angusam 26/04/2017

பார்வை பழுதுபட்ட நால்வர், யானையை தொட்டு பார்த்து விவரித்த கதை தான் 2ஜி – 2ஜி விசாரணையில் ராசா வாதம்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா இறுதி வாதம் ‘‘நான் எடுத்த முடிவுகளால் செல்போன் கட்டணம் குறைந்தது’’

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா இறுதி வாதம்

நான் எடுத்த முடிவுகளால் செல்போன் கட்டணம் குறைந்தது

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா இறுதி வாதம் செய்தார். சி.பி.ஐ. தரப்பு இறுதி வாதத்துக்கு பிறகு இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட உள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில், மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு விசாரணை நடந்து வருகிறது.

சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான வாதத்தை அரசு தரப்பில் தாக்கல் செய்திருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதத்தை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, ஆ.ராசா நேற்று 184 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். பிறகு, தனக்காக அவரே வாதாடினார். அவர் கூறியதாவது:–

 

பார்வை பழுதுபட்ட நால்வர், யானையை தொட்டு பார்த்து விவரித்த கதையாக 2ஜி வழக்கு, கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், மத்திய தணிக்கை அலுவலர், பாராளுமன்ற கூட்டுக்குழு, சி.பி.ஐ. ஆகிய நிறுவனங்கள் போதிய பார்வையும், புரிதலும் இன்றி 2ஜி குறித்த தங்களின் நிலைப்பாட்டால் என் மீது இவ்வழக்கு புனையப்பட்டுள்ளது. இத்தனைக்கு பிறகும், பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் மவுனம் காக்கின்றன.

 

  1. வழக்கில் சம்பந்தப்பட்ட சுவான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள், எதிர் எதிரான போட்டி நிறுவனங்கள். அவை எப்படி ஒரே நேரத்தில் குற்றச்சதியில் ஈடுபட முடியும்?

 

  1. 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவது தொடர்பாக நான் எடுத்த நிலைப்பாடு, சுவான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு எதிரானது. எனவே, அந்த நிறுவனங்களோடு நான் எப்படி கூட்டுச்சதி செய்வது சாத்தியமாகும்?

 

  1. இந்த நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்க ரகசியமாக சதி செய்ததாக சி.பி.ஐ. கூறுகிறது. இதுதொடர்பான தகவல்களை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், அப்போதைய மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், பரத்வாஜ் ஆகியோருக்கு கடிதம் மற்றும் கோப்பு வாயிலாக நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். இதில் ரகசிய குற்றச்சதி எங்கிருந்து வரும்?

 

  1. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைப்படி, அலைவரிசை ஏலம் இல்லை என்பதும், நுழைவுக்கட்டணத்தில் மாற்றம் இல்லை என்பதும் சரியான முடிவுதான் என்று பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளித்த பிறகும், அந்த பரிந்துரைகளை நான் செயல்படுத்தியது எப்படி அதிகார துஷ்பிரயோகம் ஆகும்?

 

  1. நான் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரரோ, நிர்வாகியோ அல்ல. அப்படிப்பட்ட நிலையில், அந்த தொலைக்காட்சிக்கு சுவான் நிறுவனம் தொடர்புடைய நிறுவனங்கள் கொடுத்த கடன் தொகையை, எனக்கு வழங்கப்பட்ட லஞ்சமாக கருத சட்டம் இடம் அளிக்குமா?

இந்த வழக்கில், நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சட்டப்படி சரியானவையே. நாட்டின் தொலைத்தொடர்பு அடர்த்தியை கணிசமாக உயர்த்துவதற்கும், கட்டண குறைப்புக்கும் காரணமாக அமைந்தன. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள், ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் பொய்யானவை.

இவ்வாறு ஆ.ராசா வாதாடினார்.

 

சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஆனந்த் குரோவர், வருகிற 27–ந் தேதிக்குள் தனது இறுதி வாதங்களை முடித்துக்கொள்வதாக கோர்ட்டில் தெரிவித்தார். அதை நீதிபதி ஓ.பி.சைனி ஏற்றுக்கொண்டார்.

சி.பி.ஐ. தரப்பின் இறுதி வாதத்துக்கு பிறகு, தீர்ப்பு ஒத்திவைக்கப்படும்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*