சொந்த பிரச்சனைக்காக பிரதமரை சந்திக்கும் ஜெயலலிதா

0 13

எதிர்கட்சிகள் மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, ஆளும் கட்சியை கேள்வி கேட்கும் போது பதில் கூறுவதை விட்டுவிட்டு அவர்கள் மீது அவதூறு வழக்குகளை போடுவதை ஜெயலலிதா இனியாவது நிறுத்தி கொள்ள வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வெறும் அறிவிக்கை:

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஏற்கனவே தென்னைமர காப்பீட்டு திட்டம், கொப்பரை தேங்காய் அரசால் நேரடி கொள்முதல், டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் நிலையங்கள், போன்ற அறிக்கைகள் இன்று வரை வெறும் அறிக்கைகளாகவே உள்ளது. இந்த திட்டங்கள் இன்று வரை நடைமுறைக்கு வந்ததாக தெரியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கண்துடைப்பு நாடகம்

ஜெயலலிதாவால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களும் மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகங்களாக உள்ளதே தவிர, இதனால் யாரும் பயன் அடைந்ததாக தெரியவில்லை என்று விவசாயிகளும், மக்களே கூறும் அவலநிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் பங்கேற்றார்

இது போன்ற எல்லா நிலைகளையும் பிரதமரிடத்தில் எடுத்துரைக்க டெல்லியில் நடந்த அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில், ஜெயலலிதாவே நேரடியாக கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், விவசாயிகள் எடுத்துரைத்தும், எப்போதும் போல் தான்தோன்றி தனமாக அமைச்சர் பன்னீர்செல்வத்தை அனுப்பி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க செய்துள்ளார்.

மோடி- ஜெயலலிதா சந்திப்பு

முதல்வர் நேரடியாக கலந்து கொள்வதற்கும், தன் பங்கிற்காக ஒரு அமைச்சரை அனுப்பி பங்கேற்க வைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தன் சொந்த பிரச்சனைக்காக பிரதமரை சந்திக்கும் ஜெயலலிதா, மக்கள் பிரச்சனைக்காக செல்வதில்லையே என்று அனைத்து தரப்பு அரசியல் ஆர்வலர்களும், மக்களும் பேசும் நிலையை ஏற்படுத்தி உள்ளார்.

கண்டனம்

 அகிலேஷ் யாதவ், சித்தராமையா இவர்கள் இரண்டு முதல்வர்களைத் தவிர, மற்ற மாநில முதல்வர்கள் அனைவருமே இந்த கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு காரணங்களுக்காக முதலமைச்சர் அனைவரின் வேண்டுகோளை ஏற்று டெல்லிக்கு சென்று இருக்க வேண்டும். அதனை தவிர்த்து உதாசினப்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அவதூறு வழக்கை நிறுத்துங்கள்

எதிர்கட்சிகள் மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, ஆளும் கட்சியை கேள்வி கேட்கும் போது பதில் கூறுவதை விட்டுவிட்டு அவர்கள் மீது அவதூறு வழக்குகளை போடுவதை ஜெயலலிதா இனியாவது நிறுத்தி கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டின் நிலையை உச்சநீதிமன்ற நீதியசர்கள் தீபக் மிஸ்ரா, நாகப்பன் கடுமையாக கண்டித்து, மூன்று வார காலத்திற்குள் ஜெயலலிதாவே பதிலலிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

வழக்கறிஞர்கள் போஸ்ட்மேனா?

வழக்குகளை தொடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களின் பேச்சில் அவதூறு உள்ளதா என்பதை ஆராய வேண்டாமா?, அரசு வழக்கறிஞர்கள் போஸ்ட்மேன் போல தமிழக அரசு பயன்படுத்துவது முறையா என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதியரசர்கள் சரமாரியாக கேட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றம் பாராட்டு

 சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து உயர்நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு பல வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியுள்ளது உண்மையிலையே பாராட்டுக்குரியது. எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மக்கள் பிரச்சனைகளில் தீவிர கவனம் செலுத்தி அதற்கான தீர்வை காணவேண்டுமே தவிர, எதிர்கட்சிகளை எதிரி கட்சிகளாக எண்ணக்கூடாது.

மக்கள் பிரச்சனையில் கவனம் வேண்டும்

 மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் முறையாக பயன்படுத்தாமல் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. மேலும் மேலும் இதுபோன்ற வெற்று அறிவிப்புகளை, அறிவிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழக அரசு உண்மையில் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தி அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.