அரசுப் பள்ளிக்கு வாட்ஸ் அப்’ மூலம் நிதி திரட்டும் முன்னாள் மாணவர்கள்

0 9

கோவை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் வகுப்புகள் செயல்பட முடியாத நிலையில் உள்ளது. ஆசிரியர்களை நியமித்து அந்த பாடப் பிரிவை மீட்டெடுக்க முன்னாள் மாணவர்கள் ‘வாட்ஸ் அப்’ மூலம் நிதியுதவி கேட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 900-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேல்நிலை வகுப்பில் இரண்டு அறிவியல் பிரிவுகளும், கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல் ஆகிய பாடங்களைக் கொண்ட கலைப் பிரிவும் (3-வது குரூப்) உள்ளது. கிராமப்புறம் என்பதால், மதிப்பெண் மற்றும் தொழில் வாய்ப்புகளின் அடிப்படையில் ஏராளமானோர் 3-வது குரூப்பைத் தேர்வு செய்து படிக்கின்றனர். தற்போது பிளஸ் 2 வகுப்பில் இப்பிரிவில் மட்டும் 62 பேர் படித்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டில் மேலும் பலர் பிளஸ் 1 வகுப்பில் 3-வது குரூப்பில் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த பாடப் பிரிவை நடத்துவதற்குத் தேவையான ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி நிர்வாகம் திண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.

கோவை பள்ளிவேண்டுகோள்

இதையறிந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் சிலர் பள்ளியின் ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்யவும், கிராமப்புற மாணவர்களின் படிப்பை பாதுகாக்கும் வகையிலும் ‘வாட்ஸ்அப்’ மூலம் நிதியுதவி கேட்டு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். 3-வது குரூப் மூடப்படும் நிலையில் உள்ளதால், அதை செயல்படுத்த ரூ.1 லட்சம் வரை தேவைப்படுவதாகவும், உதவ முன்வரும் தன்னார்வ அமைப்புகள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மாணவர் செல்வராஜ் என்பவர் கூறும்போது, ‘பள்ளியின் மைதானம், கரும்பலகை, இரவுக் காவலர், கலையரங்கம் என பல வசதிகளை செய்து கொடுத்தோம். இப்போது ஆசிரியர் இல்லாத காரணத்தால், ஒரு பாடப்பிரிவே மூடப்படும் நிலை ஏற்பட்டிருப்பதால் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்’ என்றார்.

பரவலான பிரச்சினை

பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘2002-ம் ஆண்டு காலகட்டத்தில் தரம் உயர்ந்த மேல்நிலைப்பள்ளிகளுக்கு 6 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். அதனால் பல பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லை. அப்படி ஆசிரியர்கள் இல்லாத குரூப்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகமே ஆசிரியர்களை நியமிக்கிறது. சம்பளம் கொடுக்க மாணவர்களிடமே கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் தனியார், தன்னார்வ அமைப்புகளிடம் உதவி கோர வேண்டிய நிலை உள்ளது. அதுவும் முடியாவிட்டால் அந்த பிரிவுகளையே நீக்க வேண்டிய சூழல் இருக்கிறது. சமீபத்தில் தரம் உயர்ந்த பள்ளிகளில் இந்த பிரச்சினை குறைவு. எனவே அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்தால் மட்டுமே, பாடப்பிரிவுகளைத் தக்க வைக்க முடியும். இது பரவலாக இருக்கும் பிரச்சினைதான். இங்கு முன்னாள் மாணவர்கள் நிதி திரட்டுவது ஆறுதலாக இருக்கிறது’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.