என்ஜினீயரை வெட்டிக்கொல்ல முயன்ற 3 ரவுடிகள் கைது

0 18

சென்னை கீழ்ப்பாக்கத்தில் என்ஜினீயரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவரது மனைவியின் தூண்டுதலின்பேரில், பிரபல அரசியல் பிரமுகர் கைதான 3 ரவுடிகளையும் கூலிப்படையாக ஏவினாரா? என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சரவணன்

ரவுடிகளால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டவர் சரவணன் (வயது 39). என்ஜினீயரான இவர், சென்னை கொளத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்தவர். இவர் துபாயில், துப்பறியும் தனியார் நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை செய்கிறார்.

இவர் கடந்த மாதம் 22–ந் தேதி அன்று விமானத்தில் சென்னை வந்தார். மறுநாள் தனது பெற்றோருடன் காரில் கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலையில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடச்சென்றார். அப்போது பிற்பகல் 2.30 மணி இருக்கும்.

காரை விட்டு சரவணன் இறங்கியபோது கொடூரமாக தாக்கப்பட்டார். 2 மர்ம நபர்கள், அவரை அரிவாளால் வெட்டினார்கள். கழுத்துக்கு வைத்த அரிவாளின் குறி தோள்பட்டையில் பாய்ந்தது. 3 முறை வெட்டிய மர்ம நபர்கள் பின்னர் தப்பி ஓடிவிட்டனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரவணன் சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்துக்கொண்டார்.

நடவடிக்கை எடுக்க மறுத்த போலீஸ்…

சரவணன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தைவிட, கீழ்ப்பாக்கம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக சரியாக நடவடிக்கை எடுக்க மறுத்ததுதான் இன்னும் கொடூரமானது.

அரிவாள் வெட்டு சம்பவத்தை மறைத்த போலீசார், சரவணன் சாதாரண முறையில் தாக்கப்பட்டு லேசான காயம் அடைந்ததாக, சாதாரண சட்டப்பிரிவின் கீழ் வழக்கு போட்டனர்.

ஆனால் சரவணன் மனம் தளராமல் அவரே குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். செல்போன் அழைப்புகள், தனது வீட்டு முன்பு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், தாக்கப்பட்ட சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை சரவணனே கண்டுபிடித்து, உரிய ஆதாரங்களோடு கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.

ஆனால் இன்ஸ்பெக்டரோ, சாதாரணமாக நடந்த சம்பவத்தை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆதாரத்தை கொடுத்தபிறகும், குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

கமிஷனர் உத்தரவு

பின்னர் சரவணன், போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன் ஆகியோரை சந்தித்து தனக்கு நேர்ந்த சம்பவத்தில், கீழ்ப்பாக்கம் போலீசாரின் மோசமான நடவடிக்கை குறித்து முறையிட்டார். இணை கமிஷனர் மனோகரன், சரவணனின் துப்பறியும் முயற்சியை பாராட்டியதோடு, குற்றவாளிகளை கைது செய்யவும் ஆணை பிறப்பித்தார்.

அதன்பிறகு கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான குற்றவாளிகளின் உருவங்களை ஆதாரமாக வைத்து, அருணகிரி, செந்தில்குமார், வெங்கடேசன் என்ற 3 ரவுடிகளை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். வழக்கும் கொலை முயற்சி வழக்காக மாற்றப்பட்டது. செந்தில்குமார், வெங்கடேசன் இருவர் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் 3 ரவுடிகளை இந்த வழக்கில் போலீசார் கைது செய்யவில்லை.

அரசியல் பிரமுகர் பின்னணியா?

இந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக, என்ஜினீயர் சரவணனின் மனைவி கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். மேலும் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரும், கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டுள்ளார்.

மனைவியின் தூண்டுதலின்பேரில், அரசியல் கட்சி பிரமுகர்தான் ரூ.1 லட்சம் கூலியாக கொடுத்து என்னை கொல்வதற்கு ரவுடிகளை ஏவிவிட்டுள்ளார் என்று சரவணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

உண்மை என்ன?

14 ஆண்டுகள் என்னுடன் ஒன்றாக வாழ்ந்து, ஒரு மகனை பெற்றுக்கொடுத்த என் மனைவி, தாக்கப்பட்ட சம்பவம் நடந்தபிறகும், குற்றவாளிகளை விடாதீர்கள் என்று என்னிடம் பேசிவந்த என் மனைவி, என்னை கொல்வதற்கு அரசியல் கட்சி பிரமுகரை தூண்டிவிட்டார் என்பது பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் வாழ்ந்து கொண்டே, என்னை கொல்வதற்கு ரவுடிகளை அனுப்ப எனது மனைவி அரசியல் பிரமுகருடன் சேர்ந்து சதி செய்தது ஏன்? என்பது பற்றிய உண்மைகளை போலீசார் நேர்மையாக விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்று சரவணன் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோளாக வைத்துள்ளார்.

சரவணனின் மனைவி தற்போது அவரது பெற்றோருடன் தனியாக வாழ்வதாக தெரிகிறது. அவர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில், தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். குறிப்பிட்ட அரசியல் பிரமுகரும், தன் மீதுள்ள குற்றச்சாட்டை முன்ஜாமீன் கேட்டுள்ள மனுவில் மறுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.