திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம் இரண்டாக உடைந்த ரகசியம்
திருச்சிராப்பள்ளியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை, சண்டை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ( பதிவு எண்50/2000 ) ஏற்படுத்தப்பட்டு வழக்கறிஞர் ராஜேஸ்வரி, வழக்கறிஞர் ஜெயந்தி ராணி, வழக்கறிஞர் செல்லம் தமிழரசன், வழக்கறிஞர் நிர்மலா உள்ளிட்டோர் தலைவர் பொறுப்பை வகித்தனர்.
நிர்மலா தலைமை பொறுப்பு ஏற்கும் போது வாக்களித்து தேர்வு செய்யப்பட்டார். பிறத் தலைமை தேர்வானது ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டவர்களே பொறுப்பு வகித்தார்கள்.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாக குழு தேர்வு செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில் 2015 ஆண்டு தலைமை வகித்த வழக்கறிஞர் ஜெயந்தி ராணி மறு தேர்தல் நடத்தாமல் பதவிக்காலம் முடிந்தும் பதவியினை தொடர்ந்துள்ளார்.
மேலும் நிர்வாக குழுவில் செயலராக பொறுப்பு வகித்த விஜயமணி , பொருளராக பொறுப்பு வகித்த லெஷ்மி உள்ளிட்டோர் அரசு பணிக்கு சென்று இரண்டு ஆண்டுகளாகியும் யாரையம் அந்த பொறுப்பில் நியமிக்க வில்லை.
சங்க நடைமுறைப்படி பதவிக்காலம் முடிந்தவுடன் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். அது மட்டுமின்றி சங்கம் செயற்குழு கூட்டம் கூட்ட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டுப் பொதுக் கூட்டத்தினை அனைத்து சங்க உறுப்பினர்களையும் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை பொதுக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
மேலும் சங்கம் பராமரித்து வரவேண்டிய நிகழ்ச்சி குறிப்பு பதிவேடுகள், வரவு, செலவு , இருப்பு விவர ரொக்கப் பதிவேடு , பற்றுச் சீட்டுப் புத்தகம், பேரேடு், மாதாந்திரப் பதிவேடு , கடிதப் போக்குவரத்துக் கோப்புகள், கணக்குகள் வரவுத் தொகை பதிவேடுகள் சங்கத்தின் ஒவ்வொரு நிதியாண்டு முடிந்ததும் நிதியாண்டின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வரவு, செலவு அறிக்கை, இருப்பு நிலைக் கணக்கு ஏடு முதலியன தணிக்கையாளரால் அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆண்டு பொதுக் கூட்டத்தில் நிதியாண்டு முடிந்த ஆறு மாதத்திற்குள் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகாரம் பெற வேண்டும்.
இவற்றை சங்க உறுப்பினரகள் பார்வையிடலாம். மேலும் சங்க உறுப்பினர்கள் பட்டியல், புதிதாக சேர்த்த அல்லது நீக்கப்பட்டவர்கள் பட்டியல், சந்தா செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் பட்டியல் உள்ளிட்டவற்றை பராமரித்து தமிழ்நாடு சங்க பதிவு சட்ட படி பதிவாளர் வசம் தாக்கல் செய்ய வேண்டும். இதுவே சங்க நடை என்கிறார்கள்.
சங்க நடைமுறைப்படி பதவிக் காலம் முடிந்து தேர்தல் நடத்தாமல் இருந்த காரணத்தினாலும், விடுபட்ட நிர்வாகிகளை நியமிக்காத காரணத்தினாலும் நடைமுறைப்படியே பொறுப்பில் உள்ளவர்கள் அதிகார மற்றவர்களாகி விடுவர்கள்.
இந்நிலையில் புதிததாக சங்க உறுப்பினர்களை சேர்த்து முன்னாள் தலைவர் ராஜேஸ்வரியை பொறுப்பாளராக நியமித்து பெண் வழக்கறிஞர்கள் தலைவர் ஜெயந்தி ராணி துணைத் தலைவர் ராஜலெட்சுமி உள்ளிட்டோர்க்கு ஆவணங்களை ஒப்படைக்கக் கோரி பதிவு தபால் அனுப்பினர்.
எவ்வித பதிலும் வராத நிலையில் 01.04.2016 தேதியன்று விஜயாபாபு தலைவராகவும், சித்ரா துணைத் தலைவராகவும், ஸ்ரீதேவி செயலராகவும், சுதா, கனிமொழி உள்ளிட்டோர் துணைச் செயலராகவும் , இமயவள்ளி பொருளராகவும் தற்காலிகமாக நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்து அறிவித்திருக்கிறார்கள்.
அலுவலக உதவிக்கு 12 வழக்கறிஞர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
2016 ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்த கமலா கஸ்தூரியை தேர்தல் அலுவலராக நியமித்தனர்.
2016 – 2018 சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் 28.4.2016 நடத்தப்பட்டு பத்மாராமநாதன் தலைவராகவும் , சித்ரா துணைத் தலைவராகவும் , சாந்தி செயலராகவும், ஸ்ரீதேவி துணைச் செயலராகவும் , மெஹராஜ் பொருளராகவும், சுதா துணை பொருளராகவும் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் பொறுப்பாளர் கமலா கஸ்தூரி அறிவிக்கிறார்.
இந்நிலையில் செயலர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பிறகு சமரசம் செய்து கொள்கிறார்கள். புதிய நிர்வாகிகள் பலமுறை ஆவணங்கள் கேட்டும் வழங்காத நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சங்கத்திலுள்ள பீரோ வழக்கறிஞர்கள் முன்னிலையில் திறக்கப்படுகிறது.
சங்க ஆவணங்கள் எதுவும் பீரோவில் இல்லை. 04.02.2017 அன்று முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசனை சிறப்பு விருந்தினராக அழைத்து வெள்ளிவிழா நிகழ்வினை நடத்தினார்கள்.
அப்பொழுது வரலாறு தெரியாதவர்கள் நடத்தும் விழா என இந்த விழா குறித்து சர்ச்சை கிளம்ப இதை இப்படியே விடக்கூடாது என்று 17.03.2017 அன்று முன்னாள் நிர்வாகிகள் சங்க அலுவலகத்திற்கு வந்து பேச்சு வார்த்தை பேச சர்ச்சையான விஷயங்கள் சண்டையாக மாறும் அளவிற்கு சென்றது தான் தற்போது இந்த பிரச்சனை வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
இச்சம்பவத்தின் போது நேரலையாக படம் பிடித்த பெண் வெளியேற்றப்பட்டுள்ளார் .
இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளராக இருந்த கமலாகஸ்தூரி ஒரு வருடம் கடந்த நிலையில் 21.03.2017 அன்று பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக செல்லம்தமிழரசனும் செயலராக ஜெயந்திராணியும், பொருளராக ராஜலெட்சுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என அறிவித்துள்ளார்.
தற்போது சங்கம் இரண்டாக உள்ளது.
சங்கப்பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் இன்னோரு பிரச்சனை நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அது என்னான்னு கேக்குறீங்களா – திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சிலரை குறிவைத்து கடந்த சில வருடங்களாக சில சீசீ… சமாச்சார கடிதங்கள் வெளியாகி வழக்கறிஞர்கள் பலரை மன வேதனைக்குள்ளாகி உள்ள சம்பங்கள் குறித்து நிரந்தர தீர்வு வேண்டும் என்று வழக்கறிஞர்கள் ஒரே அணியாக இணைந்திருக்கிறார்கள். என்பது சந்தோசமாக விசயம் தான். இது பற்றி விரிவாக பிறகு பேசுவோம்..