
திருச்சி தில்லைநகர், பாலக்கரை, உறையூர், வரகனேரி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திரண்டு வந்திருந்த பொதுமக்கள் தில்லைநகரில் செயல்பட்டு வந்த ஜி.எம்.ஜி. ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது சரமாரியாக புகார் கூறினார்கள். அந்த நிறுவனம் தங்களிடம், லால்குடி அருகே மற்றும் சோமரசம்பேட்டை பகுதிகளில் வீட்டுமனை வழங்குவதாக கூறி தவணை முறையில் மாதாமாதம் பணம் வசூலித்ததாகவும் பணம் கட்டி முடித்த பின்னர் வீட்டுமனையை பதிவு செய்து தரவில்லை என்றும், தற்போது அந்த நிறுவனம் மூடிக்கிடக்கிறது. அதன் உரிமையாளர்களும், அதில் வேலை செய்தவர்களும் நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர் என புலம்பினார்கள். இன்னும் சிலரோ அந்த நிறுவனத்தில் மாத வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கட்டியதாகவும், அந்த பணத்துடன் அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் கூறினார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவான முருகேசனை வலைவீசி தேடி வந்தனர். நேற்று முருகேசனின் செல்போனின் சிக்னலை போலீசார் கண்காணித்த போது பெட்டவாய்த்தலையில் காண்பித்தது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு அருள், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் பெட்டவாய்த்தலை பகுதிக்கு சென்றனர். அங்கு உறவினர் வீட்டில் இருந்த முருகேசனை கைது செய்த போலீசார் அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.