வெல்கம் ரஜினி : அப்பா பாணியில் ரஜினியை வாழ்த்தும் ஜி.கே.வாசன்

0 67

மக்கள் செல்வாக்கு பெற்ற ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஈரோட்டில்மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், தமாகா இளைஞர் அணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோருடன் தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மானியக் கோரிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டாதது ஏற்புடையது அல்ல. தமிழக அரசின் பல்வேறு துறைகள் சரியாக இயங்காததால் கடன் சுமை அதிகரித்துள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசு மாணவர்களைக் கைவிட்டுவிட்டது. விவசாயிகள் தற்கொலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

 

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணியில் இருந்தோம். அது தற்போது தொடர்கிறது. அதிமுக கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை என்பது அதிகாரப்பூர்வமாக நடந்துள்ளது. இந்த சோதனையின் உண்மை நிலை குறித்து விவரமாக வெளியிட வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் புலனாய்வு அமைப்புகள் செயல்பட வேண்டும்.

 

குடியரசுத் தலைவர் தேர்தலில் அரசியல் பார்க்கக் கூடாது. தமிழக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில்  நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிறைவு நாளான இன்று அவர் ரசிகர்களிடையே உரையாற்றிய போது, போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அரசியல் பிரவேசம் பற்றி ரசிகர்களுக்கு சூசக தகவலை தெரிவித்தார்.

ரசிகர்களுடனான சந்திப்பின் முடிவில் அரசியலுக்கு வருவதை சூசகமாக அறிவித்த ரஜினி, முதல் நாள் உரையில், தாம் அரசியல் பேச நேரிட்டது ஒரு விபத்து என்று குறிப்பிட்டதோடு, தன்னை தவறாக அரசியலில் பயன்படுத்திவிட்டார்கள் என்றும் கூறினார்.

ரஜினி மூப்பனாரை ஆதரித்தது குறித்து குறை சொல்லி இருக்கிறார் ஆனாலும் அப்பா பாணியில் ரஜினியை ஜி.கே.வாசன் வாழ்த்தியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!