம் பயின்ற யாரும் சோடை போகவில்லை. அவர் பயிற்சி அப்படி இருக்கும் என வியக்கிறார், தமிழக பேட்மின்டன் சங்க துணைத் தலைவரும், இந்திய பேட்மின்டன் பயிற்சியாளருமான மாறன். அதற்கு ஒரு உதாரணம். கடந்த ஆண்டு சிந்து காயத்தால் அவதிப்பட்டார். எழுந்து நடக்க முடியாத நிலை. ஆனாலும் கோபிசந்த் விடவில்லை. சிந்துவை ஒரு வீல் சேரில் அமர்த்தி, அந்த சேரை களத்தின் நடுவே நிறுத்தினார். எதிர்முனையில் கோபிசந்த் நின்று கொண்டு ஒவ்வொரு ஷட்டிலாக த்ரோ செய்ய, செய்ய, உட்கார்ந்த நிலையிலேயே ஷாட் அடித்து பயின்றார் சிந்து. பயிற்றுவித்தார் கோபிசந்த்.

‘சிந்துவை எனக்கு 13 வயதில் இருந்து தெரியும். ஆரம்பத்தில் குழந்தைத்தனமாக இருந்தார். நாளாக நாளாக மெச்சூரிட்டியாகி விட்டார். உயரமானவர் என்பதால், எகிறி ஸ்மாஷ் அடிப்பது அவருக்கு கை வந்த கலை. நெட் டூ நெட் நின்று டிரிபிளிங் செய்வதில் கில்லி. இதில் தேர்வதற்காக மட்டுமே, ஒவ்வொரு நாளும் வழக்கமான பயிற்சிக்குப்பின், 4,000 முறை ஷட்டில் த்ரோ செய்து பயிற்சி கொடுப்போம். அசராமல் சொன்னதை கேட்பார். ஒருமுறை கூட முகம் சுழித்ததில்லை. இன்று அவர் அடைந்த வெற்றிக்கு இதுதான் காரணம்’ என அடுக்குகிறார் மாறன்.

pv-sindhu_சிந்து இன்று இந்த இடத்தில் நிற்பதற்கு காரணம் அவரது பெற்றோர். ஒலிம்பிக் துவங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ரயில்வேயில் இருந்து விடுப்பு எடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கான சாத்தியக் கூறுகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து, பார்த்து செய்து வருகிறார் சிந்துவின் தந்தை ரமணா. டயட்டில் இருந்து பயிற்சி இதர விஷயங்களை ஷெட்யூல் போட்டு பக்கவாக பார்த்துக் கொண்டார் அவர் தாய். களத்தில் டெக்னிக்கல் ரீதியாக, களத்துக்கு வெளியே மன ரீதியாக உற்சாகப்படுத்தினார் கோபிசந்த். அதற்கெல்லாம் இன்று கிடைத்த பரிசுதான் இந்த வெள்ளிப் பதக்கம்.

தந்தை பி.வி.ரமணா முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர். கைப்பந்து போட்டிக்கு அளித்த பங்களிப்புக்காக அர்ஜூனா விருது பெற்றவர்.

தாயார் பி.விஜயாவும் கைப்பந்து வீராங்கனைதான்.
விஜயா, விஜயவாடாவில் பிறந்தாலும் சில ஆண்டுகள் குடும்பத்தினருடன் சென்னைதியாகராயநகரில் வசித்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே விஜயா முடித்தார். தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக 1977 ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை தேசிய போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள்.

மூத்த மகள் திவ்யா டாக்டர். கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்டார்.

 2-வது மகள் தான் பி.வி.சிந்து.

சிந்துவின் தாத்தா பிரம்மய்யா தெலுங்குப் பட தயாரிப்பாளர் ஆவார்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*