விஜயகாந்திடம் அடிவாங்கியது கடவுளிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கு சமம்- பண்ருட்டி எம்.எல்.ஏ சிவகொழுந்து

0 21

Sivakolundu mla.jpgதேமுதிக தலைவர் விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க சென்றிருந்தார். பெரிய காட்டுப்பாளையம் என்ற இடத்தில் விஜயகாந்த் வந்த வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் பண்ருட்டி எம்.எல்.ஏ சிவகொழுந்துவின் தலையில் பளார் பளாரென்று 4 முறை அடித்தார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், எம்.எல்.ஏக்களை அடிப்பது இது முதல் முறையல்ல.ஏற்கெனவே தருமபுரி எம்.எல்.ஏ பாஸ்கரை அடித்துள்ளார். இதே சிவக்கொழுந்துவை கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் ஒரு முறை அடித்துள்ளார்.  சட்டசபையில் ஒரு முறை முதல்வரை பார்த்து நாக்கை துறுத்திக் கொண்டு, பேசியதால் எதிர்க்கட்சித் தலைவ ரான அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் ஒரு முறை செய்தியளாரை அடித்து விடுவேன் என்றார். டெல்லியில் நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பின் போது ‘தூக்கி அடிச்சுருவேன்’ என்று செய்தியாளர் ஒருவரை பார்த்து விஜயகாந்த் சொல்ல, அந்த வாசகம் அகில உலகமும் பாப்புலரானது. ‘அண்ணி இல்லையென்றால் கேப்டன் பின்னி எடுப்பார்’ என்று தே.மு.தி.க தொண்டர்களே பேசுமளவுக்கு விஜயகாந்தின் கோபம் மிக பிரபலமானது.

இப்படி விஜயகாந்த் அதிகமாக கோபப்படுவதால் திருநெல்வேலி  மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள விசுவாமித்திரர் கோவிலுக்கு சென்று அவரது கோபத்தை கட்டுப்படுத்த  சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அந்த சிறப்பு வழிபாட்டில் அவரின் மனைவி பிரேமலாதா மற்றும் மைத்துனர் சுதீசும் கூட கலந்து கொண்டனர். சமீபத்தில் மனதை இலகுவாக வைத்துக் கொள்ள கோவை மாவட்டம் சிறுவாணி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் சில நாட்கள் தங்கிய விஜயகாந்த், சில சிறப்பு யோகா முறைகளை கற்றதாக  கூறப்பட்டது. ஆனால்  யாகமும் யோகாவும் விஜயகாந்தின் கோபத்தை கட்டுப்படுத்த உதவியதாக தெரியவில்லை.

இந்த சம்பவத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சிவகொழுந்து, ” தமிழகத்தில் மனதில் ஒன்றை வைத்து வெளியே ஒன்று பேசாத தலைவர் விஜயகாந்த். தவறு என்றால் யாரென்றும் பார்க்கமாட்டார். நேரடியாக காட்டி விடுவார். மற்றபடி மனதில் வைத்து கொண்டு செயல்படுபவர் அல்ல. இந்த சம்பவத்தை பொறுத்தவரை நிவாரண வழங்கிய இடத்தில் பொதுமக்களை அவரால் சரியாக பார்க்க முடியவில்லை.

அந்த கோபத்தில்தான் என்னை அடித்தார். மாவட்ட செயலாளர்தானே இது போன்ற நிகழ்வுகளுக்கு பொறுப்பு என்ற எண்ணத்தில்தான் எனது தவறை சுட்டி காட்டும் வகையில் அடித்தார். அதற்கு பின்னரே எனது தவறு எனக்கு புரிந்தது. முறையான ஏற்பாடு செய்யாதற்கு அவர் தண்டனை கொடுத்தார். விஜயகாந்திடம் அடிவாங்குவது ஆசிர்வதிப்பது போல, இதற்கெல்லாம் நாங்கள் வருந்த மாட்டோம். கட்சித் தொண்டன் தலைவரிடம் அடி வாங்குவது ஆசி பெறுவது போன்றுதான். உரிமையுடன் அவரோடு  நெருக்கமாக இருப்பதாகவே கருதுவோம் ” என்றார்.

இது குறித்து சிவகொழுந்து வெளியிட்டுள்ள அறிக்கை:

எங்கள் தேசிய முற்போக்கு திராவிடக்கத்தின் நிறுவனத் தலைவரும் ,தமிழக எதிர்கட்சித்தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடலூர் மாவட்டம் வருகைத் தந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் சொல்லி நிவாரண உதவிகளையும் வழங்கி சென்றிருக்கிறார்.

ஆங்காங்கே தமிழக அமைச்சர்கள் பெயரளவில் பணி மேற்கொண்டு வந்தாலும் தலைவர் கேப்டன் அவர்கள் கடலூர் வந்துப் பார்த்தப் பொழுதுத்தான் அரசாங்கத்தின் நிவராண நடிவடிக்கைகள் மக்களை சென்றடையவில்லை என்ற செய்தியை தமிழக ஊடங்களுக்கு தெரிவித்தார்

தூர்வார வேண்டிய ஏரிகளும் அகல படுத்தி ஆழப்படுத்தாத ஆறுகளும் தான் இந்த வெள்ளப் பெருக்கிற்கு காரணம் எனவும் பகிரங்கமாக அறிவித்ததுடன் வீராணம் ஏரி தூர்வார ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது? என்ற கேள்வியும் எழுப்பினார் மேலும் பேசிய தலைவர் கேப்டன் கடலூர் மாவட்டம் முழுமையும் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அதைப் பார்வையிட முடியாத நிலையில் தான் இன்றைய தமிழக முதல்வர் உள்ளார் என தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்

வெறுங்கை வீசி வந்து வெள்ளப்பகுதிகளை பார்வையிடும் தலைவர்கள் மத்தியில் சுமார் லட்சம் சொந்த பணத்தில் நிவராண பணிகளை மேற்கொண்டு சென்றிருக்கிறார் தலைவர் கேப்டன் .கடலூர் மாவட்டத்தின் முழுப் பாதிப்பையும் மக்களின் கோரிக்கையும் காதுக் கொடுத்துக் கேட்டு சென்றிருக்கும் மக்கள் தலைவராக உலா வரும் ஒரே தலைவர் கேப்டன் தான்.

அவரது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஊடகங்கள் செயல்படுகின்றனவா? என எண்ணும் அளவிற்கு என்னை அடித்தார் என்ற செய்தியை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஊடகங்களுககு நான் தரும் விளக்கம் கழக தலைவர் என்னை அடிக்கவில்லை. அடித்தார் என செய்தி வெளியிட்ட அனைத்து ஊடகங்களையும் வன்மையாக கண்டிக்கிறேன் தலைவர் கேப்டன் அவர்கள் பணியினை இந்த ஊடகங்கள் மறைக்க முயல்கின்றனவோ? என்ற ஐயப்பாடு என்னைப்போன்றவர்களுக்கு ஏற்ப்படுகிறது

இந்த சட்டமன்ற உறுப்பினர் எம் தலைவர் தந்தது . அதற்கான பணியில் என்னை தீவிர படுத்தி தினம் உழைத்து வருகிறேன். வெள்ள நிவாரணப் பணிகளை தலைவர் அருகில் இருந்து செயல்படுத்திய தருணம் தான் என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் . அதுதான் நடந்தது . பல்லாயிரம் பேருக்கு உதவுகின்ற ஆற்றல் மிக்க தலைவருடன் இருப்பதே பெரும் பாக்கியம்.

அன்புமிக்க ஊடகங்களே…!

உங்கள் பாணியில் எங்கள் தலைவர் எங்களை அடிப்பதாக எடுத்துக் கொண்டால் கூட எங்கள் தலைவர் எங்களை அடித்து நல்வழிப்படுத்த அடிப்பாரே தவிர யாருக்கும் அடிமையாக இருக்க அனுமதிக்க மாட்டார்.

இவண்
சிவக்கொழுந்து
பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர்
மற்றும்
கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்

Leave A Reply

Your email address will not be published.