ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி- அதிமுக பிரமுகர் கைது

0 3

திருச்சியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.

அ.தி.மு.க. பிரமுகர்the-fraudadmk-Leader

திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கால் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சங்கபிள்ளை மகன் சுகேந்திரன்(வயது54). இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது மகள் சுமதி என்பவருக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதற்காக நொச்சியம் மாதவ பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி ரேவதி (40) மற்றும் திருச்சி பெரியார் நகரில் வசிக்கும் செல்லதுரை மகனும் திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் உரிமையாளரும் அ.தி.மு.க. பிரமுகருமான ரவிசங்கர் (45) ஆகியோரிடம் 2012–ம் ஆண்டு ரூ.5 லட்சம் கொடுத்திருந்தேன். சொன்ன தேதிக்குள் அவர்களால் வேலை வாங்கித் தரமுடியாத காரணத்தால் பணத்தை திருப்பிகேட்ட போது கொலை மிரட்டல் விடுத்தனர்.

பலரிடம் மோசடி

மேலும் இவர்கள் திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் ரூ. 1 லட்சமும், துவாக்குடி பகுதியை சேர்ந்த சின்னராஜியிடம் ரூ.3 லட்சம், அதேபகுதியை சேர்ந்த நாதனிடம் ரூ. 2 லட்சம், அரியமங்கலம் பகுதியை சேர்ந்த குருநாதனிடம் ரூ. 3 லட்சம், லால்குடி சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த ஆனந்தனிடம் ரூ.3.2 லட்சம், பரமசிவபுரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரிடம் ரூ.1 லட்சம் என பணம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே ரவிசங்கர் மற்றும் ரேவதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கைது

இதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 22.8.2015–ல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ரவிசங்கர் கைது செய்யப்பட்டு லால்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி ரேவதியை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.