பூலோகம் – பட விமர்சனம் – உலகமயமாக்கலையும், ஊடகங்களின் வர்த்தக வெறியாட்டங்களும்.

0 4

boologamவடசென்னையில் ஆரம்பிக்கிறது கதைகளம். நாட்டுவைத்தியர் பரம்பரை, ராஜமாணிக்கம் பரம்பரை என இரண்டு கோஷ்டிகள். நாட்டு வைத்தியர் பரம்பரையைச் சேர்ந்த ஜெயம் ரவியின் தந்தைக்கும், ராஜமாணிக்கம் பரம்பரையைச் சேர்ந்த ஆறுமுகத்தின் தந்தைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டையில் ஜெயம் ரவியின் தந்தை தோற்றுவிடுகிறார்.

இதில் மனமுடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். சிறுவனாக இருக்கும் ஜெயம் ரவியின் மனதில் இச்சம்பவம் ஆறாத வடுவாக மாறி கொலை வெறி பிடித்த குத்துச் சண்டை வீரனாக வளர்க்கிறது. ஆறுமுகத்தை களத்தில் மோதிக் கொல்ல வேண்டும் என்பது தான் ரவியின் எண்ணம்.

இந்த கொலைவெறி வரலாற்றை அறிந்து கொள்ளும் தனியார் தொலைக்காட்சியின் உரிமையாளரான பிரகாஷ்ராஜ் இவர்கள் இருவருக்கும் உள்ள பகையை ஊதிப் பெரிதாக்கி காசு பார்க்க ஆசைப்படுகிறார். போட்டியை இவரது தொலைக்காட்சி முன்னின்று நடத்துகிறது. காசிமேட்டைத் தாண்டாத இந்த அடிதடி சம்பவத்தை தனது கார்ப்பரேட் புத்தியால் ‘சாம்பியன் ஷிப்’ போட்டியாக முன்னெடுக்கிறார். போட்டியில் ரவி ஆறுமுகத்தை வெல்கிறார்.

உயிருக்கும் போராடும் நிலைக்கு ஆறுமுகம் தள்ளப்பட்டதும் அவரது குடும்பம் கதறுவதும் ரவியின் மனசை மாற்றுகிறது. குத்துச் சண்டையை கைவிடுகிறார். ஆனால் ரவியை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ள பிரகாஷ்ராஜ் கோபமாகி மீண்டும் ரவியை குத்துச் சண்டை போட்டியில் சிக்க வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களும், இறுதியில் குத்துச் சண்டை களத்திலேயே ரவியை கொல்ல வெளிநாட்டிலிருந்து ‘சைக்கோ’ என விமர்சிக்கப்படும் குத்துச் சண்டை வீரனை களத்தில் இறக்கி நடத்தும் கார்ப்பரேட் அட்ராசிட்டிகளும் தான் கதையின் அதகளம்.

படத்தில் ஜெயம் ரவியின் உழைப்பு மிக அபாரம். குத்துச்சண்டை வீரனின் உடல்மொழி அதுவும் வடசென்னையின் காசிமேட்டுப்பகுதி குத்துச் சண்டை வீரனின் உடல்மொழியினை நம் கண் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

ஆறுமுகத்தை வெல்ல வேண்டும் என்ற கொலைவெறியுடன் அவர் காட்டும் உதாறும், போடும் சாமியாட்ட நடனமும் ஜெயம் ரவி அடுத்து ரவுண்டுக்கு தயார். அஜானுபாகுவான வெளிநாட்டு குத்துச்சண்டை வீரன் நாதன் ஜோன்ஸின் இடுப்பு உயரமே உள்ள ஜெயம் ரவி வெற்றி பெறுவதை கொஞ்சமும் ஹீரோயிஸம் காட்டாமல் எடுத்திருக்கும் பாங்கும் அதை சரியே செய்திருக்கும் ரவியின் அண்டர் பிளேயும் அசத்தல் ரகம்.

த்ரிஷாவிற்கு ‘ஜஸ்ட் லைக் தட்’ என அசால்ட்டாக தட்டிச் செல்லும் ரோல். கொடுத்த வேலையை சரியாய் செய்து கொடுத்திருக்கிறார்.

பிரகாஷ்ராஜூம் அந்த ரகம் தான். பல படங்களில் செய்த அதே வில்லத்தனம். ஜனநாதனின் வசனத்தை பிரகாஷ்ராஜ்; சொல்லும் போது குறிப்பாக “அவன் பொறிக்கீனா.. நான் எச்சபொறிக்கி” என கூறுவது, கார்ப்பரேட் அதிபர்கள் காசுக்காக எச்சபொறிக்கியாக மாறுவார்கள் என்பதை அசால்டாக பதிய வைக்கிறார்.

வெளிநாட்டிலிருந்து வரும் பாக்ஸர் நாதன் ஜோன்ஸின் நடிப்பும் அருமை.. குத்துச் சண்டை இருக்கட்டும்.. த்ரிஷாவிற்கு கல்யாண பரிசு கொடுத்துவிட்டு திரும்பும் போது, லோக்கல் இசைக்கு ஆடும் அங்க அசைவுகள் ஜெயம் ரவிக்கு கொடுக்கும் டப்-பைட்.

படத்தின் பலம் வசனம். கம்யூனிஸ சித்தாந்த பார்வை கொண்ட, ஈ, பேராண்மை, புறம்போக்கு படங்களை கொடுத்த எஸ்.பி.ஜனநாதன் இந்த படத்தின வசனகர்த்தா. இதில் இன்னொரு சுவாரஸ்யம். இந்த படத்தின் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் ஜனநாதனின் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

சிஷ்யனின் படத்திற்கு குரு குறைவில்லாமல் உழைத்திருக்கிறார்.

“இந்தியாவில் ஒரு நாளைக்கு 10 கார் விக்கிறத விட பத்து லட்சம் ஷாம்பு விற்கிறதுல தான் அதிக லாபம்..

இந்தியா ஏழை நாடு தான் ஆனா பெரிய சந்தை..

இவ்ளோ பெரிய நாட்டுல குளிக்க ஷாம்புவும், குடிக்க கோலாவும் நம்மால தயாரிக்க முடியாதா..

அவன் செத்தா தான் நம்ம டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறும்..

அவன் எந்த திசையில செத்து விழுந்தாலும் நமக்கு ஸ்பான்சர் பண்ணினவனோட பேர் தெரியனும்”..

உலகமயமாக்கலையும், ஊடகங்களின் வர்த்தக வெறியாட்டங்களையும் சொடேர்.. சொடேர் என சம்மட்டியாய் நம் மண்டைக்குள் இறக்கும் வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்.

பாக்ஸிங் வேகத்திற்கு இணையாக ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் ஒரே நேர்க்கோட்டில் உழைத்திருப்பது அபாரம். வேகம்.. வேகம்..

இசை ஸ்ரீகாந்த் தேவா. ‘வாங்கி வந்த’ கானா பாடலும், ‘மாசான கொல்லையிலே’ மிரட்டல் பாடலும் ஹிட் ரகம். பின்னணி இசையில் காட்சியமைப்பை வீணடிக்காமல் அடக்கி வாசித்திருக்கிறார்.

இயக்குநர் கல்யாண கிருஷ்ணன். சமூக பிரச்சனையை கையிலெடுக்கும் ஷங்கரும், முருகதாஸ_ம் கமர்ஷியல் கலந்து கொடுத்தால் மட்டுமே வியாபாரம் ஆகும் என்ற நோக்கத்துடனே படம் பண்ணுவார்கள். ஆனால் அப்படி உறுத்தும் அளவிற்கு எந்தவித கமர்ஷியல் சமாச்சாரமும் இன்றி நேரடியாகவே கதை சொல்லி, சொல்ல வந்த விஷயத்திற்கு வலு சேர்த்திருப்பதற்கே ஒரு ‘ஸ்பெஷல் ஹேண்ட் ஷேக்’ செய்யலாம். விறுவிறுப்பான திரைக்கதை. அடுத்து என்ன என கேட்கச் செய்யும் வேகம்.. முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார்..

நிறைவாய் ஒரு விஷயம்… படத்தை தவறாமல் பாருங்கள்.. பார்த்தபின் சினிமாவாய் விமர்சனம் செய்யாமல் கொஞ்ச நேரமேனும் அதன் கதைகருவை சிந்தியுங்கள்.. ஏதாவது உங்கள் மனதை அழுத்தினால்.. கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்…

ஆகஸ்ட் 2010ம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு தொடங்கிய இப்படம் சுமார் 5 ஆண்டு போராட்டத்திற்கு பின் வெளிவந்திருக்கிறது. 2015ம் ஆண்டு இறுதியில் வெளிவந்திருக்கும் இப்படம் இந்த ஆண்டின் சிறப்பு பட வரிசையில் இடம் பெறும் என்பதை மறுப்பதற்கில்லை.

–  எஸ்.கோவிந்தராஜன்

Leave A Reply

Your email address will not be published.