ரொனால்டோ அபாரம் இறுதிச்சுற்றில் போர்ச்சுகல்

0 16

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி தனது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியைத் தோற்கடித்தது.

போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்ததோடு, சகவீரரான நானிக்கும் கோலடிக்கும் அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அசத்தினார்.

பிரான்ஸின் லயன் நகரில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே வேல்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 5-ஆவது நிமிடத்தில் (ஒட்டுமொத்தத்தில் 50-ஆவது நிமிடம்) இடது “கார்னர்’ பகுதியில் நின்றிருந்த போர்ச்சுகல் வீரர் ரபேல் கெரைரோவிடம் பந்து செல்ல, அவர் மிக நேர்த்தியாக கோல் கம்பத்தை நோக்கி கிராஸ் செய்தார். அப்போது வேல்ஸ் பின்கள வீரர்களுக்கு மத்தியில் நின்ற ரொனால்டோ, மிக வேகமாக மேல் நோக்கி பாய்ந்து பந்தை தலையால் முட்டி கோலடித்தார்.

வேல்ஸ் அணி முதல் கோலை வாங்கிய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே அடுத்த கோலை அடித்தது போர்ச்சுகல். 53-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கொடுத்த கிராûஸ மிக லாவகமாக திருப்பி கோலாக்கினார் நானி. இதன்பிறகு சரிவிலிருந்து மீள்வதற்கு வேல்ஸ் அணி கடுமையாகப் போராடியபோதிலும், கடைசி வரை கோலடிக்க முடியவில்லை. இதனால் போர்ச்சுகல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. வரும் 10-ஆம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரான்ஸ் அல்லது நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனியை சந்திக்கவுள்ளது போர்ச்சுகல்.

அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னதாக வேல்ஸ் கேப்டனும், ரியல் மாட்ரிட் கிளப்பில் தன்னுடன் இணைந்து விளையாடி வருபவருமான கேரத் பேலிடம் ரொனால்டோ பேசவில்லை. ஆனால் போட்டி முடிந்த பிறகு கேரத் பேலை கட்டித் தழுவி ஆறுதல் கூறினார்.

பிளாட்டினி சாதனையை சமன் செய்த ரொனால்டோ :

வேல்ஸ் அணிக்கு எதிராக கோலடித்ததன் மூலம் யூரோ கோப்பை போட்டியில் 9-ஆவது கோலைப் பதிவு செய்தார் ரொனால்டோ. இதன்மூலம் யூரோ கோப்பை வரலாற்றில் அதிக கோலடித்தவரான பிரான்ஸின் மைக்கேல் பிளாட்டினி சாதனையை சமன் செய்தார்.

கோப்பையை வெல்வோம்: ரொனால்டோ நம்பிக்கை

அரையிறுதி ஆட்டத்துக்குப் பிறகு பேசிய ரொனால்டோ, “அரையிறுதியில் எங்கள் வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்துக்குப் பிறகு ரசிகர்கள் அனைவரும் எனது கண்ணில் ஆனந்த கண்ணீரை காண்பீர்கள் என நம்புகிறேன். போர்ச்சுகல் அணிக்கு வெற்றித் தேடித்தர வேண்டும் என்றுதான் எப்போதுமே விரும்புவேன். இது நாங்கள் கோப்பையை வெல்லும் நேரம் என நம்புகிறேன்.

எங்கள் அணி கோப்பையை வெல்லும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். கோப்பையை வெல்வதற்கு நானும், எனது அணியினரும், எங்கள் நாட்டு ரசிகர்களும் தகுதியானவர்கள்’ என்றார்.

தோல்வியால்வருத்தமில்லை

தோல்வி குறித்துப் பேசிய வேல்ஸ் அணியின் கேப்டன் கேரத் பேல், “நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆடினோம். அதனால் அரையிறுதியில் தோல்வி கண்டதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.