திதி நாளாக மாறிய கல்யாண நாள்… திக்.. திக்.. ராஜேஷ் !

0 57

p85aஒகேனக்கல் சோகம்!

சுற்றுலாவின் போது படகுப் பயணம் என்றால்… சமீபத்தில் ஒகேனக்கலில் நிகழ்ந்த படகு விபத்து நிச்சயமாக ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் எச்சரிக்கை அலாரம் அடிக்காமல் இருக்காது! மாமனார், மாமியார், மச்சான், மச்சானின் மனைவி, அவர்களுடைய மகள் மற்றும் தன்னுடைய மகன் என்று குடும்பத்தினர் ஆறு பேரை நொடிகளில் மொத்தமாகப் பறிகொடுத்துவிட்ட சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், அந்த `திக்திக்’ நொடியின் பிடியிலிருந்து இன்னமும் மீளவில்லை. இந்தக் கோரவிபத்தில் தன்னுடன் சேர்ந்து உயிர் தப்பிய மனைவி கோமதி, மகன் சச்சின் ஆகியோருடன் கலங்கியபடியே உட்கார்ந்திருக்கும் ராஜேஷுக்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகளற்று நின்றோம். கண்ணீருடன் பேசினார், தி.நகரில் மொபைல் ஷாப் வைத்திருக்கும் ராஜேஷ்.700 505

‘‘கல்யாணமாகி எட்டு வருஷமாச்சு. பெருசா எங்கயும் வெளியில போனதே இல்ல. ‘நீங்க எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னே இருக்கீங்க. மனசை ரிலாக்ஸ் பண்ண அப்பப்போ எங்கயாச்சும் டூர் போயிட்டு வரணும். இந்த வருஷம் உங்க கல்யாண நாளை குடும்பத்தோட ஒகேனக்கல்ல கொண்டாடுறோம்!’னு சொன்னார் என் மச்சான் சுரேஷ்குமார். தன் தங்கச்சி மேலயும், என் மேலயும் ரொம்ப பாசம் வெச்சிருப்பார். நான், என் மனைவி, மூத்த பையன் சச்சின், ரெண்டாவது பையன் தர்ஷன், மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் கௌரி, மச்சான் ரஞ்சித், அவரோட மனைவி கோகிலா, அவங்களோட ஏழு மாசக் குழந்தை சுபிக் ஷா… எல்லோரும் கிளம்பினோம்.

ஆகஸ்ட் 31… எங்க கல்யாண நாள். ஹோட்டலில் எங்களுக்கு எல்லோரும் திருமண வாழ்த்து சொன்னாங்க. எண்ணெய் மசாஜ், அருவியில் குளியல், சினி ஃபால்ஸ், தொங்கு பாலம், கண்காட்சிக் கோபுரம் எல்லாம் பார்த்தப்போதான், சென்னையைத் தாண்டியும் ஓர் உலகம் இருக்குனு தெரிஞ்சது. ஆனா…’’ – குரல் கம்முகிறது ராஜேஷுக்கு.

‘‘மதியம் போட்டிங் பகுதிக்குப் போனோம். அங்க ஒரு ஏஜென்ட், வர்ற சுற்றுலா பயணிகளை எல்லாம் ஒவ்வொரு பரிசல்ல யும் ஏத்திவிட்டுட்டு இருந்தாரு. எங்களை ‘காஜா’ முருகேசன்கிறவரோட பரிசலில் ஏத்திவிட்டாரு. ‘நாங்க ஒன்பது பேரு இருக்கோமே… லோடு தாங்குமா?’னு கேட்டோம். ‘அதெல்லாம் தாங்கும். பயப்படாம ஏறுங்க!’னு சொன்னாரு முருகேசன். சேஃப்டி ஜாக்கெட் கேட்டதுக்கு, அதெல்லாம் இல்லைனு சொல்லிட்டாங்க. அப்பவே உஷாராகியிருக்கணும். ஆனா, அங்க வர்ற எல்லாருமே சேஃப்டி ஜாக்கெட் இல்லாமலே பரிசல்ல போறத பார்த்த நாங்களும் சமாதானப்படுத்திக்கிட்டோம்.

30-1440941242-okanakkal2newwwwwwwww2சரியா பரிசல் பயணத்தைத் துவக்கின மூணாவது நிமிஷம், அருவியில் இருந்து எங்க படகு மேல தண்ணீர் விழுந்ததும், விபரீதத்தை உணர்ந்த முருகேசன் சுதாரிச்சு, தண்ணியில் குதிச்சி, நீச்சல் அடிச்சி தப்பிச்சிட்டாரு. அவ்வளவுதான்… கண்மூடி கண் திறக்கறதுக்குள்ள எல்லாம் நடந்துருச்சு’’

– கண்களில் நீர் நிரம்புகிறது ராஜேஷுக்கு.

‘‘மணி 2.15. படகு தண்ணியில மூழ்க, எங்க குடும்பத்துல எல்லோரும் கத்திக்கிட்டே தண்ணியில மூழ்கினோம். என்னை 200 மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை தண்ணி அடிச்சுட்டுப் போக, ஒரு பெரிய பாறையோட இடுக்குல இருந்த ஓட்டையைப் பிடிச்சி, ரொம்ப நேரம் கத்திகிட்டே இருந்தேன். அதைப் பார்த்தும், அந்த வழியா போன மூணு பரிசல்களும் காப்பாத்த முயற்சி பண்ணவே இல்லை. நாலாவதா வந்த ஒரு பரிசலோட்டிதான் என்னைக் காப்பாத்தி கரை சேர்த்தார். அப்போ மணி 2.45’’ என்று ராஜேஷ் சொல்ல, அதுவரை ஜீவனற்றவராக கணவரையே பார்த்துக்கொண்டிருந்த கோமதி, ‘‘பரிசல்ல என் பெரிய பையன் சச்சின் என் மடியில உட்கார்ந்திருந்தான்…’’ என்று ஆரம்பித்தவர், மேற்கொண்டு கேவிக்கேவி அழுதபடியே தொடர்ந்தார்…

15-1444881371-hogenakkal4-600‘‘தண்ணியில மூழ்கும்போது, சச்சின் என் கையைப் பிடிச்சிட்டு இருந்தான். நானும் அவனும் ‘ஹெல்ப்’, ‘ஹெல்ப்’னு கத்திகிட்டே இருந்தோம். அப்போ எங்களைப் பார்த்தும் சில பரிசல் ஓட்டிகள் உதவி செய்யாமப் போனாங்க. நாங்க ரெண்டு பேரும் நிறைய தண்ணி குடிச்சு மயக்கமாகுற சூழ்நிலையில, வேறு ஒரு பரிசல்ல வந்தவங்க காப்பாத்தி கரை சேர்த்தாங்க. கண்ணு முழிச்சப்போ, கணவரையும் மூத்த பையனையும் பார்த்து நிம்மதி அடைஞ்ச மறுநொடியே கண்ணு மத்தவங்களைத் தேட, அவர் மத்தவங்கள தேடி நாலா பக்கமும் அலைஞ்சுட்டே இருந்தாரு.

பக்கத்துல இருந்த பரிசலோட்டிங்ககிட்ட, `எங்க குடும்பத்தைக் காப்பாத்துங்க’னு காலில்கூட விழுந்தேன். யாருமே தண்ணிக்குள்ள இறங்க மாட்டேனுட்டாங்க. ரெண்டு மணி நேரம் கழிச்சி என் அம்மாவையும், ரெண்டாவது பையனையும் கரைக்குக் கொண்டுவந்தாங்க. உயிரே அறுந்துபோச்சு எனக்கு. அப்பவும் அவங்களுக்கு உடனே ஏதாவது முதலுதவி கொடுத்திருந்தா காப்பாத்தியிருக்க முடியும். ஆனா, எந்த உதவியும் கிடைக்கல. போலீஸ், அரசு அதிகாரிகள் வந்த பிறகுதான் எல்லாரும் பரபரப்பா செயல்பட ஆரம்பிச்சாங்க. அப்பா, அண்ணன், அண்ணி உடல் எல்லாம் அடுத்தடுத்து கிடைச்சுது. குழந்தை சுபிக் ஷாவோட உடல் மூணு நாள் கழிச்சுதான் கரை ஒதுங்கிச்சு’’ என்று சொல்லிவிட்டு, தலையில் கைவைத்து அழுகிறார் கோமதி.

‘‘நாங்க ஆபத்தான பகுதியில படகில் சென்றதாவும், செல்ஃபி எடுத்ததாலதான் விபத்து ஏற்பட்டதாவும் டி.வி, பத்திரிக்கைகள்ல சொல்றாங்க… எழுதறாங்க. எல்லாம் முழுக்கப் பொய்’’ எனும் ராஜேஷின் குரலில் ஆத்திரமும், ஆற்றாமையும்.

p85b‘‘செல்ஃபி எதுவுமே எடுக்கல. ஒருவேளை செல்ஃபி எடுத்ததாலதான் விபத்துன்னா, எங்களுக்கு நேர்ந்த சோகம் இனி யாருக்கும் ஏற்படக்கூடாதுங்கிறதுக்காக `செல்ஃபி எடுத்ததுதான் பிரச்னை. இனி அப்படி யாரும் செய்யாதீங்க’னு நாங் களே சொல்ல மாட்டோமா?” என்று கேட்டவர்,

“மாமியார், மச்சானோட மனைவி கோகிலா ரெண்டு பேரும் 16 பவுன் நகை போட்டிருந்தாங்க. அதுல எதுவுமே அவங்களோட உடல்ல இல்ல. கோகிலாவோட ஹேண்ட் பேக்கில் இருந்த ரூபாய் 25,000 பணமும், ஒரு செல்போனும், என் மச்சான் வெச்சிருந்த ரூபாய் 4,000 பணத்தையும் காணோம். போலீஸ், நகையெல்லாம் தண்ணீரில் மூழ்கும்போது போயிருக்கும்னு சொன்னாங்க. பெரிய இழப்புக்கு முன்னாடி, இந்த இழப்பெல்லாம் எதுவுமே இல்லைனாலும், அந்தச் சூழலின் குரூரத்தை புரிய வைக்கிறதுக்காகத்தான் இதெல்லாம் சொல்றேன்’’ எனச் சொல்லி சற்றே மௌனமானார் ராஜேஷ்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் தொடர்ந்தவர், ‘‘எங்களோட இழப்புல, எல்லோரும் கத்துக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கு. போட்டிங்கில் சேஃப்டி ஜாக்கெட் இல்லாம ஏறவே ஏறாதீங்க. போட்டிங்கில் ஏற்றும் பயணிகள் எண்ணிக்கை உங்களுக்கு மனசுக்குள்ள உறுத்திச்சுன்னா, யார் சொன்னாலும் சமாதானப்படுத்திக்காம சட்டுனு இறங்கிடுங்க. ஆபத்துன்னா உதவிக்கு ஆள் வருவாங்கனு யாரையும் நம்பிடாதீங்க. சுற்றுலாவுக்குப் போகும்போது நகையையெல்லாம் தவிர்த்துடுங்க. உயிரைக் காப்பாத்தக் கிடைக்க வேண்டிய உதவியையும், அந்த நகை திசைதிருப்பி விட்டுடலாம். எங்க கல்யாண நாளே, சொந்தங்களுக்கு திதி கொடுக்கும் நாளா மாறிடுச்சு. இனி யாருக்கும் இதுபோன்ற விபத்து நேரக் கூடாது கடவுளே!’’

– ராஜேஷின் வார்த்தைகள் மனதை  கனமாக்குகின்றன!

Leave A Reply

Your email address will not be published.