புழல் சிறையிலிருந்து பாடிக்கொண்டே வெளியே வந்த கோவன்! புதிய பாடல் !

0 34

கோவன் (2)

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் கோவனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊத்திக் கொடுத்த உத்தமி” பாடலுக்காக கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் கைது செய்யப்பட்டார், கோவன். இதன் பிறகு ஊடகங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தது.

இடையில் தோழர் கோவனை போலிஸ் விசாரணைக்காக காவலில் எடுத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. அதன் நீட்சியாக இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை அளித்திருக்கிறது. அரசுத் தரப்பில் இருந்து அதிகபட்சம் இந்த பாடல் இரட்டை அர்த்தத்தோடு இருக்கிறது என்பதை மட்டுமே வாதிட முடிந்தது. இதில் தேசத்துரோகம் என்ன என்பதற்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.

தோழர் கோவனுக்காக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதிட்டார். நீதிமன்ற வேலைகளை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஒருங்கிணைத்தனர். தோழர் கோவனை கைது செய்திருப்பதில் சட்ட அடிப்படை ஏதுமில்லை என்பதோடு, பொதுக்கருத்தில் அவரைக் கைது செய்தது தவறு என்பது உருவாகியபடியால் நீதிமன்றம் இத்தகைய பிணையை அளித்திருக்கிறது.

இன்று 17.11.2015 மாலை 5.30 மணிக்கு சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து தோழர் கோவன் விடுதலை செய்யப்பட்டார். மதியம் முதலே ஊடக நண்பர்களும், தோழர்களும் சிறையின் முன்பு குழுமியிருந்தனர்.

தோழர் கோவன் சிறையிலிருந்து வெளியே வரும் போதே முழக்கமிட, குழுமியிருந்த தோழர்களும் முழக்கமிட்டனர். பின்னர் சிறை வாயிலில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்தார் தோழர் கோவன்.

அப்போது சிறையில் இருந்து வெளியே வந்த கோவனும் இக்குழுவினருடன் இணைந்து கொண்டு மழை வெள்ளம் தொடர்பான பாடலை பாடினார்.

அந்த பாடல்:

ஊரெங்கும் மழைவெள்ளம் தத்தளிக்கிறது தமிழகம்

இது யாரோட குத்தம்னு கேட்காத சிறைவாசம்!

சாக்கடை ஊட்டுக்குள்ளே போக்கிடம் ஏதுமில்லே…

பாக்க வந்த அம்மாவோட காரு கூட நனையவில்லை..

பொங்கித் தின்ன வழியில்லை பொட்டலம்தான் கதியில்லை

போயஸ் ராணி ஆட்சியில போட்டோவுக்கு குறைச்சல் இல்ல…

தீபாவளி சரக்கு ஓட்ட திட்டம் 400 கோடி

தியேட்டரை வளைச்சு போட திட்டம் 1000 கோடி

தண்ணியில மிதந்து மிதந்து தமிழகமே டெட்பாடி

தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே தடியடி

என பாடி அங்கிருந்த அனைவரையும் அதிர வைத்தார்

பிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார்.

சிறையிலிருந்து விடுதலை – ஓங்கி குரலோடு போராட்டம் தொடர்கிறது ! என்று அறிவித்தார் கோவன் !

Leave A Reply

Your email address will not be published.