angusam 17/05/2018

சாத்தனூர் தேசிய கல்மரப்பூங்கா சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?

 

 

அரியலூரிலிருந்து 12 கிமீ தொலைவில் சாத்தனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே சாத்தனூர், அதன் மேற்கே எட்டு கிமீ வரை அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் கடல் பகுதி பரவி இருந்ததை புவியியல் ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. இக்கால கட்டத்தை புவியியலில் க்ரிடேஷஷ் காலம் என அழைப்பர்.
அந்த கால கட்டத்தில் இப்பகுதியில் கடலில் வாழும் பல உயிரினங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆற்றுநீர் மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்து வரப்பட்டு இவ்வுயிரினங்கள் மணல் மற்றும் களிமண்ணால் மூடப்பட்டு கடலின் அடியில் அமிழ்ந்தன.
அதே போன்று கடலோரப் பகுதியில் தழைத்து ஓங்கி வளர்ந்திருந்த மரங்களும், இப்பகுதியில் வசித்து வந்த விலங்குகளும் காலப் போக்கில் ஆற்று நீரால் அடித்து வரப்பட்டு கடலுக்கு அடியில் அமிழ்ந்துள்ளன. இவைகளின் வேதிவினை மாற்றத்தினால் கல்லுருவாகியது. அதன் விளைவே இன்று சாத்தனூர் கல்மரப்பூங்கா. தற்போது, காணப்படும் பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. இது திருச்சிராப்பள்ளி பாறை இனவகையினை சார்ந்தது. தற்போது காணப்படும் பூக்கும் தாவர இனமான “ஆங்கியோஸ்பிரம்ஸ்” தோன்றுவதற்கு முன்பே பூக்களை பூக்காத நிலத்தாவர இனமான “கோனிபர்ஸ்” வகையைச் சேர்ந்தது இம்மரம்.

 

இங்கு காணப்படும் கல்லுருவாகிய அடிமரம் 18 மீட்டர் நீளமுள்ளது. இதேபோன்று சாத்தனூரைச் சுற்றியுள்ள வரகூர், அணைப்பாடி, அருந்தலைப்பூர், சாரதாமங்கலம் போன்ற கிராமங்களை ஒட்டிய ஓடைப்பகுதிகளில் சில மீட்டர் நீளமுள்ள கல்லுருவாகிய மரங்கள் காணப்படுகின்றன. மேலும், இதே போன்று விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை என்னும் இடத்திலும் கல்லுருவாகிய மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.
இந்த மரத்துண்டுகள் சாத்தனூர் கல்மரப் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்மரத்தை முதன் முதலில் இந்திய புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் அடையாளம் காட்டினார்.
முதன்முதலாக 1940 ஆம் ஆண்டு இந்திய அரசிற்கு இக்கல்லுருவாகிய மரம் பற்றி தெரியப்படுத்தினார். தற்போது சாத்தனூர் கல்மரப்பூங்கா ஏறக்குறைய அரை ஏக்கர் நிலப்பரப்பில் கம்பி வேலி அமைத்து “தேசிய கல்மரப் பூங்கா” என அறிவிக்கப்பட்டு புவியியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான உள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும், புவியியல் ஆராய்ச்சி படிப்புக்காக வெளிநாட்டினரும் வருகை தருகின்றனர். எனவே, அரசு உடனே இந்த தேசிய கல்மரப்பூங்காவை சுற்றுலா தலமாக அறிவிப்பதோடு மட்டும் அல்லாமல் அங்கு செல்லக்கூடிய சாலைகளும் கரடுமுரடாக உள்ளது அதனையும் சரி செய்து, போதிய வசதிகளையும் சுற்றுலா வரும் மக்களுக்கு செய்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.
குறிப்பாக, தார்சாலை வசதி, பேருந்து வசதி,குடிநீர் வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது அரசு இப்பூங்காவிற்கு அருகே அருங்காட்சியகக் கட்டிடம் கட்டி திறக்கப் படாமல் உள்ளது.
அதே போல குடிநீர் தொட்டி, கழிப்பிட கட்டிடம் கட்டி தயாராக உள்ளது. மேலும்,”அம்மா பூங்கா” அமைப்பதற்கு வேலை நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவாக முடித்து இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்மர சுற்றுலா தலம் அமைய வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

-த.கலைச்செல்வன்

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*