திருமணம் பற்றி இஸ்லாம்

0 25

படைப்புகள் அனைத்தும் இணைகளாக இருத்தல் என்பது இறைவனின் பொது நியதி ஆகும். இதற்கு மனிதன், விலங்குகள் என்று எதுவும் இதற்கு விதி      விலக்கு அல்ல.

‘‘நாம் ஒவ்வொன்றையும் இணைகளாகப் படைத் திருக்கின்றோம். நீங்கள் இதில் இருந்து படிப்பினை பெறக்கூடும்’’ என்கிறது திருக்குர்ஆன் (51:49).

இவ்வாறு படைக்கப்பட்ட மனிதர்களில் ஆண், பெண் இனங்கள் சார்ந்தே வாழ வேண்டும்; அவர்கள் சேர்ந்தே வாழ வேண்டும்.

திருமணம் என்பதை அரபி மொழியில் ‘நிகாஹ்’ என்பர். இணைத்தல், சேர்த்தல் என்பது இதன் பொருளாகும். இருமனங்கள் இணைவதே திருமணம். திருமணம் என்பது உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், ஒழுக்கக்கேட்டில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடாகும்.

‘‘அவன் உங்களுக்காக உங்கள் இனத்தில் இருந்தே மனைவியரைப் படைத்தான், நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன’’ என்று திருமறையில் (30:21) இறைவன் கூறுகின்றான்.

திருமணத்தின் அவசியம் குறித்து இறைமறையும், நபிமொழியும் பெரிதும் வலியுறுத்துவதைக் காணலாம்.

‘‘(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத்துணை இல்லாவிட்டால் அவர் களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து விடுங்கள்’’ என்பது திருமறை (24:32) வசனம்.

‘‘இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி பெற்றவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்து கிறது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது’’

‘‘திருமணம் என்பது எனது வழிமுறை; இதைப் புறக்  கணிப்போர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’

மேற்கண்ட இந்த நபிமொழிகள் திருமணத்தின் மேன்மையைப் பறை சாற்றும் வைர வரிகள்.

இஸ்லாமியத் திருமணம் என்பது ஆண்–பெண் ஆகிய இருவருக்கு இடையே செய்யப்படும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாகும். ஒப்புக்கொள்வதாலேயே அது ஒப்பந்தம். இதை ஆங்கிலத்தில் ‘அக்ரிமெண்ட்’ என்கிறோம். ‘அக்ரி’ என்பதற்கு தமிழில் சம்மதம் என்று அர்த்தம்.

இதைத்தான் திருக்குர்ஆனில், ‘‘சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே; மேலும் அந்த மனைவியர் உங்களிடம் இருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கிறார் களே’’ (4:21) என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

கட்டாயத் திருமணத்தை இஸ்லாம் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. முறைப்படி மணமகன், மணமகளின் சம்மதம் பெறுவதே இஸ்லாமிய திருமண முறையாகும்.

‘இறை நம்பிக்கையாளர்களே! பெண்களை அவர்கள் விருப்பமின்றி (கட்டாயப்படுத்தி) நீங்கள் உரிமையாக்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல’ என்று திருமறை (4:9) கூறுகிறது.

இஸ்லாமியத் திருமணங்களில் சடங்குகள் இல்லை. சுருங்கச்சொன்னால் அது ஒரு பதிவுத்திருமணம். திருமணப் பதிவுப்பத்திரத்தில் மணமகனும், மணமகளும் கையெழுத்திட வேண்டும். அதேபோல, மணமகனின் தந்தையும், மணமகளின் தந்தையும் ஒப்புதல் அளித்து ஒப்பமிட வேண்டும். பொதுவான சாட்சிகள் இருவர் முன்னிலையில், இமாம் திருமணத்தை நடத்தி வைப்பார்.

திருமணத்திற்கு முன்பே மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

நபித்தோழர் முகீரா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மணக்க விரும்பி பெண் பேசினார். அவரிடம் நபிகளார், ‘‘அந்தப் பெண்ணை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களிடையே அன்பு நிலைத்திருக்க உதவும்’’ என்றார்கள்.

இஸ்லாமியத் திருமணங்களில் இன்னொரு சிறப்பும் உண்டு. ‘மஹர்’ கொடுத்து செய்யப்படும் திருமணமே உயர்ந்த திருமணம் என்பது மட்டுமல்ல; முறையான திருமணமும் ஆகும். இதுவே இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் திருமணமாகும். ‘மஹர்’ என்பது திரு  மணத்தின்போது மணமகன், மணமகளுக்கு அளிக்க வேண்டிய மணக்கொடையாகும்.

‘வசதியுள்ளவன் தனது சக்திக்கு ஏற்பவும், வசதியற்றவன் தனது சக்திக்கு ஏற்பவும் (மஹரை) நல்ல முறையில் கொடுத்திட வேண்டும்’ (2:236) என்றும், ‘பெண்களுக்கு அவர்களுக்கு உரிய மஹரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்து விடுங்கள்’ (4:4) என்றும் திருமறை தெரிவிக்கிறது.

திருமண ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துகின்ற வகையிலே அமைந்துள்ள இந்த ‘மஹர்’, தான் கைப்பிடித்த பெண்ணுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளைத் தன்னால் இயன்றளவு செய்து தருவேன் என்று மணமகன் அளிக்கும் ஓர் உத்தரவாதமாகும்.

‘திருமணத்தில் நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந் தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் அவர்களுக்குத் தரும் ‘மஹர்’ தான்’ என்பது நபிகளாரின் கூற்றாகும்.

மஹரைப் பணமாகவோ அல்லது நகையாகவோ, பொருளாகவோ வழங்கலாம். மஹர் எவ்வளவு அதிகமாகவும் செலுத்தலாம். அதற்கு உச்சவரம்பு கிடையாது.

‘நீங்கள் அவர்களில் ஒருத்திக்கு செல்வக் குவியலையே (மஹராகக்) கொடுத்திருந்தாலும்கூட அதில் இருந்து எதையும் திரும்ப எடுத்துக் கொள்ளாதீர்கள்’ (4:20) என்பது இறைமறை வசனம்.

திருமணத்தின்போது கட்டாயம் ‘மஹர்’ வழங்க வேண்டும் என்பதால், இஸ்லாமியத் திருமணங்களில் வரதட்சணைக்கு தானாகவே தடை விதிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.