இறை வேண்டல் செய்வதற்கான தகுதி

0 15

எதெல்லாம் நன்மையாகத் தெரிகிறதோ, அதையெல்லாம் பெற்று விட வேண்டும் என்பது மக்களிடம் இயல்பாக காணப்படும் எண்ணம். பெற்றுவிடக் கூடியதை, யாரையெல்லாமோ பிடித்து பெறுவதற்காக முயற்சிக்கின்றனர். பெற முடியாததற்காக, அவரவரின் இறைவனிடம் வேண்டுதல் வைக்கின்றனர். கிறிஸ்தவத்தைப் பொறுத்த அளவில், இறைவேண்டலுக்கு அடிப்படை தகுதி தேவைப்படுகிறது.

இறைவன் தான் படைத்த எல்லாருக்குமே உலகில் வாழத்தேவையான அனைத்தையும் அவர் நிர்ணயித்தபடி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதில் பக்தன், பாவி, வேறு மதம், நாத்திகன் என்ற வகைப்பாடுகள் கிடையாது. பாவிகளுக்கும் அவர் வழியைக் காட்டுகிறார் (சங்.25;8).

அந்த வகையில் இயல்பாகக் கிடைக்கும் நன்மைகள் என்பது வேறு, இறைவனால் அருளப்படும் நன்மைகள் என்பது வேறு. உலக ரீதியான தகுதிகள் இல்லை என்றால்கூட குறிப்பிட்ட சில நன்மைகளைப் பெற்றிருப்பது, இறைவன் அளிக்கும் நன்மை அல்லது ஆசீர்வாதமாக கருதலாம். ஆனால் இப்படிப்பட்ட நன்மைகள் வந்து சேர வேண்டுமென்றால், பக்திக்கான தகுதியை பக்தன் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அது என்ன?

மிகப்பெரிய செல்வந்தனாக இருந்த பக்திமான் யோபு, அனைத்து செல்வத்தையும் திடீரென இழந்ததோடு, உடல் நலனையும் இழந்ததால் உலகத்தில் வாழும் தகுதியை இழந்தவன்போல் காணப்பட்டான். செல்வச்செழிப்புடன் இருக்கும் உண்மை பக்தன், வாழத் தகுதியற்ற நிலையை அடைந்தாலும்கூட பக்தியில் இருந்து மாறவே மாட்டான் என்பது இறைவனின் கருத்தை யோபுவின் வாழ்க்கை பிரதிபலிக்கிறது.

ஆனால் இந்த கருத்தை சாத்தான் எதிர்த்தான். தனது கருத்தை பக்தர்கள் அனைவருக்கும் உணர்த்துவதற்காக, யோபுவின் வாழ்க்கையை இறைவன் தேர்ந்தெடுத்தார். அனைத்து ரக துன்பங்களையும் அவன் வாழ்க்கையில் கொண்டு வர சாத்தானுக்கு இறைவன் அனுமதித்தார்.

யோபு அனைத்து வகை துன்பங்களினாலும் கசக்கி பிழியப்பட்டான். வியாதியினால் உடல் நாறிப்போனாலும், அவன் கொண்ட பக்தியின் மணம் மாறவில்லை என்பதை உலகுக்குக் காட்டி, தனது கருத்தை இறைவன் நிலைநிறுத்தினார். வேதத்தில் யோபுவின் சம்பவம் எழுதப்பட்ட பிறகுதான், அவனுக்கு துன்பம் வந்ததற்கான காரணத்தின் பின்னணி உலகத்துக்கு புரிய வந்தது.

அந்த உண்மையின் பின்னணி புரியாததால், யோபுவைப் பார்க்க வந்திருந்த அவனது நண்பர்கள், அவனுக்கு துன்பம் நேர்ந்த சம்பவத்தின் உண்மையைத் தொடாமல், ஆளாளுக்கு ஒரு கருத்தைக் கூறினார்கள். அவர்கள் கூறியதும் சத்தியம்தான் என்றாலும்கூட, யோபுவின் விஷயத்தில் அவை பொருத்த மானவை அல்ல. எனவேதான் யோபுவுக்கு நண்பர்கள் மேல் பகை ஏற்பட்டது (யோபு 27;5,7).

யோபு பொதுவான கருத்தாகக் கூறாமல், ‘என் பகைவன், ஆகாதவன், என் விரோதி, அக்கிரமக்காரன்’ என்று அவர்களை தன்னுடன் இணைத்துப் பேசுவதை வைத்து, அவனிடமிருந்த பகையை அறியலாம். அறிமுகம் ஆகாதவர்களுடன் ஏற்படும் பகையைவிட, நன்றாகப் பழகினவர்களுடன் உருவாகும் பகை மிகக்கொடியது.

அப்படிப்பட்ட பகையை இதயத்தில் வைத்துக் கொண்டு ஒருவன் தன்னை இறைபக்தன் என்று கூறிக்கொள்வது அபத்தம். ஏனென்றால், பகைக்கப்படுபவனை சபித்து, பக்திக்கான நிதானத்தை இழக்கச் செய்யும் சக்தி, பகைக்கு உண்டு.

இறைவனைப் பற்றிய விஷயத்தில் நிதானத்தோடு சரியாகப் பேசியிருந்தாலும் (யோபு 42;7,8), நண்பர்களைப் பற்றிய விஷயத்தில் கடும் வார்த்தைகளை யோபு பேசியிருந்தான். எனவேதான் இரண்டு தரப்பினருக்கும் இடையே சமாதானத்தை உருவாக்க இறைவன் விரும்பினார்.

யோபுவின் நண்பர்களிடம், ‘யோபுவின் இடத்துக்குப் போய் பலி செலுத்த வேண்டும். யோபு உங்களுக்காக வேண்டுதல் செய்யும்போது அவனின் முகத்தைப் பார்ப்பேன்’ என்று இறைவன் கூறினார் (யோபு 42;8). உள்ளத்தில் பகை வைத்திருந்தால் அது முகத்தில் தெரியவரும் என்பதால்தான் இறைவன் அப்படி குறிப்பிட்டார்.

யோபு உத்தமன் என்பதால் உங்களுக்காக வேண்டும்போது, அதை நான் கேட்டு, உங்களை தண்டிக்கமாட்டேன் என்று முன்கூட்டியே அவனது நண்பர்களிடம் இறைவன் கூறினார். கடுமையான துன்பத்திலும் தன் மீதான பக்தியை விட்டுவிடாத யோபுவால், பக்திக்கு ஆகாத பகையை எளிதாக விட்டுவிட முடியும் என்பது இறைவனுக்கு தெரிந்திருந்த ஒன்றுதான்.

நல்ல நட்பில் இருக்கும் நண்பர்களுக்காக வேண்டுதல் செய்வது மிக எளிது. இதற்காக இறைவன் தனியாக கட்டளையிடவோ, அந்த வேண்டுதலின்போது முகத்தைப் பார்க்கவோ தேவையில்லை. ஆனால் பகையாளிக்காக ஜெபிப்பது மிகமிகக் கடினம். எனது குடும்பத்தைவிட என்னை பகைப்பவனின் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று இதயப்பூர்வமான வேண்டுதலை, ஒரு உண்மையான கிறிஸ்தவ பக்தனால் மட்டுமே வைக்க முடியும். இப்படிப்பட்ட தூய இதயத்துக்குச் சொந்தக்காரனே, மற்றவனுக்காக வேண்டுதல் செய்யும் தகுதியை உடையவனாகிறான்.

ஆனால், நண்பர்களுக்காக வேண்டுதல் செய்துவிட்டால், இறைவன் அவனது துன்பங்களை நீக்கிவிட்டு, இரட்டிப்பு ஆசீர்வாதத்தை அள்ளி வழங்குவார் என்று நுனிப்புல் போதனையை சிலர் பேசி வருகின்றனர். இதன்படி பார்த்தால், நண்பர்களின் தவறுகளுக்காக இறை வேண்டல் செய்துவிட்டு, யோபுபோல ஆசீர்வாதங்களை எல்லாருமே எளிதாகப் பெற்றுவிட முடியுமே.

தன்னை துன்புறுத்துகிறவர்கள் யார்? எந்த சமுதாயத்தினர்? என்பதையெல்லாம் பார்க்காமல், இறைவனை நோக்கி அவர்களின் மன்னிப்புக்காக வேண்டிய ஸ்தேவானின் வேண்டுதல் கேட்கப்பட்டதால்தான், கொலையாளி சவுல், ஆன்மிகவாதி பவுலாக மாறினான் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

தன்னிடம் இருந்து மன்னிப்பை பெற்ற பக்தன், தன்னைப்போல மற்றவர்களுக்கு மன்னிப்பை அருளுகிறானா, என்று அவனது முகத்தை பார்க்கிறவராக இறைவன் இருக்கிறார். நம் முகத்தில் இருப்பது பகையா? பாசமா?.

Leave A Reply

Your email address will not be published.