நோயாளி இறந்ததால் பணத்தை திருப்பி கொடுத்த திருச்சி மருத்துவமனை !

0 62

நோயாளி இறந்ததால் பணத்தை திருப்பி கொடுத்த மருத்துவமனை !

 

விபத்தில் படுகாயம் அடைந்த சமையல் மாஸ்டர் இறந்தார். தவறான சிகிச்சையால் அவர் இறந்ததாக கூறி திருச்சி கீதாஞ்சலி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

மருத்துவமனை முன்பு உறவினர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா பன்னாங்கொம்பு பின்னாத்தூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 38). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி லெட்சுமி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 11-ந் தேதி மாலை பாலசுப்பிரமணியன் மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள சமத்துவபுரம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீதாஞ்சலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கீதாஞ்சலி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அவர் இறந்து விட்டதாக உறவினர்களிடம் டாக்டர்கள் கூறினார்கள். மேலும், பாக்கித்தொகை ரூ.1 லட்சத்தை செலுத்திவிட்டு உடலை பெற்று செல்லும்படியும் கூறி உள்ளனர்.

 

உடலை வாங்க மறுத்து போராட்டம்

 

இதனை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாலசுப்பிரமணியனின் உடலை வாங்க மறுத்து கீதாஞ்சலி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அவரது உடல் ஆம்புலன்சில் வைத்தபடி மருத்துவமனையிலேயே இருந்தது.

 

இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாலசுப்பிரமணியனின் உறவினர்கள், “பாலசுப்பிரமணியனை தனியார் மருத்துவமனையில் சேர்த்த நாள் முதல் தற்போது வரை மருந்து செலவுகள் உள்பட ரூ.2¾ லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் அவரை பார்ப்பதற்கு டாக்டர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சிகிச்சை அளித்தால் அவர் பிழைத்துவிடுவார் என்று கூறியே பணத்தை செலுத்த கூறி வந்தார்கள்.

 

திடீரென்று காலையில் அவர் இறந்து விட்டதாக கூறுகிறார்கள். இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. தவறான சிகிச்சை அளித்ததால் தான் அவர் இறந்துவிட்டார். ஆகவே இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறினார்கள். தொடர்ந்து பாலசுப்பிரமணியனின் உறவினர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், போலீசார் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சிகிச்சையளிக்க கொடுத்த பணத்தில் 50,000 திரும்ப பெற்றுக்கொண்ட பின்னர் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உடலை பெற்று சென்றனர்.

 

இது போன்ற சம்பவம் மருத்துவதுறை வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். எப்படியாவது காப்பற்றுங்கள் என்று கதறும் பொதுமக்கள் கடைசியில் சிகிக்சை பலனிக்காமல் இறந்தால் பணத்தை திருப்பிக்கொடுங்கள் என்று கேட்பது புதுமாதிரியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவதுறையை சேர்ந்தவர்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!