பேசியது போதும் நிறுத்து போயா போ… சூடான அமைச்சர்

0 44

20-1447996572-minister-mohanddd-600வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் மோகனிடம் புகார் நபரை பிடித்துத் தள்ளியதோடு அவரை பேசவிடாமல் அமைச்சர் தடுத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே வடகரசலூர் கிராம பகுதியில் உள்ள அம்மன் நகரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே சுமார் 20 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மவுலீஸ்வரன் என்ற 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளான். ஆனால், அதுவரை அமைச்சரோ, எம்.எல்.ஏ.க்களோ, அரசு அதிகாரிகளோ அங்கு சென்று பார்வையிடவில்லை.

டெங்கு காய்ச்சலை தடுக்கவும் எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை அமைச்சர் ப.மோகன் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பார்வையிட்டும், மழை நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன்படி கடந்த 14ஆம் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அம்மன் நகருக்கு வந்திருக்கிறார்.

அவருடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி மற்றும் அரசு அதிகாரிகளும் வந்திருக்கின்றனர். அப்போது அமைச்சர் மோகனை முற்றுகையிட்ட கிராம பொதுமக்கள் அவரிடம் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் சார்பாக பேசிய ஒருவரை பேசவிடாமல் தடுத்து, அவரை தள்ளி விட்டார் அமைச்சர் ப.மோகன். கழிப்பிடம் கட்டுவதற்காக அரசு கொடுக்கும் 12000 ரூபாயில் 2 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு 10000 ரூபாய் மட்டுமே கொடுப்பதாக புகார் தெரிவித்த மக்களிடம், ‘யாருன்னு சொல்லு. இப்பவே கேட்கிறேன் என்று அமைச்சர் மோகன் கோபமாக கேட்கிறார்.

அதற்கு அந்த மக்கள், கணக்கு எடுக்க வருகிறவர்கள்தான்” என்று தெரிவிக்கவே ”அந்த இடத்தை எல்லாம் நான் வரும்போதே பார்த்துகிட்டுதான் வருகிறேன். நிறுத்து என்று மோகன் கூறுகிறார். அப்போது பொதுமக்களில் இருந்த ஒருவர், எல்லோரும் ஒன்னா சேர்ந்து சொல்றாங்க-… நீங்க நிறுத்துன்னு சொல்றீங்க” என்று கூறியவாரே, ஏதோ கையை நீட்டி பேச முயல்கிறார். அதற்குள் மோகன், ”இருய்யா… இருய்யா… போ” என்று அவரை பேச விடாமல் பிடித்து தள்ளிவிடுகிறார். அப்போது அந்த நபர், அடிக்கிறீங்களா?, கேள்வி கேட்டா ஏண்ணே அடிக்கிறீங்களா? பொதுமக்கள் சார்பாக பேசுறேன். அடிக்கிறீங்களா?” என்று மீண்டும் கேட்கிறார். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் அந்த நபரை அந்த இடத்தில் இருந்து வெளியே தள்ளிக்கொண்டு சென்று விடுகின்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.