வங்கி கணக்கில் வெள்ள நிவாரண நிதி தமிழக அரசுக்கு குட்டு வைத்த மத்திய அமைச்சர்கள்

0 14

pon-radhakrishnanதமிழகத்தில் பெய்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள  இவ்வளவு இழப்புகளுக்கு  காரணம்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறைகள் மேற்கொள்ளப்படாததே என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

கனமழையால், சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பலபகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒருவார காலமாக சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த மழையின் காரணமாக தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், சேலையூர், பல்லாவரம், மப்பேடு, அகரம்தென், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், வண்டலூர், கொளப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளமான இடங்களில் மழைநீர் ரோடுகளில் 3 அடிக்கு மேல் பயங்கரமாக பெருக்கெடுத்து ஓடியது. தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உணவு, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வில்லிவாக்கம் பகுதியில் பெய்த கனமழைக்கு சிட்கோ நகரில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வாகனங்களும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது.

மழை பாதிப்பு பகுதிகளை மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன், மாநில பா.ஜ. தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கடலூர் மற்றும் சென்னையின் பல பகுதிகளில் ஆய்வு மெற்கொண்டனர்.

கடைசியாக கன மழையால் வில்லிவாக்கம் சிட்கோ நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்ற அவர்கள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு உணவு பெட்டலங்களையும் வழங்கினார்.

பிறகு  பா.ஜ. கட்சி தலைமையகத்தில், அவர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது,

கடந்த 6 நாட்களாக தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை நகர மக்களுக்கு மாநகராட்சி எந்த உதவியும் செய்யவில்லை. சென்னை மாநகராட்சி செயல் இழந்துவிட்டது. இது மாநகராட்சிக்கு பெரும் தலைகுனிவாகும். வாய்க்கால்கள் எங்கு இருக்கிறது என்று கூட தெரியவில்லை.மழையை எதிர்கொள்ள தயாராகும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க சென்னை மாநகராட்சி தவறி விட்டது. இந்த விஷயத்தில் ஒட்டு மொத்தத்தில் மாநகராட்சி தோல்வியை சந்தித்துள்ளது. மழை வெள்ள அழிவில் மாநகராட்சிக்கு பெரும் பங்கு உள்ளது.

கடலூரில் இரண்டு ஓடைகள் ஒன்று சேரும் இடத்தில் தண்ணீர் போக முடியாத அளவுக்கு பாலம் அமைத்ததால் 10 பேர் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூரில் தானே புயல் ஏற்பட்ட பிறகும் கூட இயற்கை இடர்பாடுகளை சமாளிக்க கூடிய வாய்ப்பை அரசு ஏற்படுத்தி கொடுக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5000 பணம் வழங்கியதாக சொல்கிறார்கள். அதில், பாதிக்கப்பட்டடோரை விட, பாதிக்கப்படாதவர்களுக்கே பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பணம் வழங்கப்படுவதில் ஏற்பட்ட பிரச்னையை நாங்களே கண்கூடாக பார்த்தோம். எந்த நோக்கத்திற்காக பணம் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. பணம் வழங்கியதன் உள்நோக்கம் என்ன என்றும் தெரியவில்லை. நான் இதை அரசியலாக பார்க்கவில்லை. அதற்கு இழுக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.Pon radhakrishan

நீர்பிடிப்பு பகுதிகள், ஏரிகள், குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் கட்ட எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. மழை பெய்து முடித்த பின்னர் இது போன்ற இடங்களில் கட்டப்பட்ட வீடுகளின் அஸ்திவாரங்கள் இறங்க வாய்ப்புள்ளது. மவுலிவாக்கம் கட்டிட விபத்து போன்ற விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மிகப்பெரிய அழிவு தமிழக பகுதிகளில் காத்திருக்கிறது. தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பின்னர் மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்புக்குழு, கடற்படை, விமானப்படையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக அரசு இன்னும் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று இன்னும் கேட்கவில்லை. நிவாரண உதவி கேட்டு, மத்திய அரசுக்கு தமிழக அதிகாரிகளோ, முதல்வரோ பேசவில்லை. தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வந்தால் உடனடியாக மத்தியக்குழு தமிழகம் வரும். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.

நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு எந்த உதவியும் செய்ய தயாராக உள்ளது. மத்திய அரசு சார்பில் ரூ.1 கோடியும், தனது சொந்தப்பணம் ரூ.5 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்படும். வருகிற 2-ந் தேதி மத்தியக் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். அதன்படி மத்திய அரசு உதவிகள் வழங்கும்.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறைகள் மேற்கொள்ளப்படாததாலேயே, இந்த அளவிற்கு தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தொகையை, அவர்களுக்கு நேரடியாக வழங்காமல், வங்கிக்கணக்கில் செலுத்தினால், அவர்களின் பயன்பாட்டிற்கு வசதியாக இருக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்

Leave A Reply

Your email address will not be published.