அரசியல் கட்சி பிரமுகரிடம் போலீசார் விசாரணை..

0 17

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை

சென்னையை அடுத்த மணலியை சேர்ந்தவர் முல்லை ஆர்.ஞானசேகர்(வயது 58). இவர், சென்னை மாநகராட்சி மணலி மண்டல 21–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார்.

கடந்த 9–ந்தேதி ஞானசேகர், மணலி பஸ் நிலையம் எதிரே உள்ள தனது நண்பரின் கடையில் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று கவுன்சிலர் ஞானசேகரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

அரசியல் கட்சி பிரமுகரிடம் விசாரணை

கொலை நடந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். சம்பவம் தொடர்பாக மாதவரம் பால்பண்ணை பகுதியில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி ஜெபக்குமார் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மணலி பெரிய தோப்பு சினிவாச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான விஜய் ஆனந்த்(32) என்பவரை போலீசார், காஞ்சீபுரம் அருகே உள்ள வாலாஜபாத் பகுதியில் பிடித்து விசாரணை செய்தனர்.

சிறையில் அடைப்பு

அப்போது போலீசாரிடம் அவர், மணலியில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலையின் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு உள்ள பல தனியார் கம்பெனிகளில் மாமுல் வசூலிக்க கவுன்சிலர் ஞானசேகர் தடையாக இருந்ததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்தார் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் முக்கிய அரசியல் கட்சிகளின் வட்ட செயலாளர்கள் சிலரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் விஜய் ஆனந்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.