முகநூலில் முதல்வர் ஜெயலலிதா குறித்து வழக்கறிஞர் அதிரடி கைது

0 10

முகநூலில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக ஊட்டி வழக்கறிஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த தேனாடு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் ஊட்டியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் மீது அ.தி.மு.க. நகர செயலாளர் தேவராஜ் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில்,

ஊட்டியை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் தனது முகநூல் பக்கத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் படம் மற்றும் செய்தி வெளியிட்டு விமர்சித்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கறிஞர் ஸ்ரீதரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வழக்கறிஞர் ஸ்ரீதரன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் வைத்தனர்.

முகநூலில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக இதற்கு முன் தேமுதிகவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார், அடுத்து கரூரைச் சேர்ந்த ரீகன் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடைசியாக பாடகர் கோவன் மீது முதல்வர் குறித்து அவதூறு பாடல் எழுதியதாக கைது, வழக்கு பாய்ந்தது. இப்போது வழக்கறிஞர் ஸ்ரீதரன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.