இலாசர்

0 22

இலாசர் இயேசுவின் நண்பர். அவருடைய சகோதரிகள் மார்த்தா, மரியா இருவரும் இயேசுவின் போதனைகளின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தவர்கள்.

இலாசர் நோய்வாய்ப்பட்டான். அந்த தகவல் இயேசுவிடம் பரிமாறப்பட்டது. இயேசு தொலைதூரத்தில் இருந்தார், அந்த செய்தியைக் கண்டுகொள்ளவில்லை.

சீடர்கள் அவரிடம், ‘போதகரே… உமது நண்பன் நோயுற்றிருக்கிறான்’.

‘பயப்படாதீர்கள், சாவில் முடிவதற்கான நோயல்ல இது.  கடவுளின் மாட்சி விளங்குவதற்கான நோய்’ என்று சொல்லி இயேசு அங்கேயே தங்கினார்.

இரண்டு நாட்களுக்குப் பின் இயேசு சீடர்களை அழைத்து, ‘வாருங்கள் போவோம்’, என்றார்.

‘எங்கே செல்கிறோம்?’

‘இலாசரைப் பார்க்க’

‘ரபி… அங்கே சென்றால் யூதர்கள் நம்மீது தாக்குதல் நடத்துவார்கள்….’

‘வாருங்கள், இலாசர் தூங்குகிறான். அவனை எழுப்பவேண்டும்’ என்றார் இயேசு.

‘தூங்குகிறானா? அது நல்லது தானே போதகரே, தூங்கினால் அவன் நலமடைவான்’.

‘எனதருமை சீடர்களே… இலாசர் இறந்து விட்டான், வாருங்கள் போவோம்…’

அதிர்ந்த சீடர்கள் இயேசுவோடு சேர்ந்து பெத்தானியாவுக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் பெத்தானியாவை அடைந்த போது இலாசரைக் கல்லறையில் வைத்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது.

இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்னும் செய்தியைக் கேட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு விரைந்தோடினாள்.

‘ஆண்டவரே… நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்…’ என்று அழுதாள்.

‘மார்த்தா… கவலைப்படாதே. இலாசர் உயிர்த்தெழுவான்’, இயேசு சொன்னார்.

‘ஆண்டவரே.. இறுதி நாளில் எல்லோரும் உயிர்த்  தெழும்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்…’ அவள் அழுகை அடங்கவில்லை.

‘மார்த்தா… உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னை நம்புகிறவன் இறந்தாலும் வாழ்வான். இதை நீ நம்புகிறாயா?’

‘நம்புகிறேன் ஆண்டவரே. நீர் கடவுளின் மகன். நீர் சொன்னால் நடக்காதது என்று எதுவுமே இல்லை. அதை நான் முழுமையாக நம்புகிறேன்’.

மரியாவுக்கும் செய்தி கிடைக்க அவரும் விரைந்தோடி வந்தார்.

மரியாவின் புலம்பல் இயேசுவின் மனதைக் கரைத்தது. அவருடைய கண்களில் கண்ணீர்.

‘பார்… இவர் இலாசரை எந்த அளவுக்கு நேசித் திருக்கிறார். இவர் அழுவதை நாம் கண்டதேயில்லையே’ யூதர்கள் பலவாறாகப் பேசிக்கொண்டார்கள்.

இயேசுவோ மரியாவிடம் ‘இலாசரை எங்கே வைத்தீர்கள்? அவனுடைய கல்லறை எங்கே இருக்கிறது?’ என்று கேட்டார்.

‘வந்து பாரும் இயேசுவே’ என்று மரியா உடைந்த குரலில் சொல்ல இயேசுவின் கண்களில் மீண்டும் கண்ணீர்.

இயேசு கல்லறையின் முன்னால் வந்து நின்றார். அந்தக் காலத்தில் கல்லறை என்பது ஒரு குகை போன்று இருக்கும்.

இறந்துபோனவனை துணிகளால் சுற்றி நறுமணத் தைலம் பூசி உள்ளே வைத்து அதன் வாசலை எளிதில் நகர்த்த முடியாத மிகப் பெரிய பாறாங்கல்லைக் கொண்டு மூடி வைப்பார்கள். இலாசரும் அப்படி ஒரு குகையில் தான் அடக்கம் செய்யப்பட்டிருந்தான்.

‘கல்லை நீக்குங்கள்’ இயேசு சொன்னார். இலாசரின் சகோதரி மார்த்தாவும் இயேசுவிடம், ‘ஆண்டவரே… நான்கு நாட்களாயிற்றே… நாற்றம் அடிக்குமே’ என்று தழு     தழுக்கும் குரலில் சொன்னாள்.

‘நம்பினால் நீ கடவுளின் மாபெரும் செயல்களைக் காண்பாய் என்று நான் சொன்னேனே’ இயேசு அவளைப் பார்த்துச் சொன்னார்.

கல் புரட்டப்பட்டது.

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து ‘தந்தையே… உமக்கு நன்றி. நீர் எப்போதும் எனக்குச் செவி கொடுக்கிறீர் என்பதை நான் அறிவேன். நீர் தான் என்னை அனுப்பினீர் என்பதை சூழ்ந்திருக்கும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறேன்’ என்றார்.

பின் இயேசு, கல் புரட்டப்பட்ட கல்லறையை நோக்கி உரத்த குரலில் ‘இலாசரே… வெளியே வா’ என்றார்.

இலாசர் வெளியே வந்தான்!

இறந்து போய் நான்கு நாட்களாகக் கல்லறையில் கிடந்த பிணம் உயிர்பெற்று எழுந்து நடந்து வந்துகொண்டிருப்பதைக் கண்ட மக்கள் திடுக்கிட்டுப் பின்வாங்கினார்கள். இலாசரின் உடல் முழுவதும் துணியினால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.

‘கட்டுகளை அவிழ்த்து அவனை நடக்கவிடுங்கள்’ இயேசு சொன்னார்.

இலாசரின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. நல்ல உடல் நலத்துடன் அவர் இயேசுவின் முன்னால் வந்தார்.

அந்த நிகழ்வைக் கண்ட அனைவருமே இயேசுவை நம்பினார்கள். இயேசுவின் எதிர்ப்பாளர்களுக்கும், ஆலய குருக்கள், மறைநூல் அறிஞர்களுக்கும் இது ஒரு மிகப்பெரிய தோல்வியாய் அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.