டோணிக்கு காதலி இருந்தார்.. கார் விபத்தில் இறந்தார்.. அதிர்ச்சி தகவல்

0 20

மும்பை: இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தலைவரான டோணிக்கு ஒரு காதலி இருந்ததாகவும், அவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

டோணியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ‘எம்.எஸ்.டோனி-தி அன் டோல்டு ஸ்டோரி’ என்ற படம் ஹிந்தியில் தயாராகி வருகிறது. இப்படத்தில் தன்னுடைய காதலியின் நினைவுகளை படமாக்க இயக்குநர், நீரஜ் பாண்டேவுக்கு டோணி அனுமதி தந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டோணியின் 20 வயதையொட்டிய காலகட்டத்தில், அவர் பிரியங்கா என்ற பெண்ணை காதலித்ததாக அந்த படத்தில் காட்சி உள்ளதாம்.

2003-2004 ம் ஆண்டுகளில் இந்திய ஏ அணியில் இடம் பெற்ற டோணி ஜிம்பாப்வே, கென்யா நாடுகளில் சுற்றுப் பயணம் சென்றார். காதலியின் கடைக்கண் பார்வை பட்டதாலோ என்னவோ, அத்தொடர் முழுவதும் டோணி மிக சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால் தொடர் முடிந்து வீடு திரும்பியதும்தான் டோணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் சாலை விபத்தில் பிரியங்கா உயிரிழந்தார் என்ற தகவல் அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த டோணி பல மாதங்களாக தன்னுடைய காதலியின் நினைப்பில் இருந்துள்ளார்.

இந்த காட்சிகள் படத்தில் இடம்பெற உள்ளதாக மும்பை மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. டோணியின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமித்துவிடுமோ என்ற ஆதங்கத்தில் அவரது குடும்பத்தார் இருந்துள்ளனர். இருப்பினும், சோகத்தை வென்று எழுந்த டோணி, கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியதன் விளைவாக, 2004ம் ஆண்டு வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் விளாசி உலக கிரிக்கெட் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். இதன்பிறகு டோணி வாழ்க்கையில் தொட்டதொல்லாம் துலங்கியது. கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்திய டோணி, டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டு கலக்கினார்.

2010ம் ஆண்டு சாக்ஷியை திருமணம் செய்தார் டோணி. டோணி வாழ்க்கை குறித்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஏற்படுத்த உள்ள பரபரப்பால், அதன்பிறகு டோணியின் விளம்பர மார்க்கெட் தேவை இன்னும் அதிகமாக உயரும் என்று கார்பொரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.