ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தை நக்கலடித்து குட்டி கதை சொன்ன ஜெயலலிதா

0 2

Admk general body meeting

சென்னை திருவான்மியூரில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் குறித்த குட்டிக்கதை ஒன்றை கூறினார். அந்த கதை,

ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்டில் திருட முடியாது என்று நினைத்த திருடன் மெதுவாக வந்த வழியே திரும்ப ஆரம்பித்தான். அந்த சமயத்தில் அவனுடைய காலில் ஏதோ தட்டுப்பட்டது. சற்று குனிந்து பார்த்தான்.

ஒரு பெரிய வெங்காய மூட்டை அங்கு இருந்தது. வந்ததற்கு இதையாவது எடுத்துச் செல்லலாம் என்று நினைத்து ஒரு பெரிய பை நிறைய வெங்காயத்தை அள்ளிப் போட்டுக் கொண்டான். புறப்படுகிற சமயத்தில் ‘கப்’ என்று ஒரு கை வந்து விழுந்தது.

ஆள் மாட்டிக்கொண்டான். மறுநாள் காவலாளிகள் அவனை அரசன் முன் சென்று நிறுத்தி நடந்ததை கூறினர். அரசனும் “என்னப்பா இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை தானா?” என்று கேட்டார். “ஆமாம்” என்று திருடனும் ஒத்துக் கொண்டான். உடனே அரசன் திருடனைப் பார்த்து “நீ பண்ணையார் வீட்டில் திருட வந்தது குற்றம். அதற்காக 100 ரூபாய் நீ அபராதம் செலுத்த வேண்டும் அல்லது 100 கசையடி வாங்க வேண்டும் அல்லது திருடிய வெங்காயத்தை பச்சையாக என் கண் முன்னாடி சாப்பிட வேண்டும். இதில் எந்த தண்டனை உனக்கு வேண்டும்?” என்று கேட்டார். சற்று சிந்தித்த திருடன், “வெங்காயத்தை சாப்பிடுகிறேன்” என்றான்.

வெங்காயத்தை ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தான். கண்ணிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது. ஒரே எரிச்சல். தாக்கு பிடிக்க முடியவில்லை. இது நமக்கு சரிபட்டு வராது என்று முடிவு பண்ணிவிட்டான். அரசரைப் பார்த்து ”என்னை மன்னித்து விடுங்கள். இது என்னால் முடியாது. பேசாமல் சாட்டை அடி கொடுத்து விடுங்கள்” என்றான். அரசரும் “சரி” என்றார். சாட்டையடி விழ ஆரம்பித்தது. 10 அடிகள் விழுகிற வரைக்கும் தாங்கினான். அதற்கு மேல் அவனால் தாக்கு பிடிக்கமுடியவில்லை. ”இதுவும் எனக்கு சரிபட்டு வராது. 100 ரூபாய் அபராதம் கட்டி விடுகிறேன்” என்று கூறினான்.

இந்த கதையைப் போல, இப்போது முதலமைச்சர் வேட்பாளர் என மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கும் ஒருவர், ஒவ்வொரு ஊராகச் சென்று ”நாங்கள் தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்,

இனி மேல் இது போன்று எந்த தவறையும் செய்ய மாட்டோம்” என்று பாவ மன்னிப்பு கேட்டுள்ளார். இவர்கள் ஆட்சியில் செய்த தவறுகள் ஒன்றா இரண்டா? காவிரிப் பிரச்சனை,முல்லைப் பெரியாறு பிரச்சனை டெல்டா மாவட்டங்களையே பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டம்,நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர் குலைவு,மின்சாரம் பற்றாக்குறையால் தமிழகத்தையே இருண்ட காலத்துக்கு கொண்டு சென்றது, இலங்கைத் தமிழர்கள் மடிய காரணமாயிருந்தது என இவர்கள் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்களை எல்லாம் மறந்து மன்னித்துவிட தமிழர்கள் என்ன ஏமாளிகளா? அந்த நபர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அதற்கு ‘நமக்கு நாமே’ என்ற திருநாமத்தை சூட்டிக் கொண்டார்.” என்று கூறினார்.

இந்த தலைப்பை அவரது தந்தை ஏன் கொடுத்தார் என்று அந்த நபர் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். திரு. கருணாநிதி தனது தனயனிடம் ”இனி இந்த அரசை நம்பி பிரயோஜனம் இல்லை. நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள நமக்கு நாமே கடைமையாற்ற வேண்டும்” என்று சொன்னாராம். அதாவது, அவர் சொல்வது என்னவென்றால், இந்த அஇஅதிமுக அரசு மக்களுக்கு பாதகமாக எதையும் செய்வதில்லை. எனவே, மக்களின் எதிர்ப்பை அவர்கள் சாம்பாதித்துக் கொள்வார்கள் அதாவது, anti-ioncumbency என்ற சூழ்நிலை வரும் என இனியும் எதிர்பார்க்க முடியாது.

எனவே, நாம் வீதியில் இறங்கி நமது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட வேண்டும் என முடிவெடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் போலும்! என கூறினார் ஜெயலலிதா.

Leave A Reply

Your email address will not be published.