லாட்டரிக்கு போலிஸ் காவல் ?
லாட்டரிக்குத் தடை விதிக்கப் பட்டுள்ள தமிழகத்தில், கனஜோராக ஒரு நம்பர் லாட்டரி விற்கப்படுகிறது, சேலத்தில். சேலம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி எதிரில் சங்கர்நகரில்,
சமீபத்தில் லாட்டரி ’வியா பாரம்’செய்வதாகப் புகார்கள் தொடர்கின்றன. இந் நிலையில் திடீரென, “லாட்டரி வியாபாரியைக் கடத்தி, பணம்கேட்டு மிரட்டிய மாணவர்கள் கைது’ என்று செய்தி வெளியானது. பத்து நாள் சிறைவாசத்துக்குப் பிறகே, மாண வர்கள் தினேஷ், கோகுல்ராஜ், மணிமாறன் மூவரும் வெளியில் வந்தனர். அவர்களைச் சந்தித்தபோது, “”அந்த சரவணன், பல மாதங்களா கல்லூரி மாணவர்களைக் குறிவச்சு லாட்டரி ஓட்டிக் கிட்டுருக்கான்… பல தடவை சொல்லியும், அவன் இந்தப் பக்கம் வந்துகிட்டே இருந்தான். அதனால இவனை சும்மா விடக்கூடாதுன்னு, நாங்க அவனைப் பிடிச்சிட்டுப் போய் கமிஷனர்
ஆபீசில் விட்டோம். விசாரித்த போலீசார், “இங்கே கேஸ் போட முடியாது. நீங்க இவனை அஸ்தம்பட்டிக்கு கூட்டிக்கிட்டுப் போங்க’ன்னு சொன்னதாலே நாங்களும் அங்கே போனோம். முதலில் போலீசார் எங்களை மரியாதையாத்தான் நடத்தினாங்க, எஸ்.ஐ. விதுன்குமார் வந்ததும் யார்கிட்டயோ பேசிட்டுவந்து, எங்களை அடிக்க ஆரம்பிச்சார். எட்டு மணிக்கு பழனிசாமின்னு ஒரு எஸ்.எஸ்.ஐ.யும் எங்களை அடிச்சார். பிறகு, ஏ.சி. உதயகுமாரும் எங்களை அடிச்சார். அடுத்தநாள் மதியத்துக்கு மேல் எங்க நாலுபேர் மீதும் வழக்குப் போட்டு உள்ளே தள்ளிட்டாங்க சார்…”’என்றனர் தினேசும் கோகுல்ராஜும்.
“”முன்ன மாதிரி இப்போ சீட்டு கொடுக்கிற தில்ல. ஒரு துண்டுச்சீட்டில் மூன்று எண்களை மட்டும் எழுதித் தந்துவிட்டுப் போய்விடுவார்கள். பரிசுத் தகவல் அவருடைய செல்போனுக்கு வந்துவிடும். அடுத்தநாள் டிக்கெட் விற்க வருபவரிடம் பரிசுத் தொகையை வாங்கிக் கொள்ளலாம்” என்று வியாபார சங்கதிகளை விளக்குகிறார்கள், சம்பந்தப் பட்டவர்கள்.