மீண்டும் மிரட்டும் மழை – தமிழகத்தில் எந்த எந்த மாவட்டத்தில் விடுமுறை முழுவிபரம்

0 12

Chennai rainதமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தீபாவளி முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்தது.

தமிழகத்தில் தீபாவளி முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால் பள்ளி, கல்லூரிகள் சுமார் 19 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், வங்க கடல் பகுதியில் 2 காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருவதால், கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. விடிய விடிய பல இடங்களில் தொடர் மழை பெய்து வருவதால், சென்னையில், ஈக்காட்டுத்தாங்கல், மந்தைவெளி, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, பல்லாவரம், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை பெய்தது.

இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், சின்னாளபட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், பரவலாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியல் கல்லூரி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்து உள்ளார்.

திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காரைக்கால்  மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், புதுச்சேரி, தருமபுரி, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.