திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அரசு விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு 3– ம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது

0 14

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அரசு விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு 3– ம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என கலெக்டர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி விடுத்து உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது.

விளையாட்டு விடுதிகள்

விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி மற்றும் தங்குமிட வசதியுடன் சத்தான உணவுடன் கூடிய 28 அரசு விளையாட்டு விடுதிகள், 2 சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

3–ம் கட்ட தேர்வு

விளையாட்டு விடுதிக்கான முன்றாம் கட்ட தேர்வுப்போட்டியில் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள், மாநில அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களில் பதக்கம் பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மற்றும் தகுதி வாய்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம்.

7, 8, 9 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு தகுதியுள்ளவர்கள் ஆவர். கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு 21 வயது நிரம்ப பெற்றவர்களாக இருக்க வேண்டும். 6, 7, மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் முதன்மை நிலை விளையாட்டு விடுதியில் சேரலாம்.

தகுதியுடைய சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான மூன்றாம் கட்ட மாநில அளவிலான தேர்வு வரும் 12.07.2016 அன்று காலை 8 மணியளவில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கு விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு தடகளம், கால்பந்து, வளைகோல்பந்து, கிரிக்கெட், பேட்மிண்டன், நீச்சல், மேசைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, குத்துச்சண்டை, கபாடி, கைப்பந்து, கையுந்துபந்து மற்றும் டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளுக்கும் மாணவியர்களுக்கு தடகளம், கால்பந்து, வளைகோல்பந்து, பேட்மிண்டன், நீச்சல், கூடைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, குத்துச்சண்டை, கபடி, கைப்பந்து, கையுந்துபந்து, டேக்வோண்டா, பளுதூக்குதல் மற்றும் வாள்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கு சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு தடகளம், கூடைபந்து, குத்துச்சண்டை மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகளுக்கும் மாணவியர்களுக்கு தடகளம், கால்பந்து, ஜூடோ மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கு முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு தடகளம், பேட்மிட்டன், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், நீச்சல் மற்றும் டேக்வோண்டா ஆகிய விளையாட்டுகளுக்கும் மாணவியர்களுக்கு பேட்மிட்டன், நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய விளையாட்டுகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பம்

விளையாட்டுகளில் நடைபெறும் மாநில அளவிலான மூன்றாம் கட்டத்தேர்வில் பங்கேற்றிடும் மாணவ மாணவியர்கள் அதற்கான விண்ணப்பத்தினை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் விளையாட்டில் பங்கேற்ற அசல் சான்றுகளுடன் 12.07.2016 அன்று காலை 8 மணி அளவில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நேரில் ஆஜராக வேண்டும். தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நேரிடையானத் தேர்வு நடைபெற்று விளையாட்டு விடுதிகளில் காலியாக உள்ள இடங்களில் சேருவதற்கான அனுமதி ஆணை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.