நம் குடும்பத்தில் தேவ சித்தம்

0 12

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, இந்த நாட்கள் படிக்கிற பிள்ளைகளின் வாழ்வில் மிகமிக முக்கியமான நாட்கள். பெற்றோருடைய வாழ்விலும் முக்கியமான நாட்கள்.

எந்த பள்ளியில் அல்லது கல்லூரியில் பிள்ளைகளை சேர்ப்பது?, எந்த படிப்பில் சேர்க்க வேண்டும்?, கல்விக் கட்டணம் எவ்வளவு கட்டவேண்டுமோ தெரியவில்லையே என பலதரப்பட்ட குழப்பங்கள் பெற்றோர்களிடம் காணப்   படும். இதில், தேவசித்தம் எது என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையே என பாரத்தோடும், கேள்விகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற அன்புப் பெற்றோர்களே இச்செய்தியை கவனமாக வாசியுங்கள்.

தங்கள் பிள்ளைகளின் திருமண காரியம் மற்றும் வேலை காரியம், வீடு கட்டுதல் போன்ற முக்கியமான முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ள அன்பு சகோதரனே, சகோதரியே, இந்த மாதம் உங்கள் வாழ்வில் ஒரு அற்புதத்தை தேவன் செய்யப் போகிறார். எனவே ஒரு எதிர்பார்ப்போடு இச்செய்தியை வாசியுங்கள்.

தேவ சித்தமே முக்கியம்

நம் வாழ்வில் எந்த காரியத்தை நாம் செய்ய வேண்டுமானாலும் ‘அது தேவசித்தமா?’ என்பது தான் முக்கியம். அவருடைய சித்தம் நம் வாழ்வில் அல்லது நம் பிள்ளைகள் வாழ்வில் நடக்கும் போது தான் நம் வாழ்க்கை அல்லது நம் பிள்ளைகளின் எதிர்காலம் ஆசீர்வாதமாயிருக்கும். எனவே ஆண்டவருடைய சித்தத்திற்கு நம்மை முதலாவது அர்ப்பணிக்க வேண்டும்.

(சங்.37:5)–யை வாசித்துப் பாருங்கள். ‘உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்’.

ஆண்டவருடைய கரத்தில் நம்மை அர்ப்பணித்து அவருடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவேறும்படி நம்பிக்கையோடு காத்திருக்கும்போது, கர்த்தர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார்.

தேவ சித்தத்திற்கு அர்ப்பணியுங்கள்

மரியாளிடத்தில் தேவதூதன் வந்து அவள் மூலமாய் இயேசு இந்த உலகில் வெளிப்படப்போவதை அறிவித்தவுடன் மரியாள் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?

‘இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது’. (லூக்.1:38)

மரியாள் தன்னை ஆண்டவருடைய சித்தத்திற்கு அர்ப்பணித்ததால் தான் அவள் மூலமாய் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்பட்டார். அதுபோலவே சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் அவருடைய சித்தத்துக்கு நம்மை அர்ப்பணிக் கும்போது நாம் எதிர்பார்த்திருக்கிற, காத்திருக்கிற ஆசீர்வாதங்களை நமக்குத் தருவார். இதன் மூலம் தேவ நாமம் மகிமைப்படும்.

தேவ சித்தத்தின்படி ஜெபியுங்கள்

இன்று அநேகர் தங்கள் விருப்பப்படி எல்லாம் நடைபெறவேண்டும் என்ற ஆசையோடு அதுவே தேவசித்தமாக இருக்கட்டும் என ஜெபிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஜெபம் ஒருநாளும் கேட்கப்படாது.   ஏனெனில் வேதம் சொல்லுகிறது:

‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிக்கொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்’. (1 யோவா.5:14)

எனவே நாம் ஜெபிக்கும்போது ‘உம் சித்தம் எங்கள் குடும்பத்தில் வெளிப்படுவதாக’ என ஜெபித்தால் நிச்சயம் நம் ஆண்டவர் நம் ஜெபத்திற்கு பதில் தருவார். நம் வாழ்வும் சமாதானமாக அமையும்.

தேவசித்தத்தின்படி நம் வாழ்க்கை அல்லது நம் பிள்ளைகளின் வாழ்க்கை அமையுமானால் அதைப் போல ஒரு மேலான ஆசீர்வாதம் வேறொன்றுமில்லை. எனவே தேவசித்தத்துக்கு உங்களை அர்ப்பணியுங்கள். தேவ சித்தம் நிறைவேற காத்திருங்கள், ஜெபியுங்கள், அற்புதங்களைக் காண்பீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.