திருச்சியில் கொட்டும் மழையில் ஐ.ஐ.ஐ.டி., மாணவ, மாணவிகள் உண்ணாவிரதம்

0 2

அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து, ஐ.ஐ.ஐ.டி.,யை விலக்கி, சென்னை ஐ.ஐ.ஐ.டி.,யுடன் இணைக்க வேண்டும்’ என வலியுறுத்தி, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் கொட்டும் மழையில், மாணவ, மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், அலகாபாத், லக்னோ, புனே, மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் திருச்சி உள்பட, 20 இடங்களில் ஐ.ஐ.ஐ.டி., (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி) க்கள் உள்ளன. கடந்த, 2012ம் ஆண்டு, திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலை வளாகத்தில், ஐ.ஐ.ஐ.டி., துவங்கப்பட்டது.

திருச்சி, ஐ.ஐ.ஐ.டி.,யின் இயக்குனராக, அண்ணா பல்கலைக்கழக டீன் செந்தில்குமார், உள்ளார். இங்கு, பி.டெக்., எம்.டெக்., பாடப்பிரிவுகள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் துவங்கப்பட்ட பி.டெக்., பாடப்பிரிவில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 12 மாணவியர், 60 மாணவர்கள் என, மொத்தம், 72 பேர் படிக்கின்றனர்.

நேற்று காலை, திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்த பி.டெக்., முதலாமாண்டு மாணவ, மாணவியர் நுழைவாயிலில் அமர்ந்து, கொட்டும் மழையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த கன்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனர் அசோக்குமார், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஐ.ஐ.ஐ.டி., மாணவர்கள் கூறியதாவது:

ஸ்ரீரங்கம், ஐ.ஐ.ஐ.டி., தமிழக அரசின் கட்டுப்பாட்டில், அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதுமான கட்டட வசதி இல்லை. பி.டெக்.,- எம்.டெக்., பிரிவுகளுக்கு என மொத்தம், 11 பேராசிரியர்களே பணிபுரிகின்றனர்.

பாடம் சார்ந்த புத்தகங்கள் நூலகத்தில் இல்லை. விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை. போதிய அளவு உணவு கிடைப்பது இல்லை. வெளிமாநிலத்தை சேர்ந்த பி.டெக்.,- எம்.டெக்., பயிலும் மாணவர்களுக்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தில் செயல்படுவதால், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை.

இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, ஸ்ரீரங்கம் ஐ.ஐ.ஐ.டி.,க்கு தனி கட்டடம் ஒதுக்கி, கூடுதலாக பேராசிரியர்கள் நியமித்து, துறைசார்ந்த புத்தகங்கள் வழங்க வேண்டும். அண்ணா பல்கலை நிர்வாகத்திடம் இருந்து விலக்கி, காஞ்சிபுரம், ஐ.ஐ.ஐ.டி.,யுடன் இணைத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.