ரமலான் கற்றுத் தரும் பாடம்

0 16

எந்த ஒரு பயிற்சியை மேற்கொள்வதற்கும், உடல் சார்ந்த, அறிவு சார்ந்த ஒரு தகுதியை நாம்  நிர்ணயம் செய்திருக்கிறோம். ஆன்மிகம் சார்ந்த நல்லருளை பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹ் புனித ரமலான் மாதத்தை நமக்கு அருளி இருக்கின்றான். புனித ரமலான் நாட்களில் நாம் மேற்கொள்ளும் பயிற்சிகள், பின்நாளில் நமது செயல் களில் பிரதிபலிப்பதை நாம் உணர முடியும்.

பாவங்களாலும், கெட்ட செயல்களாலும் கடினப்பட்டுபோன மனங்களையும், உடற்கூறுகளையும் மென்மைப்படுத்த மனிதனை முதலில் பக்குவப்படுத்த வேண்டும். உடலில் திமிர், மனதில் ஆணவம் இவை இரண்டும் இருக்கின்ற வரையில் மனிதன் நியாயத்தின் பக்கம் திரும்பமாட்டான். எனவே முதலில் அதை மாற்றவேண்டும்.

அவனுக்கு பசியாலும், தாகத்தாலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டால் பலவீனமான உடலும், மனமும் பாவச்செயலை எண்ணிப் பார்க்கவே அச்சம் கொள்ளும். ஏழைகள் அனுபவிக்கும் பசியின் கொடுமையும், தாகத்தின் தவிப்பையும் அவன் உணர்ந்து கொள்வான். இதன்மூலம் அவன் இறைவனை நோக்கி பயணிக்கத்தொடங்குவான்.

ஈமானின் மறுபெயரே இறையச்சம். மனிதனிடம் இறையச்சம் தஞ்சம் கொள்ளும் போது நன்றியுணர்ச்சியும் அவனிடம் சேர்ந்து கொள்ளும். அந்த நன்றியை வெளிப்படுத்த அல்லாஹ்வை வணங்குவதற்கு அவன் முயற்சிகள் மேற்கொள்வான்.

அதனால் தான் ரமலான் மாதத்தில் ஐந்துவேளைத் தொழுகைகளோடு உபரி தொழுகைகளாக பலவற்றை தொழக்கூடிய வாய்ப்பினை இறைவன் நமக்கு அருளியுள்ளான். குறிப்பாக இரவு நேரத்தொழுகை ‘தராவீஹ்’, நடுநிசித் தொழுகை ‘தஹஜ்ஜத்’, ‘கியாமுல் லைல்’, பகல் பொழுதில் ‘இஸ்ராக்’, ‘லுஹா’, அந்தி சாய்ந்த வேளையில் ‘அவ்லாபீன்’ போன்ற  தொழுகைகள் உள்ளன.

கிட்டதட்ட முப்பது நாட்கள் முனைப்போடு செயல்படுத்தப்படும் இந்த தொழுகைகளின் நன்மைகள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவிப் பதியும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் ரமலான் தவிர்த்த மற்றைய நாட்களிலும் அந்த தொழுகைகளை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பினை அந்த பயிற்சிகள் நமக்கு கற்றுத்தருகின்றன.

செல்வங்கள் தேங்கிக்கிடந்தாலோ, பாதாள அறைகளில் பதுங்கி கிடந்தாலோ, பன்னாட்டு வங்கிகளில் வலம்வந்து கொண்டிருந்தாலோ அது படைக்கப்பட்ட நோக்கத்தை அடைந்து விட்டதாக அர்த்தமல்ல. அது பலரிடம் சுழற்சி முறையில் சுழன்று கொண்டிருக்க வேண்டும்.

ஏழை ஏழையாகவோ, வசதி படைத்தவன் வசதியோடு வாழ்வதோ ஒரு சமுதாயத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தாது. மாறாக முன்னேற்றம் காணாத தேக்க நிலையையே அது உருவாக்கும்.

இதை மாற்றவேண்டும் என்றால் ஒவ்வொருவரும் அந்த ஆண்டில் சம்பாதித்ததில் 2½ சதவீதம் ஜகாத் கொடுக்க வேண்டும். பொது நிதியில் அந்த பணம் சேர்க்கப்பட்டு அது தேவைப்படுபவர்களுக்கு பயன்படுத்தப்படவேண்டும்.

இதன் மூலம் சமூக கட்டமைப்பில் பொருளாதார மேம்பாடு கொஞ்சம் கொஞ்சமாக உருவாகும். எனவே தான் ஜகாத் கொடுப்பது ரமலான் மாதத்தில் வலியுறுத்தப்படுகின்றது. ஒவ்வொருவரும் தகுதிபெற்றுவிட்டால் கட்டாய கடமையாக இதனை நிறைவேற்ற வேண்டும். இதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சமன் செய்யப்படலாம்.

ஒட்டி வாழ வேண்டிய உறவை மனிதன் வெட்டி வாழ்வதால் தான் குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஆனால் அல்லாஹ்வின் கட்டளை அதற்கு மாற்றமானது. இது குறித்து அருள்மறை திருக்குர்ஆன் கூறுகிறது:

‘‘இன்னும் நல்லடியார்கள் எத்தகையோர் என்றால் எதை சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அந்த உறவுகளைச் சேர்த்து வைப்பார்கள். இன்னும் தன்னுடைய இறைவனுக்கு அஞ்சி நடப்பார்கள்’’. (13:21)

எத்தனை நன்மைகள் செய்தபோதிலும் உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் நல்லடியார்கள் அந்தஸ்தைப் பெறமுடியாது என்பது தான் இதன் கருத்து.

‘‘உறவுகள் பாழ்படும் நிலையில் உலக அழிவை எதிர்பாருங்கள்’’ என்று கண்மணி நாயகம் கடுமையாய் எச்சரித்திருக்கிறார்கள்.

‘‘உறவுகளை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்’’ என்று நபிகள் நவின்றதாக ஜுபைர் இப்னு முத்கீம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முறிந்த உறவுகள் கூட ஒட்டி உறவாட முழு முயற்சியாய் முனைவது இந்த ரமலானில் தான். உறவுகளிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதையும் இந்த ரமலான் மாதத்தில் நாம் கண்கூடாய் காணமுடியும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் அது ஏற்படுத்தி தருகிறது.

அதிகாலை நோன்பு நோற்பதற்காக சஹர் உணவு, நோன்பு திறப்பதற்கு பரிமாறப்படும் இப்தார் பண்டங்கள் என்று உறவுகள் ஒன்றோடொன்று அன்போடு பரிமாறிக் கொள்வதை யார் ஒருவரும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாததால் இது உறவு பாலங்கள் உடையாமல் பாதுகாக்க வழிவகுக்கிறது.

பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகளில் உழன்று கொண்டிருக்கும் உறவுகளிடம் ஜகாத் பொருட்கள் வழங்கப்படும் போது இதயங்கள் இணைகின்றன. மற்ற மாதங்களைவிட ரமலான் மாதத்தில் அதிகமாக பள்ளிவாசல்களில் சந்தித்துக் கொள்ளும் உறவுகள் ஆரத்தழுவி அரவணைக்கும் போது உள்ளங்கள் விரிவடைந்து விடும். ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கும் மனமாச்சரியங்களும் மாயமாய் மறைந்துவிடும். ரமலான் மாதத்தில் மட்டுமே இதன் சாத்தியக்கூறுகள் அதிகமுண்டு.

பலரின் அகவாழ்வு பறிபோவதற்கு ஒரு சிலரின் சுயநலபோக்கு காரணமாகி அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எல்லாமே பொதுவாகிவிடும் போது இல்லாமை இல்லாத நிலை ஏற்படும். அத்தகைய உன்னத சூழ்நிலையை இந்த ரமலான் நமக்கு கற்றுத்தருகிறது.

உளத்தூய்மையோடு நோன்பிருந்து, உலக ஆசாபாசங்களைத் துறந்து, உறக்கம் தவிர்த்து, தனக்காகவும், குடும்பத்திற்காகவும், ஊருக்காகவும், பிறந்த நாட்டிற்காகவும், உலகளாவிய நன்மைக்காகவும் வேண்டி இறைஇல்லங்களில் தங்கியிருந்து இரவெல்லாம் தனித்திருந்து, இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆ செய்யக்கூடிய உன்னத அமல் நற்செயல் ‘இஃதிகாப்’ எனப்படும். இதனை ரமலான் மாதம் கடைசி பத்து இரவுகளில் மட்டுமே கடமையாக நிறைவேற்ற முடியும். மற்றைய நாட்களில் தங்கள் சொந்த தேவைகளுக்காகவும் நிறைவேற்றலாம்.

இப்படிப்பட்ட உன்னதமான வழிபாடு உலகம் முழுவதும் அமைதியை, நிம்மதியை பெற்றுத் தருமானால் அதற்கான வழியை இந்த ரமலான் தானே வகுத்து தருகிறது.

ஆய்வுகள் பல சொல்வதெல்லாம், உலகில் பாவங்கள் தோன்ற இச்சைகள் தான் அடிப்படையாய் அமைந்திருக்கின்றன. அந்த இச்சைகளை இறைவனுக்காக துறந்து, எண்ணங்களின் கறைகளை நீக்கி, மனதின் மாசுக்களைப் போக்கி, சிந்தனையை சீர்படுத்தி, எலும்பற்ற உறுப்புகளைப் பாதுகாத்து, உடம்பை வருத்தி, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, அகத்திலும், புறத்திலும் அல்லாஹ்வின் நினைவோடு வாழ்வதற்கு பயிற்சிக்களமாக அமைவது தான் இந்த ரமலான் மாதம்.

ரமலான் மாதம் பசி, பட்டினி, தாகம், தவிப்பு என்ற நிலையில் ஒருவனைப் பக்குவப்படுத்தி, அதன்பின் ஒவ்வொரு நற்செயல்களையும் விதைத்து, இறையச்சம் கொண்ட முழுமையான மனிதனாக உருவாக்குகிறது. இந்த முப்பது நாட்களில் செய்தவற்றை சுயபரிசோதனை செய்து மீதமுள்ள காலங்களில் கட்டுப்பாடாய் வாழ வழி அமைத்து தருவதும் இந்த ரமலான் நோன்பு தான். இதுதான் உண்ணா நோன்பின் உண்மையான நோக்கம்

Leave A Reply

Your email address will not be published.