பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்!

0 4

மனிதர்கள் உணவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தூங்குவதற்கும் அளிக்கின்றனர். தூக்கமே மனிதர்களின் புத்துணர்ச்சியை தூண்டி அவனை செயலாற்றவைக்கும் ஆற்றல் கொண்டது. நாள்தோறும் இச்செயல் நடந்தால்தான் அவனது களைப்பு நீங்கி மீண்டும் வேலையை செய்ய முடியும். மிருகங்கள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் தூங்கியே விழிக்கின்றன. அதுவே மறுநாளின் செயல்பாட்டை தீர்மானிக்கும் ஆற்றலாகவும் விளங்குகிறது. தொடக்கத்தில் பாறைகளிலும், மணல் மேடுகளிலும், கட்டாந்தரையிலும் படுத்து உறங்கிய மனிதன், நாளடைவில் விலங்குகளின் தோல்கள் கொண்ட படுக்கை விரிப்புகளை உருவாக்கி தூங்கும் படுக்கையை உருவாக்கினான்.

பின்னர் தாவரங்களை கொண்டு படுக்கைகளை உருவாக்கி கொண்டான். இன்று தூக்கத்திற்காக நாம் பயன்படுத்தும் படுக்கைகள் தற்காலத்தில் மனதிற்கு பிடித்த வண்ணங்களில், வடிவமைப்பில் விற்கப்படுகிறது. இந்த படுக்கைகளிலும் தங்களின் அந்தஸ்து பார்த்து வாங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆனால் விலையுயர்ந்த படுக்கைகள் வாங்கினாலும் முழுமையான தூக்கம் இல்லாமல் அல்லல்படுவோரும், அதற்காக மருத்துவரை தேடுவோர் எண்ணிக்கையும் தற்காலத்தில் அதிகரித்துள்ளது. இந்த பிரச்னைக்கு மனிதர்கள் பயன்படுத்தும் நவீன படுக்கைகளும் முக்கிய காரணமாக விளங்குவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலகில் முதல் நாகரிக மனிதன் தனக்கென்று ஒரு படுக்கையை உருவாக்கும் போது, அவன் வாழ்ந்த நிலத்தின் தட்பவெப்ப தன்மையை கருத்தில் கொண்டு படுக்கையை தயார்படுத்தினான். பூமியின் நிலப்பரப்பில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பருவகாலம் இருப்பதை உணர்ந்தே நமது நாட்டிலும் படுக்கை விரிப்புகள் உருவாக்கப்பட்டன. இதில் முதன்மையானதாக இன்றைக்கும் விளங்குவது கோரைப்பாயாகும். தண்ணீர் உள்ள இடங்களில் தழைத்து வளர்ந்து அனைத்திற்கும் வளைந்து கொடுத்து முறியாமல் நீண்ட நாட்கள் உறுதியுடன் இருப்பதை கண்ட முன்னோர்கள் அதை ஆராய்ந்து படுக்கைகளை உருவாக்கினார்கள்.

தொடர்ந்து பனை ஓலைப்பாய் பிரப்பம்பாய், ஈச்சம்பாய், கம்பளி விரிப்பு, இலவம் பஞ்சுபடுக்கை ஆகியவற்றை உருவாக்கினார்கள். இந்த பாய்களையும் இலவம் பஞ்சு படுக்கை தயாரிப்புகளையும் செய்வதற்கென்றே பல குடும்பங்கள் வாழ்ந்தன. நாம்படுத்து தூங்கும் ஒவ்வொரு படுக்கைக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. கோரைப்பாயில் தூங்கினால் உடல்சூடு, மந்தம், விஷசுரத்தை போக்கி, உடலுக்கு குளிர்ச்சியும் உறக்கமும் தரும். கம்பளி விரிப்பை பயன்படுத்தினால் கடும் குளிருக்கு, சூட்டை தந்து குளிர் சுரத்தை போக்கும். பிரம்பம்பாயில் படுத்தால் சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் ஆகியவை நீங்கி நலம் கொடுக்கும். ஈச்சம்பாயில் படுத்து தூங்கினால் வாதநோய் குணமாகும்.

ஆனால் உடலில் சூட்டை ஏற்படுத்தி, கபத்தை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. மூங்கில்பாய் என்பது மூங்கில் கழிகளை மெல்லிய குச்சிகளாக உருவாக்கி அதன் மூலம் தடுக்கை போன்ற பாயை தயார் செய்வது ஆகும். இதில் படுத்தால், உடல் சூடும் பித்தமும் அதிகாரிக்கும். அதனால் பெரும்பாலும் மறைப்பாக தொங்கவிடும் இடத்திற்கு இதை பயன்படுத்துவார்கள்.  தாழம்பாயில் படுத்துறங்கினால் வாந்தி, தலை சுற்றல், அனைத்து வகை பித்தமும் படிப்படியாக போகும். பனையோலை பாயில் படுப்பது, பித்தத்தை போக்கி உடல் சூட்டை நீக்கி சுகத்தை தரும். தென்னம் ஓலையால் செய்யப்படும் கீற்றில் படுத்துறங்குவது உடலின் சூட்டை சமன்படுத்தி அறிவுத் தெளிவை தரும்.

மலர்களால் உருவாக்கப்படும் படுக்கை பெரும்பாலும் மன்னர்கள் பயன்படுத்துவது ஆகும். இதில் தூங்குவதால் ஆண்மை அதிகரிக்கும், நன்றாக பசியெடுக்கும். இதனால்தான் இன்றைக்கும் முதலிரவில் படுக்கையின் மீது மலர்களை தூவி படுக்கை உருவாக்குவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு படுக்கை உண்டு. அது அரசர்கள், பணக்காரர்கள் படுத்துறங்கும் படுக்கையாகும். இலவம் மரத்தில் பஞ்சுகளை மெத்தைகளாக உருவாக்கி அதை மரகட்டிலில் போட்டு தூங்கினால் உடலில் ரத்தம், தாது பலம் பெறும். உடலில் தோன்றும் அனைத்து நோய்களும் நீங்கும்.

ஆனால் இன்றைக்கு நவீனத்தை விரும்பி எங்கோ ஒரு நாட்டில், அந்த நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட படுக்கையை, பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கி தூக்கத்தையும் தொலைத்து, நோயையும் ஏற்படுத்திக்கொள்கிறோம். நமது முன்னோர்கள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து நமக்காக உருவாக்கி கொடுத்த படுக்கை விரிப்புகளை பயன்படுத்தினால் எந்த நாளும் நல்ல தூக்கமும், நலமும் ஏற்படும்.

படுக்கும் முறைகள் குறித்து சான்றோர்கள் கூறியது என்ன?

தனது சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலைவைத்து மேற்கு திசையில் கால்நீட்டி படுக்கவேண்டும். மாமனார் வீட்டில் தூங்கும் போது தெற்கு திசையில் தலைவைத்து தூங்கவேண்டும். வெளியூரில் தங்கும் போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும். எந்த காலத்திலும் வடக்கு திசையில் தலைவைத்து படுக்க கூடாது. இடது பக்கமாக சாய்ந்து இடதுகையை தலைக்கு அடியில் வைத்து கால்களை நேராக நீட்டி தூங்குவதே சிறந்த முறையாகும்

Leave A Reply

Your email address will not be published.