சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கர் பேட்டி?

0 4

‘‘பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்’’ என்று உத்தவ் தாக்கரே பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 3–வது நாளாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

25 ஆண்டை வீணடித்துவிட்டோம்

கடந்த ஜூன் மாதம் சிவசேனா அதன் 50–வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. கட்சி தொடங்கி பாதி காலம், அதாவது 25 ஆண்டு காலம் பாரதீய ஜனதா உடன் கூட்டணியில் இருந்தோம். 25 ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம். ஒருவரது கையை பிடித்து மற்றொருவர் வளர்ந்தோம்.

ஆனால், சட்டசபை தேர்தலுக்கு முன்பு கூட்டணி முறிந்தது உள்பட சில விஷயங்கள் வெளிப்பட்ட விதம், 25 ஆண்டுகள் பாரதீய ஜனதா உடன் கூட்டணி அமைத்து வீணடித்து விட்டோமோ என்று இப்போது என்னை நினைக்க வைக்கிறது. இந்த ஆண்டுகள் அழுகி போய்விட்டன.

அந்த நாட்களில், கூட்டணியின் அடிப்படையாக ‘இந்துத்வா’ இருந்தது. ஆனால், இப்போது இந்த கூட்டணியின் அடிப்படை என்ன என்பதை கண்டறிய நாங்கள் பாடுபடுகிறோம்.

மிரட்டவில்லை

நானும், என்னுடைய கட்சியும் அலட்சியப்படுத்தப்படுவதாக உணரும் தருணம், ஆட்சியில் இருக்க மாட்டோம். அதற்காக அரசை நான் மிரட்டுவதாக நினைக்க வேண்டாம். நான் மனதில் பட்டதை சொல்கிறேனே தவிர, ஒருபோதும் முதுகில் குத்தமாட்டேன்.

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். சமீபத்தில் கூட இருவரும் ‘மாதோஸ்ரீ’யில் (உத்தவ் தாக்கரே இல்லம்) அமர்ந்து சாப்பிட்டோம். தேவேந்திர பட்னாவிசின் கடமையையும், தளர்வில்லாத முயற்சிகளையும் உன்னிப்பாக கவனிக்கிறேன். வரும்காலங்களில் அவர் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

லாலு பிரசாத்– ஜெயலலிதா

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து லாலு பிரசாத் யாதவ் விலகி இருக்கிறார். இருந்தாலும், பீகார் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி மிகப்பெரிய கட்சியாக வெளிப்பட்டது. இதே நிலைமை தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்று, பின்னர் வெளிவந்தனர். இருந்தாலும், அந்த மாநில மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், அவர்களை தேர்ந்தெடுத்தனர்.

பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் கேரள மாநில மக்கள் உங்களை (பா.ஜனதா) நிராகரித்து விட்டு, அவர்களை தேர்வு செய்தது ஏன்?. ஏனென்றால், இந்த மாநில மக்கள் உயர்ந்த வாக்குறுதிகளுக்கும், பிரமாண்ட பொதுக்கூட்டங்களுக்கும் செவிசாய்க்கவில்லை. லாலு பிரசாத் யாதவ், ஜெயலலிதா போன்றோர் தான் தங்களது தலைவர்கள் என்று அந்த மாநில மக்கள் உறுதியான முடிவு எடுத்திருக்கின்றனர்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

அவரது இந்த கருத்து மூலம் மராட்டிய மக்கள் மண்ணின் மைந்தர்களான சிவசேனாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவார்கள் என்று உத்தவ் தாக்கரே சூசகமாக கூறியதாக அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.