புதுக்கோட்டை சலூனில் வளரும் இலக்கியம் !

0 29

சலூன்“பிடித்த வேலையைச் செய்யணும்; அல்லது பிடிக்கிற மாதிரி வேலையை மாத்திக்கணும்”

சலூனில் வளரும் இலக்கியம்!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பேருந்து நிலையத்தில் இறங்கி, ‘‘இந்தியன் சலூன் எங்கே இருக்கிறது?’’ என்று கேட்டால், ‘‘கவிஞர் சலூனா, சந்தைப்பேட்டைக்கு பக்கத்துல இருக்கு போங்க!’’ என்று வழிகாட்டுகிறார்கள்.

சலூனுக்குள் நுழைந்தால்… எந்தப் பக்கம் பார்த்தாலும் புத்தகங்கள். வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப்போரி’ல் மூழ்கியிருக்கிறார் ஒரு பெரியவர். ஒரு சிறுவன் திருக்குறள் புத்தகத்தைப் புரட்டுகிறான். ஒரு மாணவி புறநானூறு படித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கண்ணும் கருத்துமாக முடி திருத்திக் கொண்டிருக்கிறார் கணேசன்.

சலூனில் திரும்பிய பக்கமெல்லாம் கண்ணாடிகள் இருக்கும். புத்தகங்கள் எப்படி..?

‘‘இதெல்லாம் என்னோட சின்ன வயசுக் கனவுங்க… படிக்கிற காலத்துல படிக்க முடியலே. எவ்வளவோ நல்ல இலக்கியங்கள் உலகத்துல இருக்கு. அதையெல்லாம் திரட்டி ஒரு நூலகம் உருவாக்கணும்ங்கிறது என்னோட கனவு. அதுக்கு முன்னோட்டமா சலூனையே நூலகமா மாத்திட்டேன்…’’ என்கிறார் கணேசன்.

கணேசன் ‘ஒற்றைக்கீற்று’ என்ற கவிதை நூலை எழுதியிருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகியாகவும் இருக்கிறார். இவரது சலூன்தான் இப்பகுதி படைப்பாளிகளின் வேடந்தாங்கல். வாரந்தோறும் இலக்கியக் கூட்டங்களும், விமர்சன அரங்கங்களும் கூட இங்கே அரங்கேறுகின்றன. முடி திருத்த வருபவர்களை விட புத்தகம் வாசிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

‘‘பிடித்த வேலையைச் செய்யணும்; அல்லது பிடிக்கிற மாதிரி வேலையை மாத்திக்கணும். எங்களோடது அடித்தட்டு குடும்பம். நாங்க மூணு சகோதரர்கள். அப்பா பெருமாள் ஒரு சின்ன கட்டிடத்தில சலூன் வச்சிருந்தார்.

எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. ரொம்ப நல்லா படிக்கவும் செய்வேன். ஆனா ஆறாம் வகுப்போட அது நிராசையாகிருச்சு. திடீர்னு அப்பா இறந்துட்டார். அடுத்த வேளை சாப்பாடு எப்படிங்கிற கேள்வியில குடும்பம் தேங்கி நின்னுச்சு. வருத்தப்பட்டாங்களே தவிர, எங்களுக்கு வழிகாட்ட யாருமில்லை. படிப்பை நிறுத்திட்டு அப்பா நடத்தின சலூன்ல ஏறிட்டேன்.

நிறைய படிக்காம விட்டோமேங்கிற வலி மட்டும் உறுத்திக்கிட்டே இருக்கும். அந்த ஆதங்கத்துல, கிடைக்கிறதை எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். பழைய புத்தகக் கடைகள்ல இருந்து கண்ணுல படுற புத்தகத்தை எல்லாம் அள்ளிக்கிட்டு வருவேன். துணுக்குகள்ல தொடங்கி சிறுகதை, நாவல், கவிதைகள்னு வாசிக்க, வாசிக்க புதுப்புது கதவுகள் திறந்துச்சு.

பொதுவா, நிறைய படிக்கிறவங்க அதைப்பத்தி யார்கிட்டயாவது பேசணும்னு துடிப்பாங்க. எனக்கும் அந்த மாதிரி சில நண்பர்கள் அமைஞ்சாங்க. மாலை நேரங்கள்ல சலூனுக்குள்ள உக்காந்து பேசுவோம். புத்தகங்களைப் பரிமாறிக்குவோம். படிச்சுட்டு விவாதிப்போம். வாசிப்பு அனுபவம், எழுதணும்ங்கிற எண்ணத்தை உருவாக்குச்சு. எழுதி ஒருத்தர் மாத்தி ஒருத்தர் படிச்சு விமர்சனம் பண்ணிக்குவோம். அப்படியே ஒரு இலக்கிய வட்டம் உருவாச்சு.

எழுத்து போதை ரொம்ப மோசமானது. ஒருத்தனை பீடிச்சா அவ்வளவு எளிதா விடாது. பித்து கொண்டு திரிய வைக்கும். நானும் அப்படி அகப்பட்டுக்கிட்டேன். வருமானத்துல பெரும்பங்கை புத்தகங்கள் வாங்க செலவு செஞ்சேன். அதிர்ஷ்டவசமா என்னோட எந்த செயலையும் கேள்விக்கு உள்ளாக்காத மனைவி அமைஞ்சா. புரியுதோ, புரியலையோ… நான் எழுதுற கவிதைகளைப் படிச்சுட்டு ‘ரொம்ப நல்லாயிருக்கு’ன்னு அவ சொல்றதைக் கேக்க உற்சாகமா இருக்கும்.

படிப்படியா கவிஞர்ங்கிற அறிமுகம் நமக்குக் கிடைச்சிருச்சு. பள்ளிக்கூடங்கள்ல எல்லாம் பேசக் கூப்பிடுவாங்க. அப்போ புள்ளைககிட்ட ‘அதைப் படிங்க’, ‘இதைப் படிங்க’ன்னு சொல்றபோது, ‘இதெல்லாம் எங்கே சார் கிடைக்கும்’னு கேப்பாங்க. ‘நூலகத்துல கிடைக்கும்’னு சொல்வேன். ஒருநாள் ‘நாமளே ஏன் நூலகம் தொடங்கக்கூடாது’ன்னு தோணுச்சு. இலக்கிய நண்பர்கள்கிட்ட பேசினேன். ‘அதுக்கு தனியா ரூமெல்லாம் பிடிக்கணும், நிறைய செலவாகும்’னு சொன்னாங்க.

‘அடப் போங்கப்பா… இவ்வளவு பெரிய சலூன் இருக்கு… எதுக்கு தனியா ரூம்’னு சொல்லிட்டு என்கிட்ட இருந்த புத்தகங்கள் எல்லாத்தையும் அள்ளிக் கொண்டாந்து வச்சுட்டேன். இதைக் கேள்விப்பட்டு நிறைய நண்பர்கள் அவங்க சேகரிப்புல இருந்த புத்தகங்களை எல்லாம் கொடுத்தாங்க. கத்தி, கத்தரிக்கோல், சீப்பு வைக்கிற இடம் தவிர மத்த எல்லா இடத்துலயும் புத்தகங்களை அடுக்கிட்டேன்.

தொடக்கத்துல சலூனுக்கு வர்றவங்கல்லாம் விசித்திரமா பாத்தாங்க. அப்புறம் அவங்களே எடுத்து புரட்ட ஆரம்பிச்சுட்டாங்க. சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை ஏராளமான புத்தகங்களை வச்சிருக்கேன்.

இது நமக்கு சம்பந்தமே இல்லேன்னு நினைச்சவங்க கூட, ‘இந்த வண்ணதாசன் நல்லா எழுதியிருக்காரேப்பா…’, ‘இந்த கந்தர்வனோட மீசை சூப்பரா இருக்கேப்பா’ன்னு புத்தகங்களைப் புரட்டி அவங்களை ஈர்த்த விஷயங்களைப் பேசத் தொடங்கிட்டாங்க. அதுதவிர பள்ளி, கல்லூரிகள்ல இருந்தும் நிறைய மாணவர்கள் வந்து புத்தகங்களைப் படிக்கிறாங்க.

பசங்களுக்கு சலூன்லயே பேச்சுப் பயிற்சி, எழுத்துப் பயிற்சியெல்லாம் கொடுக்கிறோம். நிறைய படைப்பாளிகள் இந்த சலூன் கூட்டத்தில பேசியிருக்காங்க. இப்போ இந்தியன் சலூன்ங்கிற பேரே பலபேருக்கு மறந்து போச்சு. ‘கவிஞர் சலூன்’னு தான் சொல்றாங்க. எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் என் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடாதுங்கிறதுக்காக கடன்பட்டு நல்லாப் படிக்க வச்சுட்டேன். இனி அவங்க வாழ்க்கையை அவங்களே அமைச்சுக்குவாங்க.

சலூனுக்கு நிறைய ரெகுலர் கஸ்டமருங்க இருக்காங்க. ‘இன்னைக்கு எதுவும் கூட்டமிருக்கா கவிஞரே’ன்னு கேட்டுக்கிட்டுத்தான் முடிவெட்ட வருவாங்க. கூட்டம் இருந்தா ‘நாளைக்கு வாங்க’ன்னு சொல்லிருவேன்.

கூட்டம் நடத்துற நேரத்துல முடிவெட்டிக்க ஆட்கள் வந்தா, அவங்களையும் உள்ளே உக்கார வச்சு ஏதாவது புத்தகத்தை எடுத்துக் கொடுத்து படிக்கச் சொல்லிடுவேன். அப்படி வந்து சிக்கி இலக்கியக் கூட்டங்களுக்கு ரெகுலரா வர்றவங்களும் இருக்காங்க. கூட்டங்களுக்காக வந்து, கடைக்கு ரெகுலர் கஸ்டமர் ஆனவங்களும் உண்டு…’’ என்கிறார் கணேசன்.

சிறுவயதில் வாய்க்காத படிப்பை கணேசன் இப்போது எட்டிப் பிடித்து விட்டார். திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இரண்டு எம்.ஏ பட்டப் படிப்புகளை முடித்திருக்கிறார். இப்போது கல்வெட்டியல் பற்றிய பட்டயப் படிப்பைப் படித்துக் கொண்டிருக்கிறார்.

தெரியாது என்று சொல்வதற்கும் கிடையாது என்று சொல்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது.

# தெரியாது என்றால் எனக்கு தெரியவில்லை என்று அர்த்தம்.

# கிடையாது என்றால் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் அறிந்த நானே கூறுகிறேன் அப்படி ஒன்றும் கிடையாது என்று அர்த்தம்.

எனவே நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு அன்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

“யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்.
சுதந்திரமாக வாழ்வதற்குரிய ஒரே தகுதி இது தான்.”

“பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான்”

“பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது
சேவை குணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது”

Leave A Reply

Your email address will not be published.