நாங்க தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை-தேர்தல் ஆணையம் மறுப்பு

0 3

தமிழக சட்டசபைக்கு ஏப். 24, மே 8 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதில் உண்மையில்லை. தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். அடுத்த மாத இறுதியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடைபெறும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது; அதன் பின்னர் மே 8-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மற்றொரு செய்தி பரவியது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: தமிழகத்தில் 14-வது சட்டசபையின் பதவிக்காலம், 2016-ம் ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இறுதி செய்யப்படாத நிலையில், ஏப். 24-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரவி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டவுடன் முறைப்படி அறிவிக்கப்படும். தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்காக, 75 ஆயிரம் கன்ட்ரோல் யூனிட் மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, பீஹார், குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களில் இருந்து எடுத்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அந்த இயந்திரங்கள் விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும். ஜனவரி மாதம் இறுதியில், தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வர இருக்கிறார். தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ந் தேதி வெளியிடப்படும். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு, இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 28-ந் தேதி வரை நடைபெறும். அதுவரை விண்ணப்பிக்கலாம்.வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் வழங்கப்படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.