​முண்டாசு கட்டுடன்  ரோட்டோர மர நிழலில்  உணவு சாப்பிட்ட விஜயகாந்த்


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மனைவி பிரேமலதாவுடன் நேற்று கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் சென்னிமலை வழியாக மதுரைக்கு காரில் புறப்பட்டு சென்றார். மதியம் 2.30 மணி அளவில் சென்னிமலை அடுத்த நொய்யல் ஆற்றின் கரையோரம் வந்த விஜயகாந்த ரோட்டோரம் உள்ள ஒரு வீட்டின் முன் உள்ள தென்னை மர நிழலில் நிறுத்த சொன்னார்.
வீட்டின் முன் தென்னை மர நிழலில் அவரும் மனைவி பிரேமலதா மற்றும் அவர்களுடன் வந்தவர்களும் நின்று கொண்டு மதிய உணவு சாப்பிட தொடங்கினார்.
தலையில் கிராமப்புற வாசியாக விஜயகாந்த் முண்டாசு கட்டி கொண்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு பாக்கு மட்டை தட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்றவர்களும் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் விஜயகாந்தை அடையாளம் தெரியவில்லை.
ரோட்டோரம் நின்று வழிப்போக்கர்கள் சாப்பிடுகிறார்கள் என நினைத்து கொண்டு போனார்கள்.
இதற்கிடையே ரோட்டோரம் உள்ள வீட்டுக்கு சொந்தக்காரரான விவசாயி முருகேஷ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் சென்னிமலை டவுனுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
தனது வீட்டு முன் கார்கள் நின்று கொண்டிருப்பதையும் சிலர் சாப்பிட்டு கொண்டிருப்பதையும் கண்ட விவசாயி முருகேஷ் வேட்டியை மடித்து தலையில் முண்டாசு கட்டுடன் இருந்த விஜயகாந்திடம் ‘‘யார் நீங்க…?’’ என்று கேட்டார்.
உடனே விஜயகாந்த் தலையில் கட்டி இருந்த முண்டாசு கட்டை அவிழ்க்க அங்கு நிற்பது விஜயகாந்த் என அறிந்ததும் முருகேஷ் பதறினார்.

ஏன் வெளியே நிற்கிறீங்க… வீட்டுக்குள் வர வேண்டியது தானே…? என்று அவர் கேட்க அதற்கு விஜயகாந்த் ‘‘மதுரை போகிறோம். இங்கு நிழலாக இருந்ததால் நின்று கொண்டு சாப்பிட்டோம். உங்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என சாப்பிட்ட பாக்கு தட்டுகளை அருகே உள்ள குழியில் போட்டோம்’’ என்று கூறினார்.
எனினும் விவசாயி முருகேஷ் ‘‘பராவாயில்லை வீட்டுக்குள் வாங்க கொஞ்சம் ஓய்வு எடுத்து கொண்டு போகலாம்’’ என அழைத்தார்.
விவசாயி வேண்டுகோளை ஏற்று விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் வீட்டில் சிறிது நேரம் இருந்து விட்டு அவருக்கு கொஞ்ச பணமும் கொடுத்து விட்டு புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *