திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள் பயன்பாட்டுக்கு வந்தன.

0 2

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு மாற்றுத்திறனாளி, முதியோர்களின் வசதிக்காக தனியார் மருத்துவமனை சார்பில் வழங்கிய சக்கர நாற்காலிகள் பயன்பாட்டுக்கு வந்தன.

பழுதடைந்த சக்கர நாற்காலிகள்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். இதில் மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்கள் போன்ற பயணிகளை அழைத்து சென்று ரெயில்களில் ஏறுவதற்கு சக்கர நாற்காலிகள் ரெயில்வே நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் இருந்த அனைத்து சக்கர நாற்காலிகளும் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் போனது. இதனால் மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்கள் ரெயில் ஏறுவதற்கு நடைமேடைகளுக்கு சிரமத்துடன் சென்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளி, முதியோர்களை அழைத்து செல்வதற்கு தனியார் நிறுவனம் சார்பில் ஒரு பேட்டரி கார் ரெயில்வே நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த பேட்டரி கார் 1–வது நடைமேடையில் உள்ள பார்சல் ஆபீஸ் அருகே தண்டவாளத்தின் வழியாக மற்ற 6 நடைமேடைகளுக்கு சென்று வந்தது.

கோரிக்கை

இந்த நிலையில் ரெயில்களின் பாதுகாப்பு கருதி அந்த பேட்டரி கார் முதல் நடைமேடை தண்டவாளத்தை கடந்து மற்ற நடைமேடைகளுக்கு செல்வதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்டது. இதனால் தற்போது இந்த பேட்டரி கார் 1–வது நடைமேடையில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் அவசர உதவிக்கு மட்டும் ரெயில்வே நிர்வாகத்தின் உரிய அனுமதியோடு மற்ற 6 நடைமேடைகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி, முதியோர்கள் வசதிக்காக புதிய சக்கர நாற்காலிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

புதிய சக்கர நாற்காலிகள்

இந்த நிலையில் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகத்திற்கு தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சார்பில் 23 சக்கர நாற்காலிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இதில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் முதல் சக்கர நாற்காலிகள் 6 பயன்பாட்டுக்கு வந்தது. இதே போன்று தஞ்சாவூர் ரெயில் நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள் 3 பயன்பாட்டில் உள்ளது. மற்ற சக்கர நாற்காலிகள் திருச்சி கோட்டத்தில் உள்ள மற்ற ரெயில் நிலையங்களுக்கு வழங்கப்படும் என்று ரெயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த சக்கர நாற்காலிகள் அனைத்தும் முன்பு பேட்டரி கார் 1–வது நடைமேடையில் இருந்து மற்ற நடைமேடைகளுக்கு சென்ற வழியாக தான் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அதே வழியாக பேட்டரி காரையும் அனைத்து நடைமேடைகளுக்கும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.