ரியோ ஒலிம்பிக்கில் அசத்த காத்திருக்கும் அறிமுகங்கள்

0 18

அசத்த காத்திருக்கும் அறிமுகங்கள்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமையோடு களமிறங்க காத்திருக்கிறார் தீபா கர்மாகர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர், தனது 7-ஆவது வயதில் ஜிம்னாஸ்டிக்ஸில் களம்புகுந்தார். ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கேற்க கால் பாதங்கள் உள் வளைந்து இருக்க வேண்டும். ஆனால் தீபாவின் கால் பாதங்கள் தட்டையாக இருந்தன.dats

கடுமையான பயிற்சியின் மூலம் அதை சரி செய்த தீபா, பின்னர் சர்வதேச அரங்கில் ஜொலிக்க ஆரம்பித்தார். 2014-இல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மிகவும் அரிதான மற்றும் அபாயகரமான புரோடுநோவா வால்ட் பிரிவில் பங்கேற்று தீபா வெண்கலம் வென்றபோது உலகமே அவரைப் பார்த்து வியந்தது.

அதன்பிறகு தொடர்ச்சியாக கலக்கிய தீபா, ரியோவில் நடைபெற்ற தகுதிச்சுற்றின் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருக்கிறார். 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கேற்க தகுதி பெற்றிருக்கும் முதல் இந்தியரான தீபா கர்மாகர், இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதே தனது முதல் இலக்கு என்று சூளுரைத்திருக்கிறார். அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிட்டாலே பதக்கமும் உறுதியாகிவிடும். சொன்னதை செய்வாரா கர்மாகர்?

1980-இல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் 100 மீ. ஓட்டத்தில் பி.டி.உஷா ஓடினார். அதன்பிறகு இந்தியாவின் சார்பில் 100 மீ. ஓட்டத்தில் மற்றொரு வீராங்கனை கலந்து கொள்வதற்கு 36 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அந்த வீராங்கனைதான் டூட்டீ சந்த்.29

ஒடிஸா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரதார் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். நெசவுத் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்து வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தாலும் தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்திலிருந்து தடம்புரளாமல் ரியோ ஒலிம்பிக் வரை வந்திருக்கிறார். இந்திய தடகளத்தில் வேகமாக வளர்ந்த டூட்டீ சந்துக்கு டெஸ்டோஸ்டீரான் வடிவில் காத்திருந்தது சோதனை. அவருடைய உடலில் அதிக அளவு டெஸ்டோஸ்டீரான் (ஆண் தன்மை கொண்ட ஹார்மோன்) இருப்பதாகக் கூறி 2014-இல் அவர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்கு தடை விதித்தது சர்வதேச தடகள சம்மேளனம்.

ஆனால் மனம் தளராத டூட்டீ சந்த், அதை எதிர்த்து மத்திய விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதோடு, ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றிருக்கிறார். 100 மீ. ஓட்டத்தில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான டூட்டி சந்த், ஒலிம்பிக்கில் வரலாறு படைப்பாரா?spt6

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள இந்தியர்களில் துப்பாக்கிச் சுடுதல் வீரரான ஜிது ராயும் ஒருவர். அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி வென்ற கையோடு ஒலிம்பிக்கில் களமிறங்குகிறார்.

உலகக் கோப்பையில் மட்டும் 6 பதக்கங்களை வென்றிருக்கும் ஜிதுராய், 2014-இல் உலகக் கோப்பை, உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி என பங்கேற்ற அனைத்திலும் பதக்கங்களை குவித்துள்ளார்.

28 வயதான ஜிதுராய், ரியோ ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் பிஸ்டல் மற்றும் 50 மீ. பிஸ்டல் போட்டிகளில் பங்கேற்கிறார்.

நேபாளத்தில் பிறந்தவரான ஜிது ராய், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீ. பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார். சர்வதேச தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் அவர், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஜிது ராயின் தோட்டாக்கள் இலக்கை துல்லியமாக துளைக்குமா?

2004-க்குப் பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள முதல் இந்திய ஜூடோ வீரர் அவதார் சிங். இவர் 90 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கிறார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரைச் சேர்ந்தவரான அவதார் சிங் மிகவும் பலவீனமாக இருப்பதாக அவருடைய பயிற்சியாளர் கூறியதால் 2008-இல் ஜூடோ விளையாட்டிலிருந்து வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்தார்.srikanth

ஆனால் அவருடைய பெற்றோர் கொடுத்த நம்பிக்கையின் காரணமாக மீண்டும் ஜூடோவில் களமிறங்கிய அவதார் சிங், உலகின் முன்னணி வீரர்களை புரட்டியெடுத்தார்.

இந்த ஆண்டு தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் முன்னணி வீரரான ஈரானின் சய்யது மொராடியால்கூட அவதார் சிங்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 6 அடி 4 அங்குல உயரம் கொண்டவரான அவதார் சிங், ஒலிம்பிக்கில் அவதாரம் எடுப்பாரா?

2014-இல் நடைபெற்ற சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான சீனாவின் லின் டானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றபோது பாட்மிண்டன் உலகின் புதிய அவதாரமாக உருவெடுத்தார் ஸ்ரீகாந்த். சூப்பர் சீரிஸ் பிரீமியர் போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவர் வசமானது.

ஹைதராபாதில் பிறந்தவரான ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் சீன ஓபன் போட்டி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் பதக்கம் வென்றிருக்கும் ஸ்ரீகாந்த், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் தனது பெயரும் இடம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்துக்கு முதல் சுற்றே கடினமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவாலை சமாளிப்பாரா ஸ்ரீகாந்த்?

Leave A Reply

Your email address will not be published.