சமாரியப் பெண்

0 22

இயேசு தனது சீடர்களுடன் சமாரியா வழியாகக்  கலிலேயாவுக்குப் பயணமானார்.

‘சமாரியா’ யூதர்களுக்குப் பிடிக்காத ஊர்.

‘சமாரியர்கள்’ யூதர்களால் வெறுக்கப்படும் இனம்.

இவர்களுக்குள் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. மூதாதையர்களைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள் தான். காலப்போக்கில் கடவுளை வழிபடும் முறையினால் பிளவு பட்டார்கள்.

சமாரியர்களின் புனித நூல் என்பது மோசே எழுதிய சட்டதிட்டங்கள் அடங்கிய ‘தோரா’ நூல். யூதர்களின் புனித நூலில் வேறு பல பகுதிகளும் உள்ளன.

யூதர்கள் எருசலேமில் மோரியா மலைமீது அமைந்துள்ள எருசலேம் தேவாலயத்தில் கடவுளை வழிபட்டனர். சமாரியர்களோ கரிசிம் மலையில் கடவுளை வழிபட்டனர்.

கலிலேயாவிலிருந்து யூதர்கள் எருசலேம் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்றால் சமாரியா வழியாகச் செல்வது தான் எளிது. ஆனால், யூதர்கள் அப்படிச் செல்வது தங்களுக்கு இழுக்கு என்று கருதி சமாரியாவைச் சுற்றிக்கொண்டு சுற்றுப்பாதையில் தான் செல்வார்கள். சமாரியர்களை தாழ்வானவர்களாகக் கருதினார்கள்.

சமாரியா வழியாக நடந்து கொண்டிருந்த இயேசு அங்கே இருந்த ஒரு கிணற்றின் அருகே அமர்ந்தார். ஏதாவது உணவு வாங்கி வரும்படி சீடர்களை அனுப்பினார்.

அப்போது சமாரியப் பெண் ஒருத்தி தண்ணீர் எடுப்பதற்காக அங்கே வந்தாள். கிணற்றின் கரையில் அமர்ந்திருந்த இயேசுவை உற்றுப்பார்த்தாள்.

யூதன்!

யூதன் எப்படி சமாரியாவுக்குள்? அவளுடைய மனதில் அடுக்கடுக்காய் பல கேள்விகள் எழுந்தன.

‘பெண்ணே, மிகவும் தாகமாய் இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா?’

இயேசுவின் கேள்வியால், அவள் திடுக்கிட்டாள்.

‘சமாரியர்கள் சாத்தானின் கூடாரங்கள்’ என்று யூதர்கள் கூவுவதை பல முறை கேட்டிருக்கிறாள் அவள்.

சமாரியர்களிடமிருந்து உணவு வாங்கி உண்பதும் விலக்கப்பட்ட பன்றியின் இறைச்சியை சாப்பிடுவதும் ஒன்று என்பது யூதர்களின் எழுதப்படாத சட்டங்களில் ஒன்று என்பதும் அவளுக்குத் தெரியும்.

‘ஐயா… நீர் யூதன். நான் சமாரியப் பெண். யூதர்கள் சமாரியர்களிடம் பேசுவதேயில்லை. நீர் தண்ணீர் கேட்கிறீரே’ அவள் சொன்னாள்.

‘அம்மா.. கடவுளின் கொடை என்ன என்பதையும், உன்னிடம் தண்ணீர் கேட்பவர் யார் என்பதையும் நீ அறிந் திருந்தால் நீயே அவரிடம் தண்ணீரைக் கேட்டிருப்பாய்’.

‘உம்மிடம் தான் கயிறோ, பாத்திரமோ இல்லை. கிணறும் ஆழமானது. எப்படி தண்ணீர் எடுப்பீர். இந்தக் கிணறை வெட்டிய முற்பிதா யாக்கோபை விட நீர் பெரியவரோ?’ அவள் குரலில் நகைப்பு தெரிந்தது.

‘தான் தரும் தண்ணீர், வாழ்வளிக்கும் தண்ணீர். நான் தரும் தண்ணீரைக் குடித்தால் உனக்குத் தாகம் எடுக்காது’ இயேசு சொல்ல அவள் வியந்தாள், குழம்பினாள்.

‘ஐயா… அப்படி ஒரு தண்ணீர் இருந்தால் அதை எனக்குத் தாருங்களேன். நான் தண்ணீருக்காய் இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லையே’ அவள் கேட்டாள்.

‘தருகிறேன்! முதலில் போய் உன் கணவனைக் கூட்டி வா’ இயேசு சொன்னார்.

‘ஐயா, மன்னிக்க வேண்டும் எனக்குக் கணவன் இல்லை’ அவள் குரலில் சுருதி குறைந்தது.

‘உண்மை தான். உனக்குக் கணவன்கள் ஐந்து பேர் இருந்தார்கள். இப்போது உன்னுடன் இருப்பவர் உன் கணவன் அல்ல’ இயேசு சொன்னார்.

‘ஐயா, நீர் இறைவாக்கினர் தானே’ அவள் அதிர்ச்சி கலந்த படபடப்புடன் பேசினாள்.

இயேசு புன்னகைக்க, அவள் ஒரு கேள்வியைக் கேட்டாள்.

‘ஐயா, எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் தான் கடவுளை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களாகிய நீங்களோ எருசலேமில் வழிபடுவதே சிறந்த வழிபாடு என் கிறீர்கள். எது சரி?’

‘அம்மா.. காலம் வருகிறது. அப்போது நீங்கள் கடவுளை இந்த மலையிலோ, எருசலேமிலோ வழிபட மாட்டீர்கள்! உள்ளத்தில் வழிபடுவீர்கள்’ இயேசு விளக்கினார்.

‘ஐயா.. நாங்கள் கிறிஸ்து என்னும் மீட்பரை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்’ அவள் அமைதியாகச் சொல்ல,

இயேசு தெளிவான குரலில் சொன்னார்.

‘நானே அவர்! நம்பு’.

‘நானே அவர்’ என்று இயேசு சொன்னதைக் கேட்டதும் அந்தப் பெண் குடத்தையும், கயிறையும் அங்கேயே விட்டு விட்டு நகருக்குள் ஓடினாள்.

‘நான் மெசியாவைக் கண்டேன்.. கிறிஸ்துவைக் கண்டேன்…’ என தெருக்களில் கத்தினாள்.

சமாரியப் பெண் சொன்னதைக் கேட்டு கூட்டம் இயேசுவை நோக்கி ஓடியது. இயேசு அவர்களிடம் பேசினார். மக்கள் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு சமாரியப் பெண் அங்கே ஊருக்கு நற்செய்தியை அறிவித்தவராய் மாறினார்.

Leave A Reply

Your email address will not be published.