angusam 03/05/2017

குழந்தைகளின் புன்னகையில் கஷ்டங்கள் கரைந்து போகிறது –

மனம் திறந்த குழந்தைகள் நல திட்ட இயக்குநர்

“சியர்ஸ் திட்ட இயக்குநர் பெர்லின்.

நம்முடைய குழந்தைகளையே கவனிக்க நமக்கு நேரமில்லை. ஆனாலும் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை கண்டுபிடித்து அந்தக் குழந்தைகளுக்கு உதவவது எவ்வளவு சிரமம். இந்தப் பணிக்காக  தனது குடும்ப வாழ்க்கையையே தியாகம் செய்துவிட்டு, பலக் குழந்தைகளுக்கு கல்வி வழங்க காரணமாய் விளங்குகிறார் தமிழக அரசின் திட்டத்தின்கீழ் இயங்கும் “சியர்ஸ் திட்ட இயக்குநராக பணியாற்றி வரும்  பெர்லின்.

நம்ம திருச்சி இதழுக்காக நேரில் சந்தித்து பேசினோம்.

“அப்பா சத்தியநாதன் பெல் நிறுவன ஊழியர், அம்மா சரோஜினி.  1-ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரை ஒய்.டபிள்யு.சி.ஏவில் படித்தேன்.  அதன்பிறகு, 12வது வரை “பாய்லர் பிளான்ட்” பள்ளியில் படித்தேன், கல்லூரியில், எனக்கு பிடித்த சமூக பணித்துறையை தோ்வு செய்ய  ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் புனித சிலுவை கல்லுரியில் “மறுவாழ்வு அறிவியல்” படித்தேன். அதன்பிறகு MSW படித்து முடித்தேன். படிப்பு முடிந்த உடனே எனக்கு பாண்டிசேரியில் போதை தடுப்பு மையத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.  அந்த வேலையை ஆரம்பத்தில் எனது உறவினர்கள் வெறுத்தார்கள். ஆனாலும் நான் சேர்ந்தேன். போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களின் மன அழுத்தம், உளவியல் ரீதியான பாதிப்புகள் குறித்து, நான் அறிந்து கொள்ள எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

29.05.2017 நம்ம திருச்சி இதழில் வெளியானது.

பணிகள் மனநிறைவாக இருக்க, எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த எனது தந்தையின் மரணம். வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ச்சியும், பின்னடைவும் தந்தது. 3வருடம், விபத்தில் சிக்கி கோமாவில் இருந்த அப்பாவை கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். நானும் அம்மாவும் அப்பாவை பாதுகாத்து வந்தோம். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

அப்பாதான் எனக்கு ரோல் மாடல், இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என எனக்கு கற்று கொடுத்தவர். அவர்தான். அவரின் மறைவுக்கு பிறகு பொருளாதாரத்திலும் சரி, உளவியல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம். அதன்பிறகு எனது அண்ணன் சாமுவேல் பெல் நிறுவன பணியில் சேர்ந்தார். நான் விருப்பம் இல்லாத ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தில் வேலைக்கு சென்றேன்.

இதற்கிடையில் 2008-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் நான் வேலையை விடவேண்டிய சூழல், அந்த சமயத்தில் நாகை மாவட்டத்தில் எஸ்.ஓ.எஸ் என்ற குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கம் பணி நடைபெற்று கொண்டிருந்தது. 12வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அம்மா மற்றும் 10 குழந்தைகள் தங்கவைக்கப்பட்டனா். அதில் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இல்லை. வாழ்க்கையை இழந்த குழந்தைகளுக்கு கல்வி பணி செய்து வந்தேன். கூடவே  அவர்களின் திறமைகளை வெளி கொணர்ந்து அதற்க்கு ஏற்ற பயிற்சிகளை வழங்கினேன். இந்த பணி எனக்கு மனநிறைவை கொடுத்தது. ஒருவேளை என்னுடைய அப்பா உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக சந்தோசபட்டிருப்பார்.  ஆனால் என்னுடைய துரதிஷ்டம், கருத்துவேறுபாடு குடும்ப வாழ்க்கை நிலைக்கவில்லை. இதனால் பணியை விட்டேன். 1வருடம் மூளையில் முடங்கி கிடந்தேன்.

“சியர்ஸ் திட்ட இயக்குநர் பெர்லின்.

எனது அப்பா அடிக்கடி, “ஒரு பெண் சுதந்திரமாக வாழ கற்று கொள்ள வேண்டும்” எனச்சொல்லுவார். அதை நானும் விரும்பினேன். அதன்பிறகுதான் 2012ல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சியர்ஸ் எனும் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் குழந்தைகளோடு 5வருடங்களை கடந்துவிட்டேன். நாகையில் பணியாற்றிய அனுபவம் கை கொடுத்தது. ஆனால் இங்குள்ள குழந்தைகளுக்கு அம்மா .அப்பா இருந்தாலும் அவர்களை வேலைக்கு அனுப்பும் குழந்தைகளே அதிகம். அவா்களை மீட்டு பாதுகாப்பான கல்வி வழங்கி வருகிறோம். குழந்தைகளோடு நான் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் மேலாண்மையோடு சேர்ந்த பணி என்பது கொஞ்சம் கடினமாக இருந்தது.

இந்தப் பணியிலும் நான் சந்தித்த சோதனைகள் ஏராளம், நிறைய பிரச்சனைகளை கடந்துதான் பயணிக்க வேண்டி உள்ளது. பொதுவாகவே எனக்கு ஒரு பணியை 100சதவீதம் முழுமையாக செய்து முடிக்க வேண்டும். நாளை என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது என்று நினைப்பேன். குழந்தைகளோடு பணியாற்றுவது தான் எனக்கு முழு திருப்தியை கொடுக்கிறது. எனக்கு பிடித்த வேலையை நான் சுதந்திரமாக, முழு ஈடுபாட்டோடு செய்கிறேன். குழந்தைகளின் புன்னகை தான் என்னை இன்றும் திருப்தியாக்குகிறது. தொடர்ந்து என்னுடைய பணியை குழந்தைகளுக்காக செய்வேன். என்றார்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*