மகத்துவம் நிறைந்த ரமலான்

0 16

புனித ரமலான் மாதத்திற்கு ‘ஷஹ்ருல் இஸ்திபார்’ (பாவமன்னிப்பு வேண்டப்படும் மாதம்) எனும் தத்துவப்பெயரும் உண்டு. ஒரு நோன்பாளி தான் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, மனம் விரும்பியோ, மனம் விரும்பாமலோ செய்த, செய்கின்ற, செய்யப்படுகின்ற சிறிய–பெரிய தவறு களுக்கும், பாவங்களுக்கும் கண்டிப்பாக பாவமன்னிப்பு கோர வேண்டும்.

மேலும் முஸ்லிம்களாக இறந்துபோன பெற்றோர், உற்றார், உறவினர், அண்டை அயலார், சகோதர–சகோதரியர், தற்காலத்தில் வாழும் உலக முஸ்லிம்கள், காலம் கடந்து சென்ற முஸ்லிம்கள், பாவமன்னிப்பு கோரவேண்டிய கோரிக்கை வைக்கும் முஸ்லிம்கள்… என அனைவருக்கும் படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடவேண்டும்.

பாவமன்னிப்பு தேடுவதற்கு நேரமோ, காலமோ, கிழமையோ, மாதமோ குறிக்கப்  படவில்லை. பாவமன்னிப்பு இப்பொழுதும் தேடலாம், இனி எப்பொழுதும் தேடலாம். நடந்துவிட்ட பாவங்களுக்கும் தேடலாம்; இனி நடக்கவிருக்கிற பாவங்களுக்கும் தேடலாம். எனினும்  புனித ரமலான் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவமன்னிப்பு வேண்டு வதற்கும் ஒரு விசேஷமான மாதம். ஆதலால் புனித ரமலானில் கூடுதலாக கவனம் செலுத்தி அதிகமாக பாவமன்னிப்பு வேண்டப்படுகிறது. இதுதான் ரமலானின் தனித்துவமான மகத்துவம்.

‘‘எவர் ரமலான் மாதம் (அல்லாஹ்வின் நற்கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பிருக்கிறாரோ, அவருக்காக அவன் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) புகாரி: 1901)

‘‘ஐங்காலத் தொழுகைகள், ஒரு ஜும்ஆவில் இருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு வருட ரமலானில் இருந்து மறுவருட ரமலான் வரை இவற்றுக்கிடையில் பெரும்பாவங்களை தவிர்த்திருந்தால் அவைகள் (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பரிகாரமாக அமைந்து விடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (முஸ்லிம்)

நோய்க்கு சிகிச்சை பார்ப்பது போன்று, பாவத்திற்கும் சிகிச்சை பார்க்கவேண்டும். பாவத்திற்கு சிகிச்சையாகவும், மருந்து நிவாரணமாகவும் ‘இஸ்திபார் – பாவமன்னிப்பு வேண்டுதல்’ அமைந்துள்ளது. இதை புனித ரமலானில் அதிகம் தேடவேண்டும். குறிப்பாக ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள இரண்டாவது பத்து நாட்கள் பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவங்கள் மன்னிக்கப்படும் பகுதியாகவும் அமைந்துள்ளது. முடிந்தளவு நோன்பாளிகள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று, புண்ணியங்களை தேடி புறப்பட்டு, புது மனிதர்களாகவும், புனிதர்களாகவும் மாற்றம் பெறவேண்டும்.

‘‘யார் லைலத்துல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ, அவர் (அதற்கு) முன் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) புகாரி)

‘‘அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ர் எது என்று நான் அறிந்து கொண்டால், அதிலே நான் என்ன கூற வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள்?’’ என ஆயிஷா (ரலி) கேட்டபோது, ‘இறைவா! நீ மன்னிப்பவன்; மன்னிப்பை நேசிப்பவன்; எனவே எனது பாவத்தை நீ மன்னித்துவிடு!’ என்பதை நீ ஓதி வா என நபி (ஸல்) கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) திர்மிதி).

‘‘எனது சமுதாயத்திற்கு ரமலான் மாதத்தில் ஐந்து அருட்பாக்கியங்கள் பிரத்தியேகமான முறையில் வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: அபுஹீரைரா (ரலி) நூல்: அஹ்மது)

புனித ரமலான் மாதம் முழுவதும் பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நாட்களாக உள்ளது. ரமலான் அல்லாத காலங்களிலும் பாவமன்னிப்பு தேடலாம்.

‘பயபக்தியாளர்கள் விடியற் காலங்களில் (சஹர் நேரம்) மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள்’ (51:18), ‘அவர்கள் (இரவின் கடைசி) சஹர் நேரத்தில் மன்னிப்புக்கோருவோராகவும் இருப்பார்கள்’ (3:17) என்பது திருக்குர்ஆன் மொழியாகும்.

பாவமன்னிப்பு வேண்டுவது பாவம் செய்யும் பாமரர்களின் செயல்மட்டும் அல்ல. பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட நபிமார் களும், ஆதி நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்கும் பாவமன்னிப்பு வேண்டியுள்ளார்கள்.

அனைத்து நபிமார்களும் பாவம் செய்தார்களா? என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் பாவமன்னிப்பு வேண்டியது அவர்கள் செய்த பாவத்திற்காக அல்ல. பாவம் செய்யும் மனிதன் இறைவனிடம் எப்படி பாவமன்னிப்பு வேண்டும் என்பதை கற்றுத்தருவதற்காகவே அன்றி வேறு இல்லை.

மனிதனை பொறுத்த அளவில் பாவமன்னிப்பு தேடுவது பாவங்களிலிருந்து விடுபட. நபிமார்களை பொறுத்த அளவில் அவர் களின் அந்தஸ்து மேம்பட பலவழிகள் உண்டு. அதில் இதுவும் ஒன்று.

ஆதம் (அலை) அவர்களின் பாவமன்னிப்பு:

‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்’’ (திருக்குர்ஆன் 7:23)

நபி (ஸல்) அவர்களின் பாவமன்னிப்பு:

‘என் மனதிலே ஒருவிதமான நெருடல் உள்ளது. நான் ஒரு நாளைக்கு நூறுதடவை அல்லாஹ்விடம் பாவ மீட்சி தேடுகிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள்.

பாவமன்னிப்புத் தேடுவதால் கிடைக்கும் பலன்கள்:

மன அமைதி ஏற்படுகிறது, உள்ளம் சாந்தம் பெறுகிறது, உடல் வலிமை பெறுகிறது, நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. மனிதனின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது.

பொய்த்துபோன மழை பொழிகிறது, நல்ல குழந்தை பாக்கியம் கிடைக்கிறது, விசாலமான வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது, பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகளாக மாற்றப்படுகிறது.

சோதனைகள் தடுத்து நிறுத்தப்படுகிறது, ஷைத்தானின் அதிருப்தியும் இறைவனின் திருப்தியும் கிடைக்கிறது. உள்ளம் உயிர் பெறுகிறது, அனைத்து விதமான பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது, மறுமையில் பாதுகாப்பு கிடைக்கிறது, உள்ளங் களுக்கிடையில் பகைமை நீங்கும், மார்க்கமும், அமலும் பாதுகாக்கப்படும்.

இவ்வளவு பலன்களை உள்ளடக்கிய பாவமன்னிப்புத் தேடுவதை நாம் உதாசீனப்படுத்தக்கூடாது. புனித ரமலானில் அதிகமான பலன்களை பெறுவதற்கு பாவமன்னிப்பை ஒரு கேடயமாக உலக முஸ்லிம்கள் பயன் படுத்தி முழுப்பயன்களையும் பெற்றிட வல்ல இறைவன் கிருபை செய்வானாக.

Leave A Reply

Your email address will not be published.