போலீஸ் எல்லாம் ஜுஜூப்பி சவால்விடும் ராம்ஜி நகர் கொள்ளையர்கள் -தொடர் 2

0 119

ramjinagar theft 1அகில இந்திய போலீஸாருக்கே டிமிக்கி கொடுக்கும் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள் பற்றி முந்திய முந்தைய கட்டுரை அங்குசம்.காம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற கட்டுரையின் அடுத்த பாகம்
.

ராம்ஜி நகர் வாசிகளுக்கு தீபாவளி நெருங்கிட்டால் சந்தோசம் தான்.  அதனால் இவா்கள் திருட செல்வது தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருட சென்று தீபாவளிக்கு வந்து விடுவார்கள். வரமுடியவில்லை என்றால் போகிற இடத்திலே தங்கிவிடுவார்கள். தீபாவளி நேரம் தான் வடஇந்தியாவில் பணபுழக்கம் அதிகம் இருக்குமாம். டெல்லி திகார் சிறையில் இவா்களுக்கு என்றே வழக்கறிஞா் குழுவே இருக்கிறதாம். மும்பையில் திருடர்கள் காலனியே இருக்கிறதாம்.

சாதாரணமாக, நல்ல காரியத்துக்கு போனால்தான் சகுனம் பார்ப்பர். ஆனால், ராம்ஜிநகர் கேப்மாரீஸ், திருடப் போவதற்கே திசை பார்க்கிறார்கள். பஞ்சாங்கம் பார்த்து இந்த நாளில் இந்த திசை நோக்கி வல்லடைக்கு (அட.. திருடப் போறத இவங்க இப்படித்தாங்க சொல்றாங்க) போனால் அறுவடை அமோகமாக இருக்கும் என்பது இவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. வேட்டைக்கு கிளம்பிவிட்டால் மூன்று மாதம் கழித்துத்தான் ஊர் திரும்புவர். ஆனால், வேட்டையில் சிக்கும் பணமும், பொருட்களும் ஏ.டி.எம்., மூலமாகவும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்கள் மூலமாகவும் உடனுக்குடன் வீடு வந்து சேர்ந்துவிடும். தொழிலுக்கு கிளம்புவதற்கு முந்தைய நாள் அவரவருக்கு இஷ்டமான கோயில்களுக்கு சென்று ‘தொட்டது துலங்க’ வேண்டுதல் வைக்கிறார்கள். சகுன தடைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக இவர்கள் அதிகாலை நேரத்தில்தான் புறப்படுகிறார்கள்.

பெரும்பாலும் இருபது பேர் கொண்ட குழுவாகத்தான் கிளம்பும். இவர்களுக்கு அவசரத்துக்கு உதவுவதற்கு என்றே ராம்ஜிநகரில் சில அடகுக் கடைகள் இருக்கின்றன. வல்லடைக்கு புறப்படுகிறார்கள் என்றால் முந்தைய நாளே அதற்கான அறிகுறிகள் தெரிந்துவிடும். வழிச்செலவுக்கு பணம் புரட்டுவதற்காக அடகுக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.

அந்தோணியார் கோவில் வேண்டுதல்

அதிகாலை 4 மணிக்கு இங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் அடுத்து சமயபுரம் மாரியம்மன் கோவில் (இங்கிருந்து கிளம்பினால் போலீஸில் சிக்காமல் வளமாக வீடு திரும்பலாம் என்பது இவர்களின் சென்டிமென்ட்!

குடும்பத்தோடு கூடுகிறார்கள். பெண்கள் அனைவரும் தலைக்கு குளித்து, மஞ்சள் பூசி, தலை நிறைய பூ வைத்து, நெற்றி சிறக்க பொட்டிட்டு மங்களகரமாய் வருகிறார்கள். தொழிலுக்குப் போகும் ஆண்கள் தேவாலயத்துக்குள் சென்று வணங்கிவிட்டு, வெளியில் வந்து அன்றைய தினத்துக்கு அனுகூலமான திசையில் கொஞ்ச தூரம் நடக்கிறார்கள்.

சகுணம் பார்த்து திருடு

அப்போது அந்த சுமங்கலி பெண்கள் அவர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்களின் கைகளில் அன்றைய தினத்துக்கான பரிகாரப் பொருளாக, இனிப்பு, தண்ணீர், பால் இவற்றில் ஏதாவது ஒன்று இருக்கும். அவற்றை வாங்கி உண்டுவிட்டு பயணத்துக்கு தயாராவார்கள்.

இந்த வழியனுப்பு விழாவுக்கு கட்டுக்கழுத்திகள் (சுமங்கலிகள்) மட்டுமே வரவேண்டும் என்பது கேப்மாரிகளின் கட்டளை. ஊரின் எல்லையைக் கடப்பதற்குள் எதிரே ஒற்றை மாட்டு வண்டி வரக் கூடாது, யாரும் தும்மிவிடக் கூடாது, சிறு தூறல்கூட விழக்கூடாது, பாம்பு, பூனை குறுக்கே போகக் கூடாது, விதவைகள் எதிரே வரக் கூடாது இதில் ஒன்று நடந்தாலும் சகுனத் தடை; புரோகிராம் கேன்சல்!

வேண்டுதல் வைக்கும் மனைவிகள்

கணவன்மார்களை வல்லடைக்கு வழியனுப்பிவிட்டு இல்லத்தரசிகள் கோயில் கோயிலாய் போய் வல்லடை சிறக்க வேண்டுதல் போடுவார்கள். இருபது பேர் வல்லடைக்கு கிளம்பினால் அதில் ஒரு “கேப்டன்” இருப்பான். வல்லடை முடிந்து வீடு திரும்பும்வரை அந்த கூட்டத்துக்கான அனைத்து செலவுகளும் மிஸ்டர் கேப்டன்தான்.

வல்லடையில் சிக்கும் பணத்தில் ஐந்தில் ஒரு பங்கு லாபக் காசு. மூன்று மாதம் கழித்து வீடு திரும்பியதும் முனிக்கு கடாவெட்டி சாதி சனத்துக்கு விருந்து கொடுப்பதற்காக இதை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். எஞ்சியதில் தலைவருக்கு பத்து சதவீதம் போக மீதியை 19 பங்காக்கி மற்றவர்கள் பிரித்துக் கொள்வார்கள்.

போகிற போக்கில் இவர்கள் லட்சங்களை சுருட்டிவிடுவதால், தங்கள் வீட்டுப் பெண்களுக்கு கிலோ கணக்கில் நகை போட்டு சாரட் ஊர்வலம் வைத்து திருமணம் நடத்துகிறார்கள் ராம்ஜிநகர் கொள்ளையர்கள். இரண்டு நாட்கள் நடக்கும் திருமண கொண்டாட்டங்களால் ஊரே திமிலோகப்படும். இவர்களே உணராத சோகம் என்னவென்றால் வெளியிலிருந்து யாரும் இவர்களோடு சம்பந்தம் போட வருவதில்லை என்பதால் ரத்த சொந்தங்களுக்குள்ளேயே திருமணங்களை முடிக்கிறார்கள்..

சென்னை மாநகராட்சி கருவூலம் கொள்ளை

அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சென்னை மாநகராட்சி கருவூலத்திலிருந்த பணப் பெட்டியை தந்திரமாக சுட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள் ராம்ஜிநகர் கேப்மாரிகள் பணம் போன ரூட்டை ஒருவழியாய் தேடிக் கண்டுபிடித்துவிட்ட சென்னை போலீஸார், அதை மீட்பதற்காக ஒரு மாத காலம் ராம்ஜிநகர் பள்ளிக்கூடத்தில் வந்து படுத்துக்கிடந்தார்களாம்!

இதேபோல், 2005-ல் டெல்லியில் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் சூட்கேஸ் ஒன்றை சுட்டுக் கொண்டு வந்து விட்டார்கள். லேப்டாப், கிரெடிட் கார்டு இவைகளோடு நாராயணமூர்த்தியின் க்ரீன் கார்டும் அதற்குள் இருந்திருக்கிறது. க்ரீன் கார்டு களவு போனதால் பதறிப்போன நாராயணமூர்த்தி, டெல்லி போலீஸில் புகார் கொடுத்தார். இது ராம்ஜிநகர் பார்ட்டிகளின் வேலைதான் என்று டெல்லி போலீஸார் தகவல் கொடுத்ததால், க்ரீன் கார்டை மீட்பதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார் நாராயணமூர்த்தி. இதையடுத்து, மிகப்பெரிய போலீஸ் படையே ராம்ஜிநகருக்குள் புகுந்து ரெய்டு நடத்தி, பொன்னும் பொருளுமாய் அள்ளிக் குவித்தது.

இந்த ஆபரேஷனில் நிலைகுலைந்துபோன கேப்மாரிகள், இவன்தான் டெல்லியில் சூட்கேஸை சுட்டவன் என்று கந்தனை அடையாளம் காட்டினர். போலீஸ் ‘கவனிப்பில்’ அத்தனை பொருட்களையும் அச்சுக் குலையாமல் ஒப்படைத்தான் கந்தன், ஆனாலும், க்ரீன் கார்டு மட்டும் மிஸ்ஸிங்!. அதைக் கேட்டதற்கு, ‘ஐயா.. அதை நான் டெல்லியிலயே டாய்லெட்டுக்குள்ள போட்டுட்டேனே’ என்று கூலாக சொன்னானாம் அப்போது பயணத்துக்கு போன கந்தன் இப்போது ராம்ஜிநகா் கேப்டன்களில் ஓருவனாகவும் போலிசுக்கு நெருங்கிய தொடர்புள்ளவானகாவும் மாறிவிட்டான்.

தற்போது ராம்ஜிநகரில் விஜயன், தீனன், கந்தன், சக்தி, சாந்து ஆகியே கேப்டன்கள் என இன்னும் நிறைய ராஜாக்கள் தனித்தனியாக வலம் வருகிறார்கள்.

ரகசிய கூட்டு

ராம்ஜி நகர் கொள்ளையர்கள் பாஷையில் கொன்னையன் என்றால் அவர் போலி நபர் என்று அர்த்தம். இவரை கைதியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்து அனுப்பிவைப்பதை கொன்னையனுக்கு தாலி கட்டுதல் எனச் சொல்கின்றனர். போலியாக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் நபர்களது வீட்டிற்கு ரூ.10 ஆயிரமும் அவரை ஜாமீனில் எடுத்து வெளியே கொண்டுவரவும் உதவுவார்கள். இந்த தொகைக்கு ஆசைப்பட்டு ராம்ஜி நகருக்கு வெளியே உள்ள சிலர் போலி குற்றவாளிகளாக போலீஸிடம் சிக்குகின்றனர்.  இவர்கள் இனத்தான் என தங்களை அழைத்துக் கொள்கின்றனர். திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டாலும் பெரும்பாலும் காவல் துறையினரிடம் சிக்கிக் கொள்வதில்லை. அப்படியே சிக்கிக் கொண்டாலும் அவர்களுக்குப் பதிலாக போலி நபர்களுக்கு காசு கொடுத்து சிறைக்கு அனுப்பி விடுவார்கள். என்ன ஆனாலும் இனத்தான் சிக்கிக் கொள்ளக் கூடாது(?) என்பதில் கவனமாக இருப்பார்களாம்.

அதையும் மீறி சிக்கிக் கொண்டால் பிணையில் வெளிவந்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிடுவார்களாம்.

திருச்சி  ராம்ஜி நகர் திருடர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளதாகவும், இதை வைத்து நபர்களை கடத்தி பணம் பறிப்பதாகவும், அந்த வகையில் தான் கடத்தி விடுவிக்கப்பட்டதாக கூறி அமர்நாதன்  என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளார்.

இப்படித்தான் போலீஸும் திருடர்களும் திருச்சி ராம்ஜி நகரில் கண்ணாம்மூச்சி ஆடுகிறார்கள். பொது மக்கள் சிக்கி தவிக்கிறார்கள்.திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இந்த திருடர்கள் எங்க திருந்தபோகிறார்கள். அப்புறம் என்ன மக்கள்தான் பாவம்.  

இவர்களை வழி நடத்தும் தலைவன் யார் ? அவர் எப்படி இவர்களை ஒருங்கிணைத்தார்- போலிஸை எப்படி சமாளிக்கிறார்கள் என அடுத்த வாரம் தொடரில்..

r

Leave A Reply

Your email address will not be published.